89
இழையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல்
மடவர லுண்கண் வாணுதல் விறலி
பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
வினவ லானாப் பொருபடை வேந்தே
5எறிகோ லஞ்சா வரவி னன்ன
சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று
பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோ ரென்னு மென்னையு முளனே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) மணிக்கோவையாகியஅணியாற் பொலிந்த ஏந்திய பக்கத்தையுடைய அல்குலினையும்மடப்பத்தினையும் மையுண்ட கண்ணினையும் ஒளிதங்கியநுதலினையுமுடைய விறலி! என்னோடு பொருவாருமுளரோநும்முடைய பெரிய இடத்தினையுடைய நாட்டின்கண்ணெனஎன்னைக் கேட்டலமையாத செருச்செய்யுந் தானையையுடையவேந்தே! நீ போர்செய்யக் கருதுவையாயின், எம்முடையநாட்டின்கண்ணே அடிக்குங் கோலுக்கு அஞ்சாது எதிர்மண்டும்பாம்புபோன்ற இளைய வலியவீரருமுளர்: அதுவேயன்றி,மன்றின்கண் தூங்கும் பிணிப்புற்ற முழவினது காற்றெறிந்ததெளிந்த ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக்கேட்பின்,அது போர்ப்பறையென்று மகிழும் என்னுடைய தலைவனும்உளன்-எ - று.

‘தெண்கண்’ என்றது அதன்கண்ஓசையை.

போரென்றது போர்ப்பறையை.


(கு - ரை.) 2. “மடவரல் வள்ளி”(முருகு. 102); மடவரன் மகளிர்” (பெரும்பாண். 387)

3. நாடு - இங்கே அதிகமானாடு.

4. வினவலானா : புறநா. 70 : 5; “வினவலானாப் புனையிழை” (அகநா. 29 : 14)

5-6. “அராவ ழன்ற தனையதன் னாற்றலால்”,“அரவியற் றறு கண்வன் றாளாள்”, “மூரி வெஞ்சிலையிராவண னராவென முனிந்தான்” (கம்ப. கரன்வதை.184, முதற்போர். 151, 239); கதையிற்றாக்கப் படுமர வென்னப்பொங்கி” (காஞ்சிப். பரசிராம. 31)

8. வளி பொருதெண்கண் - காற்று அடித்தலால்தெள்ளிய கண்ணிலிருந்து உண்டாகிய ஓசை.

7-8. புறநா. 138 : 2 - 3.

9. புறநா. 31 ; 9, 279 : 7.

(89)