87
களம்புக லோம்புமின் றெவ்விர்போரெதிர்ந்
தெம்முளு முளனொரு பொருநன் வைகல்
எண்டேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே.

திணை - தும்பை; துறை - தானைமறம்.

அதியமான் நெடுமான் அஞ்சி (பி -ம். அதிகமானெடுமான் வஞ்சி)யை ஒளவையார் பாடியது.

(இ - ள்.) போர்க்களத்தின்கட்புகுதலைப் போற்றுமின், பகைவிர்! போரின்கண் மாறுபட்டு,எங்களுள் வைத்தும் ஒருவீரன் உளன்; ஒருநாள் எட்டுத்தேரைச்செய்யுந் தச்சன் ஒருமாதங்கூடிக் கருதிச் செய்யப்பட்டதொரு1 தேர்க்காலையொப்பன்-எ - று.

போரெதிர்ந்து களம்புகலோம்புமின்,எம்முளும் உளனெனக் கூட்டுக.

எம்முளுமென்ற உம்மை சிறப்பும்மை.

தேர்க்காலோடு உவமை 2விரைவும் திண்மையுமாகக் கொள்க.


(கு - ரை.) தெவ்விர் - பகைவீர்;தெவ் - பகை; புறநா. 170 : 9.

மு. வாகைத்திணையின் துறைகளுள்ஒன்றாகிய, ‘அரும்பகை தாங்கு மாற்றல்’ என்பதற்குமேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 17, இளம்;சூ. 21, ந.

(87)


1. தேர்க்கால் - தேர்ச்சக்கரம்; புறநா.32 ; 8 ; “கால்வறேர் கையினியக்கி” (கலித்.81 : 8)

2. விரைவு : “கடுவரை நீரிற் கடுத்துவரக்கண்டும்” (பு. வெ. 11)