231
எறிபுனக் குறவன் குறைய லன்ன
கரிபுற விறகி னீம வொள்ளழற்
குறுகினுங் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினு நீள்க பசுங்கதிர்த்
5திங்க ளன்ன வெண்குடை
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே.

திணையும் துறையும் அவை. (பி - ம். திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை.)

அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது (பி - ம். அவனை அவர் பாடியது)

(இ - ள்.) வெட்டிச்சுட்ட கொல்லைநிலத்துக் குறவனால் தறிக்கப்பட்ட துண்டம் போன்ற கரிந்த புறத்தையுடைய விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின்கண் எரிகின்ற ஒள்ளிய அழலின்கண் உடல் சுடச் சென்று அணுகினும் அணுகுக; அவ்வாறு அணுகாதுபோய் வறிதே ஆகாயத்தையுற ஓங்கினும் ஓங்குக; குளிர்ந்த சுடரையுடைய மதி போலும் வெண்கொற்றக் குடையையுடைய ஒள்ளிய ஞாயிற்றையொப்போனது புகழ்மாயா-எ - று.

ஈமமென்பது பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு.

இனி ஈமவொள்ளழல் இவனுடல் சிதையாமற் சிறுகினுஞ் சிறுகுக; அன்றிச் சிதையும்படி சென்று நீளினும் நீளுக; இவன் புகழ் மாயாவெனினும் அமையும்.

‘எரிபுனக் குறவன்’ என்று பாடமோதுவாரும் உளர்.


(கு - ரை.) 5. புறநா. 3: 1, 22 : 11- 2, 392 : 1.

2- 6.புறநா. 239 : 20 - 21.

(231)