235
சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
5பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
10அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
15அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப,் பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
20றீயாது வீயு முயிர்தவப் பலவே.

(பி - ம்.) 10 ‘அருங்கலை’ 10 - 11 ‘துளையிரப்போர்’ 12 ‘பார்வை’ 15 ‘திருநிறத்திலங்கிய’ 17 ‘பாடுநருக்கொன் றீயுநரும்’

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.

(இ - ள்.) சிறிய அளவினையுடைய மதுவைப் பெறின் எங்களுக்குத் தருவன்; அது கழிந்தது! பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின் அதனை யாமுண்டு பாட எஞ்சிய மதுவைத் தான் விரும்பி நுகர்வான்; அது கழிந்தது! சோறு எல்லார்க்கும் பொதுவாதலாற் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது! மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது! என்போடுகூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும் எங்களுக்கு அளிப்பன்; அது கழிந்தது! அம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய போர்க்களமுழுதும் தான் சென்றுநிற்பன்; அதுகழிந்ததே! தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான் நரந்தப்பூ நாறும் தன்னுடைய கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய தலையைத் தடவுவன்; அது கழிந்ததே! அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண் துளையையுருவி இரப்பவர் கையுளும் தைத்துருவித் தன்னாற் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்ணிற்பாவை ஒளிமழுங்க அழகிய சொல்லை ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய அறிவினையுடையோர் நாவின் கண்ணே போய் வீழ்ந்தது, அவனது அரிய மார்பத்தின்கண் தைத்த வேல்; எமக்குப் பற்றாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான் கொல்லோ? இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஒன்றீவாரும் இல்லை; குளிர்ச்சியையுடைய நீரையுடைய துறையின்கட் பகன்றையினது தேனைப் பொருந்திய பெரிய மலர் பிறராற் சூடப்படாது கழிந்தாற்போலப் பிறர்க்கு ஒரு பொருளைக் கொடுக்காது மாய்ந்துபோம் உயிர் மிகப்பல-எ - று.

அவன்நிறத்து உருவிய வேல் அவனுக்கு இறந்துபாட்டைச் செய்த லோடே பாணர் முதலாயினார்க்கும் இறந்துபாட்டினைச் செய்தலான் ஒரு காலத்தே யாவரிடத்தும் தைத்ததென்றாராகக் கொள்க.

மன் கழிவின்கண் வந்தது.


(கு - ரை.) 1. ‘மன்’ என்னும் இடைச்சொல் கழிவின்கண் வந்ததற்கு மேற்கோள் (தொல்.இடை. சூ. 4. இளம். சே. தெய்வச். கல். ந., நன். சூ. 431, மயிலை.; நன். வி.சூ. 432; இ. வி. சூ. 263, உரை); ‘சிறிய கட் பெறினே யெமக்கீயு மன்னே யென்புழி மன்னைச்சொல் இனி அது கழிந்ததென்னும் பொருள்குறித்து நின்றது காணென்றாற் பொருளுண ராதானை அரிதாகப் பெற்ற கள்ளை எக்காலமும் எமக்குத் தருகின்றவன் துறக்கத்துச் சேறலின் எமக்குக் கள்ளுண்டல் போயிற்றென்றல் இதன் பொருளெனத் தொடர்மொழிகூறிப் பொருளுணர்த்துக’ (தொல். உரி. சூ. 94, .); ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே யென்றது உளப்பாட்டுத் தன்மையும் படர்க்கையும்பற்றி வந்தது’ (தொல். எச்ச. சூ. 49,.); ஒரூஉவண்ணத்திற்கும் (தொல். செய். சூ. 288, பேர்.), அளவடிக்கும் (தொல். செய். சூ. 38, .) மேற்கோள்.
2. ‘பெரியகட்பெறினே : என இருசீரடி வந்ததாலெனின், அதனைச் சொற்சீரடியென்று களைக’, ‘பெரியகட் பெறினே : என்பது சொற்சீராகி அகவலுட்பயிலாது வந்தது’ (தொல். செய். சூ. 69, 215, பேர்.)

1 - 2. ஒரூஉவண்ணத்திற்கு மேற்கோள் ; தொல். செய். சூ. 227, .

1 - 3. ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே: என்பதன்கண் முதலடி நாற்சீரான் வந்தது; இரண்டாமடி ஆசிரியத்தளையொடு பொருந்தி அறுசீரடியாகி வந்தது’ (தொல். செய். சூ. 60, இளம்.)

4. நெடிலடிக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 38, ந.

4 - 5. ‘சிறுசோற்றானும்... ...கலத்தன்மன்னே: என்பன ஐஞ்சீரான் வந்த ஆசிரியவடி’ (தொல். செய். சூ. 63, பேர்.)

4 - 7. ‘சிறுசோற்றானு நனிபல கலத்தன் மன்னே: என்பது முதலாக நான்கடி ஆசிரியத்துள் ஐஞ்சீரடுக்கி வந்தன’ (தொல். செய். சூ. 63, .)

