97
போர்க்குரைஇப் புகன்றுகழித்தவாள்
உடன்றவர்காப்புடை மதிலழித்தலின்
ஊனுற மூழ்கி யுருவிழந் தனவே
வேலே, குறும்படைந்த வரண்கடந்தவர்
5நறுங்கள்ளி னாடுநைத்தலிற்
சுரைதழீஇய விருங்காழொடு
மடைகலங்கி நிலைதிரிந்தனவே
களிறே, எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர்
குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலிற்
10பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம்பைந்தார் கெடப்பரிதலிற்
களனுழந் தசைஇய மறுக்குளம் பினவே
அவன்றானும், நிலந்திரைக்குங் கடற்றானைப்
15பொலந்தும்பைக் கழற்பாண்டிற்
கணைபொருத துளைத்தோ லன்னே
ஆயிடை, உடன்றோ ருய்தல் யாவது தடந்தாட்
பிணிக்கதிர் நெல்லின் செம்மன் மூதூர்
நுமக்குரித் தாகல் வேண்டிற் சென்றவற்
20கிறுக்கல் வேண்டுந் திறையே மறுப்பின்
ஒல்வா னல்லன் வெல்போ ரானெனச்
சொல்லவுந் தேறீ ராயின் மெல்லியற்
கழற்கனி வகுத்த துணைச்சில் லோதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
25இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே.

(பி - ம்.) 9 ‘குரூஉக்களிற்றுக்’

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சியை அவர் பாடியது.

(இ - ள்.) போரைச்செய்தற்குப் புடைபெயர்ந்து உலாவி விரும்பி உறைகழித்த வாள்கள்தாம், பகைத்தவரது காவலையுடைய அரணை யழித்தலால் அவர்தசையின்கண்ணே உறக்குளித்துக் 1கதுவாய்போய் வடிவிழந்தன; அவன் வேல்கள்தாம், குறும்பர்சேர்ந்த அரண்களை வென்று அப்பகைவரது நறிய மதுவையுடைய நாட்டையழித்தலாற் சுரையோடு பொருந்திய கரிய காம்புடனே ஆணிகலங்கி நிலைகெட்டன; அவன்களிறுதாம், கணையமரத்தால் தடுக்கப்பட்ட கதவைப்பொருது அப்பகைவரது திரண்ட களிற்றையுடைய அரணையழித்தலாற் பரிய பிணித்தலையுடையவாகிய கிம்புரிகள் கழன்றன; அவன்குதிரைதாம், பரந்துவந்து ஒக்கப் பொருத வீரரது பொன்னாற் செய்யப்பட்ட பசிய மாலையையுடைய மார்பு உருவழிய ஓடுதலாற் போர்க்களத்தின்கட் பொருது வருந்திய குருதியான் மறுப்பட்ட குளம்பையுடையவாயின; அவன்தானும், நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்கும் கடல்போன்ற படையுடனே பொன்னானியன்ற தும்பைக் கண்ணியையுடைய, கழல்வடிவாகவும் கிண்ணிவடிவாகவும் செய்து செறிக்கப்பட்டு அம்புபடுதலால் துளைபட்ட பரிசையையுடையன்; அவ்விடத்து அவனால் வெகுளப்பட்டோர் பிழைத்தல் எங்கேயுள்ளது? 2பெரியதாளினையும் ஒன்றோடொன்று தெற்றிக்கிடக்கின்ற கதிரினையுமுடைத்தாகிய நெல்லினையுடைய தலைமை பொருந்திய பழையவூர் நுங்கட்கு உரித்தாக வேண்டுவிராயிற் போய் அவனுக்குத் திறைகொடுத்தல் வேண்டும்; கொடீராயின், அதற்கு உடம்படுவானல்லன் வெல்லும் பூசலையுடையானென்று யான்சொல்லவும் தெளியீராயின், நுமக்கு, மெல்லிய தன்மையையும் கழன்மணியினது கனியால் கூறுபடுத்துச் சுருட்டப்பட்ட இனமாகிய சிலவாகிய பனிச்சையையும் குறிய வளையையுமுடைய உரிமைமகளிரது தோளைப் பிரிந்துறைதல் வியப்பன்று; அதனை யறிந்து போர்செய்ம்மின்-எ - று.

அறிந்தாடுமினென்ற கருத்து, அறியிற் போர்செய்தல் அரிதென்பதாம். குறும்பு - சிற்றரண்.

கடற்றானையினையும், பொலந்தும்பையினையுமுடைய அவன்றானு மென்க.


(கு - ரை.) 4. குறும்பு - அரண் ; அதிலுள்ளவர்க்கானமையின் ஆகுபெயர்.

4 - 7. "மடையமை திண்சுரை மாக்காழ்வேல்", "மாக்காழ் நெடுவேல்" (அகநா. 119, 369); "காழ்மண் டெஃகம்" (மதுரைக். 739; மலைபடு. 129)

6. சுரை - உட்டுளையையுடைய இரும்பு.

8 - 9. புறநா. 3 : 9 - 11, 4 : 10 - 11.

ழகரஉகரவீற்றுச்சொற்கள் நீண்டு உகரம் பெறுதற்கு மேற்கோள்; தொல். உயிர்மயங்கு. சூ. 59, ந; இ - வி.சூ. 95, உரை.

8 - 10. "கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை", "பெருங்கதவு பொருத யானை மருப்பின், இரும்புசெய் தொடியி னேர வாகி", "அடுகளம் பாய்ந்த
தொடிசிதை மருப்பிற், பிடிமிடை களிற்றிற்றோன்றும்" (அகநா. 24 : 11 - 3, 26 : 6 - 7. 99 : 12 - 3)

11 - 3. புறநா. 98 : 5 - 7.

12. தார் - மார்பு; ஆகுபெயர்.

14. "நிலந்திரைத்தானை" (சிலப். 26 : 187); "நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே" (பதிற். விட்டுப் போன பகுதி, 1 : 10)

15. புறத்திணைமாலை பொன்னாற் செய்யப்படல் : புறநா. 22 : 20.

16.புறநா. 4 : 5.

17. "கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும், செழுங்கூடு கிளைத்த
விளந்துணை மகாரின், அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே" (பதிற். 71 : 6 - 8)

18 - 20. புறநா. 51 : 6 - 7. பிணிக்கதிர் - பிணித்தலையுடைய கதிர். செம்மல் - தலைமை. திறை - கப்பம்.

(97)


1. கதுவாய்போய் - வடுமிக்கு (பெருங். 1. 35 : 166, குறிப்புரை); "அரக்கன் கதுவாய்த் தலைகள்பத் தலறியிடக் கண்டான்", "கதுவாய்த் தலையிற் பலிநீகொள்ளக் கண்டாலடியார் கவலாரோ" (தேவாரம்)

2. தடவென்பதற்கு வளைவெனப் பொருள்கொண்டு, கதிர்க்கனத்தாலே வளைந்த தாளெனலுமாம்; "முடந்தைநெல்" (பதிற், 26; 3, 32 : 13)