105
சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினு மருவி
5 கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக
மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்
நீரினு மினிய சாயற்
பாரி வேள்பாற் பாடினை செலினே.

திணை - பாடாண்டிணை; துறை - விறலியாற்றுப்படை.

வேள்பாரியைக் கபிலர் பாடியது.

(இ - ள்.) சிவந்த அணியைப்பெறுகுவை, ஒளிதங்கிய நுதலினையுடைய விறலி! பெரிய இடத்தையுடைய 1சுனையின்கண் தழைத்த கரிய இதழையுடைய நீலத்தினது வண்டுமொய்க்கும் புதியமலரின்கட்குளிர்ந்த துளி கலக்க மழைபெய்யினும் பெய்யாதொழியினும் அருவி கொள்ளிற்கு உழுத பரந்தநிலத்திடை நீரோடுகாலாக ஓடக் 2கண்ணேணியையுடைய நெடியமலையினது சிகரந்தோறும் இழிதரும் நீரினும் மிக இனிய மென்மையையுடைய வேள் 3பாரிபக்கலே நீ பாடிச்செல்லின்-எ - று.

விறலி! பாரிவேள்பாற் பாடினை செலின், சேயிழை பெறுகுவையெனக் கூட்டுக.

அவன்மலையாதலால், எக்காலமும் அருவி கோடுதோறிழிதரு மெனப்பட்டது.

புதுமலர்த் தண்சிதர் கலாவப்பெய்யினும் பெய்யாதாயினும் உழை காலாகக் கோடுதோறிழிதரும் அருவிநீரினும் இனியவென இயையும்.

எனவே அவன் குணங்கள் தோன்றிநின்றன.


(கு - ரை.) 1. விறலிஇழைபெறுதல் : புறநா. 11 : 11 - 7, குறிப்புரை; “செல்லா யோதில் சில்வளை விறலி, மலர்ந்த வேங்கையின் வயங்கிழை யணிந்து, மெல்லியன் மகளி ரெழினலஞ் சிறப்ப" (பதிற். 40 : 21 - 3)

2. தடவு - தாழியுமாம்; "தாழியுண் மலர்ந்த தண்செங் குவளை" (பெருங். 3. 5 : 87); "தாழிவாய்க் குவளை", "தாழிவாய் மறைக்குந் தண்ணென் றடம்பெருங் குவளைக் கண்ணார்" (சீவக. 833, 2974); "தாழிவாய்க் குவளையும்" (சூளா. நகரச். 9); "தாழிநறுங் குவளையந் தார்த் தருமன்" (வி. பா. வசந்தகால. 18). தடவுவாய் : அன்மொழித்தொகை.

3. கலாவ - காரியப் பொருட்டு.

6. மால்பு : "கலைகை யற்ற காண்பி னெடுவரை, நிலைபெய் திட்ட மால்புநெறி யாக" (மலைபடு. 315 - 6); "ஈவிளை யாட நறவிளைவோர்ந்தெமர் மால்பியற்றும், வேய்விளை யாடும்வெற்பா" (திருச்சிற். 133)

6 - 7. "பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்" (குறுந். 196) : "பாரி தீம்பெரும் பைஞ்சுனை பூத்த, தேங்கமழ் புதுமலர்" (அகநா. 78)

7 - 8. "வானி நீரினுந் தீந்தண் சாயலன்" (பதிற். 86); "தன்மலை, நீரினுஞ் சாய லுடையன்", "வேனிற் புனலன்ன நுந்தை" (கலித், 42, 84); "புனலஞ் சாயல்.......நன்னன்" (மலைபடு. 61 - 4)

மு. புறநா. 109 : 16 - 8, 111, 128 : 5 - 7, 158 : 1 - 4, 337 : 6 - 7.
விறலியாற்றுப்படைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, 91, ந.

(105)


1. புறநா. 116 : 1, குறிப்புரை.

2. கண்ணேணி - கணுக்களிலேயே அடிவைத்து ஏறிச் செல்லும்படி அமைத்துள்ள மூங்கில்.

3. பாரியின்பெருமையை, "கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங்கொடுப் பாரிலை" (தே. சுந்தர.), "களியானை செம்பொன்றரும், பாரி" (தஞ்சை. 37), "பன்னாக மாமணி பாவலர்க் கீந்திடும் பாரி" (கரவைவேலன் கோவை, 113) என்பவற்றாலும் உணர்க.