99
அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்
அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்
நீரக விருக்கை யாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர் போல
5ஈகையங் கழற்கா லிரும்பனம் புடையற்
பூவார் காவிற் புனிற்றுப்புலா னெடுவேல்
எழுபொறி நாட்டத் தெழாஅத் தாயம்
வழுவின் றெய்தியு மமையாய் செருவேட்
டிமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச்
10சென்றமர் கடந்துநின் னாற்ற றோற்றிய
அன்றும் பாடுநர்க் கரியை யின்றும்
பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரணடு திகிரி யேந்திய தோளே.

(பி - ம்.) ‘பேணியாகுதி’

திணையும் துறையும் அவை.

அவன் கோவலூரெறிந்தானை அவர் பாடியது.

(இ - ள்.) தேவர்களைப் போற்றி வழிபட்டும் அவர்களுக்கு வேள்விக் கண் ஆவுதியை அருந்துவித்தும் பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத்தினின்று இவ்வுலகத்தின்கட் கொடுவந்துதந்தும் கடலுக்குட்பட்ட நிலத்தின்கண்ணே சக்கரத்தை நடாத்திய பழைய நிலைமைபொருந்திய முறைமையையுடைய நின்குடியிற் பழையோரை யொப்பப் பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்த காலினையும், பெரிய பனந்தோடாகிய தாரினையும் பூநிறைந்த காவினையும் நாடோறும் புதிய ஈரம்புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய ஏழிலாஞ் சனையும் நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையைத் தப் பின்றாகப் பெற்றும் அமையாயாய்ப் போரைவிரும்பி ஒலிக்கும் ஓசை பொருந்திய முரசினையுடைய ஏழரசரோடு பகைத்து மேற்சென்று போரின்கண் வென்று நின்வலியைத்தோற்றுவித்த அற்றைநாளும் பாடுவார்க்குப் பாட அரியை; இற்றைநாளும் பரணன்பாடினன், நீ மாறுபாடு மிக்க கோவலூரை அழித்துவென்று பிறவும் அரண்களை அழிக்கின்ற ஆழியைத் தாங்கிய நினதுதோளை-எ - று.

இன்றும் பரணன்பாடினனென்றது, 1அவனும் தன்பெருமையாற் பாடினான்; பிறராற் பாடப்படுதலரிதென்றதாம்.

நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கு அரியை; திகிரியேந்திய தோளை இன்றும் பரணன் பாடினனெனக் கூட்டுக.

கழற்காலையும் புடையலையும் காவையும் வேலையுமுடைய நின்முன் னோர் போலத் தாயமெய்தியும் அமையாயென மாறிக்கூட்டுக.

நாடுதல் - ஆய்தல்.

'மூவரொடு முரணி' என்றும், 'முரணடுதிகிரி' என்றும் பாடம்.

கொல் : ஐயம். மன் : அசைநிலை.

பூவார் கா - வானோர் இவன் முன்னோர்க்கு வரங்கொடுத்தற்கு வந்திருந்ததொரு கா.

இவனுக்குப் பனந்தார்கூறியது, சேரமாற்கு உறவாதலின் (பி - ம்உதியவேந்தாதலின்)

எழுபொறிநாட்டமென்பதற்கு ஏழரசர்நாடுங்கூடி ஒருநாடாய் அவ் வேழரசர் பொறியும் கூடிய பொறியோடு கூடிநின்று நன்மையும் தீமையும் ஆராய்தலெனினும் அமையும்.


(கு - ரை.) 1. மு. பட்டினப். 200, ஞானாமிர்தம், 17.

பேணென்னும் உரிச்சொல் பெட்பின்பொருளில் வருதற்கு மேற்கோள் : தொல். உரி. சூ. 42, தெய்வச்.; சே.; சூ. 40, ந; இ - வி. சூ. 281, உரை.

2. இவன் முன்னோர் விண்ணுலகத்திலிருந்து இவ்வுலகத்திற்குக் கரும்பைக்கொண்டு வந்தனரென்பது புறநா. 392 : 19 - 21 ஆம் அடிகளாலும் அறியப்படும்.

3. நீரக இருக்கை - பூமி.

5. ஈகை - பொன்; புறநா. 353 : 3. புடையல் - மாலை; "மாயிரும் புடையன் மாக்கழல் புனைந்து", "இரும்பனம் புடைய லீகை வான்கழல்", "இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்ப", புடையலங்கழற்கால்" (பதிற். 37 : 8, 42 : 1, 57 : 2, 80 : 7); "புடையலங் கழற்கால்" (அகநா. 295 : 13)

7. எழுபொறி - ஏழிலாஞ்சனை; இவை ஏழரசர்க்குரியன; இது, "கேழன் மேழிகலை யாளி வீணைசிலை கெண்டை யென்றினைய பல்கொடி" (கலிங்கத். கடவுள். 18) என்பதனாலும் ஒருவாறு விளங்குகின்றது.

(99)


1. இங்கே பரணரைப் பாராட்டிக் கூறியதுபோல, புறநா. 53 : 11 - 3 ஆம் அடிகளிற் கபிலரைப் பாராட்டிக் கூறியிருத்தல் கருதற்பாலது.