290
இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போர்
இனக்களிற் றியானை யியறேர்க் குருசில்
நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன்
5அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும்
உறைப்புழி யோலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.

(பி - ம்.) 1 ‘எற்கீத்து’ 2 ‘யியற்றேர்’5 ‘குடடினிதுனறுமநதனனே’ 7 ‘உறைப்பெயலோலை’ 8 ‘மறைவல......கரந்தை’

திணை - கரந்தை; துறை - குடிநிலையுரைத்தல்.

ஒளவையார்.


(கு - ரை.) 1. “ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே” என்னுஞ் சூத்திர வுரையில் இவ்வடியை மேற்கோளாகக் காட்டி, ‘இவனென்பது முன்னிலையும் படர்க்கையுமென்று உணர்க’ என்பர் நச்சினார்க்கினியர்; தொல். எச்ச. சூ. 49.

2. களிற்றியானை - ஆண்யானை. இயல் தேர் - செல்லுகின்ற தேர். குருசில் : விளி.

3. நுந்தை தந்தைக்கு - நின் பாட்டனுக்கு.

4. எடுத்தெறி ஞாட்பு - படைக்கலங்களை எடுத்தெறியும் போரில். இமையான் - கண்ணிமையானாய்; “விழித்தகண் வேல்கொண்டெறிய வழித்திமைப்பின், ஓட்டன்றோ வன்க ணவர்க்கு” (குறள், 775)

5. குறட்டின் - உருளையின் குடம்போல; புறநா. 283 : 8.

6. மறப்புகழ் - வீரத்தால் வரும் கீர்த்தி; “மறம்வீங்கு பல்புகழ்” (பதிற். 12 : 8)

7. உறைப்புழி ஓலைபோல - மழை பெய்யுமிடத்து அம்மழைத்துளிகள் மேலே வீழாதபடி காக்கும் குடையைப்போல; ஓலை - தாழை; தென்னை, பனை இவற்றின் மடல்;இங்கே குடைக்கு ஆகுபெயர்.

‘உழி’ என்பது இடப்பொருளுருபாய் வருதற்கு இவ்வடி மேற்கோள்;நன். சூ. 301, மயிலை.; நன். வி. சூ. 302.

6 - 8. இவன் மறைக்குவன் - இவன் வேல் உன்மீது படாதபடி தடுத்தற்கு முயலுவான்; இதனை, “இலக்கு வற்குமுன் வீடணன் புகுமிரு வரையும், விலக்கி யங்கதன் மேற்செலு மவனையும் விலக்கிக், கலக்கும் வானரக் காவல னநுமன்முன் கடுக, அலக்க ணன்னதை யின்னதென் றுரைசெய லாமே” (கம்ப. வேலேற்று. 31)என்பதனாலும் உணர்க.

7 - 8. குடும்பத்தைக் குற்றமறைப்பானென்னும் இடத்துத் தன் குடியைத் துன்பமுறாமற் காக்க முயல்வானென்று பொருள்கூறி, ‘உறைப்புழி.........வேலே என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று’ என்பர் பரிமேலழகர்; குறள், 1029.

மு. “முந்தை முதல்வர் துடிய ரிவன்முதல்வர், எந்தைக்குத் தந்தை யிவனெனக்கு - வந்த, குடியொடு கோடா மரபினோற் கின்னும், வடியுறு தீந்தேறல் வாக்கு” (பு. வெ. 19) என்பதை இச்செய்யுள் நினைப்பிக்கின்றது.

இது, தார்நிலையின்பாற்படுமென்பர்; தொல். புறத்திணை. சூ. 17, ந.