93
திண்பிணி முரச மிழுமென முழங்கச்
சென்றமர் கடத்தல் யாவது வந்தோர்
தார்தாங் குதலு மாற்றார் வெடிபட்
டோடன் மரீஇய பீடின் மன்னர்
5நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி
மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
10நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென
வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ
வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்
தண்ணல் யானை யடுகளத் தொழிய
அருஞ்சமந் ததைய நூறிநீ
15பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே.

(பி - ம்.) 9 ‘வாளமர்’

திணை - வாகை; துறை - அரசவாகை.

அவன் பொருது புண்பட்டுநின்றோனை அவர்பாடியது.

(இ - ள்.) திண்ணிய பிணிப்பையுடைய முரசம் இழுமென்னும் ஓசையையுடைத்தாய் ஒலிப்ப மேற்சென்று போரைவெல்லுதல் இனி எங்கேயுள்ளது? நின்னோடு எதிர்ந்துவந்தோர், நினது தூசிப்படையைப் பொறுத்தற்கும் மாட்டாராய்ச் சிதறிக் கெட்டுப்போகலிலே மருவிய பெருமையில்லாத அரசரது நோயின்பக்கத்தான் இறந்த உடம்பை யணைத்துத் தமது ஆசைத்தன்மையை மறந்து அவர் வாளாற்படாத குற்றம் அவரிடத்தினின்றும் நீக்கவேண்டி அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்குவேதத்தையுமுடைய அந்தணர் நல்ல கூற்றிலே பொருந்திய பசிய
தருப்பைப்புல்லைப் பரப்பினராய்க் கிடத்தித் தமது ஆண்மையே பற்றுக்கோடாக நல்ல பூசலிலே பட்ட மேம்பட்ட வீரக் கழலினையுடைய வேந்தர் செல்லும் உலகத்திலே செல்கவென்று வாளோக்கியடக்கும் இழிதகவும் பிழைத்தார்கள், வரியையுடைய தேனீ ஒலிக்கும் வாயின்கண்வந்து புகுகின்ற மதத்தினையுடைய தலைமை பொருந்திய யானை போர்க்களத்தின்கண்ணே படப் பொறுத்தற்கரிய பூசற்கண்ணே சிதற வெட்டி, பெரிய தகைமையையுடையாய்! நீ சீரிய புண்பட்டபடியால்-எ - று.

பெருந்தகாய்! நீ அருஞ்சமம் ததையநூறி விழுப்புண்பட்டவாற்றால் நின்னோடு எதிர்த்து வந்தோர்தாம் பீடின்மன்னர் விளிந்த யாக்கை தழீஇ நீள்கழன்மன்னர் செல்வுழிச்செல்கென வாள்போழ்ந்தடக்கலும் உய்ந்தனராதலின், இனி நின்னோடு எதிர்ப்பார் இன்மையின், முரசு முழங்கச் சென்று அமர்கடத்தல் யாவதெனக் கூட்டுக.
சென்றமர் கடத்தல் யாவதென்றதனானும் வாள்போழ்ந்தடக்கலும் உய்ந்தனரென்றதனானும் வந்தோர் பட்டமை விளங்கும்.

1இன்னும் இதற்கு நின் வாளாற் பட்டுத் துறக்கம் பெற்றதேயன்றி வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனராகலின், அவர்க்குப் பிறர்மேற் சென்று அமர்கடத்தல் என்ன பயனுடைத்தென்றுரைப்பினும் அமையும்.

இனி, வந்தோராகிய மன்னர் நீ விழுப்புண்பட்டபடியாலே வாள் போழ்ந்தடக்கலும் உய்ந்தார்; இனி நின்னோடு எதிர்ப்பாரின்மையின் மேற்சென்று அமர்கடத்தல் யாவதெனக்கூட்டி அதற்கேற்ப உரைப்பாரும் உளர்.

தார்தாங்கலுமென்ற உம்மை இழிவுசிறப்பு.

வாள்போழ்ந்தடக்கலுமென்பது, நினக்குத் தொலைந்தாரென்னும் இழிதகவேயன்றித் தமர் வாள்போழ்ந்தடக்கும் இழிவையும் உய்ந்தனரென எச்சவும்மையாய் நின்றது.


(கு - ரை.) 1. "ஏம முரச மிழுமென முழங்க" (புறநா. 3 : 3)

2. சென்றமர் கடத்தல் : புறநா. 66 : 4. யாவது : 62 : 1.

3. வெடிபட்டு - சிதறி.

7. முருகு. 180.

9. நன். சூ. 451, மயிலை. மேற்.

10. செல்வுழிச் செல்க : நன். சூ. 163, வி :இ - வி.சூ. 68, உரை, மேற்.

10 - 11. நன். 228, மயிலை; இ - வி. சூ. 139, உரை, மேற்.

8 - 11. புறநா. 74 : 1 - 2, குறிப்புரை.

12. வாய்புகுகடாம் : "வாயிழி கடாத்த வான்மருப் பொருத்தல்" (கலித். 46 : 3); " நாகம் வாய்வழி கடாத்த தாகி" (சீவக. 753)

11 - 2. வண்டுபடு பூநாறு கடாஅஞ் செருக்கி" (மணி. 19 : 21-2)

12 - 3. புறநா. 22 : 6; "வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிறு" (அகநா. 78 : 3 - 4) ; "வரிவண்டார்க்கும் வாய்புகு கடாஅத்த, அண்ணல் யானை" (தொல். களவியல், சூ. 11, ந. "எண்ணியது"); "சுரும்புணக் களித்த புகர்முக வேழம்" (ஐங்குறு. 239); "வரிவண் டோங்குய ரெழில்யானைக் கனைகடாம்" (கலித். 66 : 2 - 3); "தண்மதந் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்" (சீவக. 2313)

15. விழுப்புண் - முகத்தினும் மார்பினும் பட்ட புண்; குறள். 776, பரிமேல்.

மு. வஞ்சித்திணைத்துறைகளுள், 'அடுத்தூர்ந்தட்ட கொற்றம்' என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 7, இளம்.

(93)


1. இப்பொருள், "நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு, மாற்றாரென்னும் பெயர்பெற், றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே" (புறநா. 26 : 16 - 8) என்பதை நினைப்பிக்கின்றது.