6 - 7. ஆசிரியத்துள் ஐஞ்சீரடி அருகி வந்ததற்கு மேற்கோள்; யா. வி.ஒழிபு. சூ. 2.

8 - 9. ‘நரந்தநாறும்...தைவருமன்னே: என முச்சீரடி இடையும் ஒன்று வந்ததாலெனின், தோற்றமென்றதனான் எருத்தடி முச்சீராய காலத்துக் குட்டம் பட்டும் இனிது விளங்கும்’, ‘நரந்தநாறும்...மன்னே: என்றவழி எண்சீராதலான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடு மன்றே தூக்கின்றாயி னென்பது’ (தொல். செய். சூ. 69, 87, பேர்.)

1 - 9. ‘இது பலவற்றின் நிலையாமைகூறி இரங்குதலின் மன்னைக் காஞ்சி என வேறு பெயர் கொடுத்தார்; இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற்பற்றியே வருமென்றற்கு மன் கூறினார்...சிறிய கட்பெறினே...மன்னே: என இப்புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருள் தந்தது’ (தொல். புறத்திணை. சூ. 24, .)

2 - 9. ‘இருசீர்முதல் ஐஞ்சீர்காறும் பரந்து பட்ட அகவலோசையை, பெரியகட் பெறினே எனச் சொற்சீரடியாகவும், யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே என அளவடியாகவும், நரந்த நாறுந் தன் கையால் எனச் சிந்தடியாகவும், சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே என நெடிலடியாகவும் தூக்குத்துணிந்தவாறு காண்க; இங்ஙனம் தூக்கின்றென, நரந்த நாறுந் தன்கையாற் புலவு, நாறு மென்றலை தைவரு மன்னே என்றதனை இரண்டு நாற்சீரடியாக அலகிட அகவலோசை பிறவாமை யுணர்க’ (தொல். செய். சூ. 87, .)

12. புரப்போர்: செயப்பாட்டு வினையாலணையும் பெயர்.

16.மு. புறநா. 307: 1; குறுந். 176:5, 325 : 4.

கொல் என்னும் இடைச்சொல் இரக்கங்குறித்து வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 420, மயிலை.

18. பகன்றை: புறநா. 16: 14; “பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்” (பதிற். 76: 12)

18 - 9. “அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும், கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ வன்மையால்“ (நாலடி. 262)

20. ‘தவ’ என்னும் உரிச்சொல் மிகுதியாகிய குறிப்பை யுணர்த்து வதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 93, சே.; . இ. வி. சூ. 281, 287, உரை

18 - 20. “பெய்யாது வைகிய கோதை போல, மெய்சாயினை“ (நற். 11: 1 - 2)

மு. காஞ்சித்திணைத்துறைகளுள் ‘இன்னனென் றிரங்கிய மன்னை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 19. இளம்.); ‘சிறிய கட் பெறினே... ...தவப் பலவே: இப்பதினேழடி ஆசிரியத்துள் ஏழாமடியும் பன்னிரண்டாமடியும் முச்சீரான் வந்தன;மூன்றாம் அடி முதலாக ஆறாம் அடி யீறாக நான்கடியும் பதினாலாம் அடியும் ஐஞ்சீரான் வந்தன; இரண்டாம் அடியும் பதினொன்றாம் அடியும் அறுசீரான் வந்தன; ஏனைய நான்கு சீரான் வந்தன; இவ்வாறு வருதலின் அடி மயங்காசிரியமாயிற்று’ (தொல். செய். சூ. 112, இளம்.); ‘சிறியகட் பெறினே...பலவே: இதனுள், நரந்த நாறுந்தன்கையால் எனவும், அருநிறத் தியங்கிய வேலே எனவும் தனித்து வந்தன; பெரியகட் பெறினே என்பது சொற்சீரடி; இதனைக் குறளடியாக்கிக் குறளடியும் வருமென்பர் பின்பு நூல்செய்த ஆசிரியர்’ (தொல். செய். சூ. 69, .); ‘சிறிய கட் பெறினே... ...பலவே: இதனுள் இருசீரும் முச்சீரும் இடையிடையே வந்தன’ (யா. வி. சூ. 19; யா. கா. செய். சூ. 3); ‘சிறிய கட்பெறினே யென்னும் இணைக் குறளாசிரியப் பாவினுள் ஐஞ்சீரடியும் அருகிவந்தனவெனக் கொள்க’ (யா. வி. செய். சூ. 40); ‘இருசீரடியும் முச்சீரடியும் இடையிடை வந்த இணைக்குறளாசிரியப் பாவிற்குச் செய்யுள்:-சிறிய கட்பெறினே......பலவே’ (இ. வி.சூ. 734, உரை); இளம்பூரணர் கொண்ட பாடப் பகுதி அகப்படாமையால், இச் செய்யுளை அவர் கருத்தின்படி 17 - அடியாகப் பிரித்தற்கு இயல வில்லை.

(235)