182
உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்
அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்
தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
5புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே.

திணை - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி.

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி பாட்டு.

(இ - ள்.) உண்டேகாண் இவ்வுலகம்;இந்திரர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தானாதல்தவத்தானாதல் தமக்கு வந்துகூடுவதாயினும் அதனை இனிதென்றுகொண்டு தனித்து உண்டலுமிலர்; யாரோடும்வெறுப்பிலர்;பிறர் அஞ்சத்தகுந் துன்பத்திற்குத் தாமும் அஞ்சிஅதுதீர்த்தற் பொருட்டு மடிந்திருத்தலுமிலர்; (மடிந்திருத்தல்- சோம்பியிருத்தல்) புகழ்கிடைக்கின் தம்முடையஉயிரையுங்கொடுப்பர்; பழியெனின் அதனான் உலகமுழுதும்பெறினும் கொள்ளார்; மனக்கவற்சி யில்லார்; அப்பெற்றித்தாகியமாட்சிமைப்பட்ட அத்தன்மையராகித் தமக்கென்றுமுயலாத வலிய முயற்சியையுடைய பிறர்பொருட்டென முயல்வார்உண்டாதலான்-எ - று.

அஞ்சித் துஞ்சலுமிலரென மாறிக்கூட்டுக.

இவ்வுலகம், பிறர்க்கெனமுயலுநருண்மையான்உண்டெனக்கூட்டுக.

ஆலும் அம்மவும், அசை.


(கு - ரை.) 1. ‘அம்ம’ என்னும்இடைச்சொல் அசைநிலையாக வந்ததற்கு மேற்கோள்; தொல்.இடை சூ. 27, தெய்வச்.

1 - 2. “இந்திரர்க்கும் புகழ்வரிதே”(சீவக. 173)

‘இந்திர குமரர்’ என்பதற்குத் தேவகுமரரென்றுபொருள்கூறி இவ்வடிகளை மேற்கோள் காட்டினர்; சிலப்.16 : 172, அடியார்.

2 - 3. “இனியவை பெறினே தனிதனிநுகர்கேம்” (பதிற். 38); “மருந்தே யாயினும்விருந்தோ டுண்க” (கொன்றைவேந்தன்)

4. “அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ,தஞ்ச லறிவார் தொழில்” (குறள், 428); “அறிவதறிந்தடங்கி யஞ்சுவ தஞ்சி, யுறுவ துலகுவப்பச் செய்து- பெறுவதனா, லின்புற்று வாழு மியல்பினா ரெஞ்ஞான்றுந்,துன்புற்று வாழ்த லரிது” (நாலடி. 74)

5 - 6. “வாணன் வைத்த விழுநிதிபெறினும், பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி, ஈதலுள்ளமொ டிசைவேட் குவையே” (மதுரைக். 203 - 5);“அடிபிறக்கிடி லமரர்த முலகொடிவ் வுலகு கைப்படுமெனினுமதொழிபவர்....உயிரை விற்றுறு புகழ்கொள வுழல்பவர்”(கலிங்கத். 340). கலித். 114 : 19 - 21.

8. “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளள்” (அகநா. 54; மணி. 5 : 73)

9. “பிறர்க்கற முயலும் பெரியோய்”(மணி. 11 : 63)

8 - 9. “தன்னுயிர்க் கிரங்கான்பிறவுயி ரோம்பு, மன்னுயிர் முதல்வன்” (மணி.25 : 116 - 7); “தனக்கென், றொன்றானு முள்ளான் பிறர்க்கேயுறுதிக் குழந்தான்” (குண்டல. கடவுள்.)

மு. பகட்டினானும் ஆவினானும் துகட்டபுசிறப்பிற் சான்றோர் பக்கமென்பதற்கு இச்செய்யுளைமேற்கோள்காட்டி, நோன்றாட் பிறர்க்கெனமுயலுநர் வணிகவேளாளரென்பர் இளம்பூரணர்,(தொல்.புறத்திணை. சூ. 17); ‘உண்டாலம்ம.......உண்மையானே; இது,வகைபட முன்னோர் கூறிய செந்துறைப் பாடாண்பாட்டு;முனிவர் கூறுமாறுபோலக் கூறிப் பரவலும்புகழ்ச்சியுங் கூறாது மறுமைப்பயன் பிறர்க்கு உறுதிபயப்பக் கூறலிற் கைக்கிளைப்புறனாய்ப்பாடாணாயிற்று (தொல். புறத்திணை. சூ. 27, ந.)

(182)