108
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆர மாதலி னம்புகை யயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு
5பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னா னவர்வரை யன்னே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) குறத்தி மடுத்தெரிக்கப்பட்ட வற்றிய கடைக்கொள்ளி சந்தனமாதலால் அதன் அழகியதாகிய புகை அதற்கு அருகாகிய சாரற்கண் வேங்கையின் பூங்கொம்பின்கட் பரக்கும் பறம்பு பாடுவார்க்குக் கூறிட்டுக்கொடுத்தலின் அவருடையதாயிற்று; தன்மத்தைப் பரித்துப் பாரியும் பரிசிலர் வேண்டுவாராயின் அவ்வழி வாரேனென்னானாய் அவ ரெல்லையின்கண்ணே நிற்பன்-எ - று.

சந்தனப்புகை வேங்கையின்மிசைத் தவழும் பறம்பெனவே, 1இவையொழிய மரமின்மையும், பகைவர்சுடும் புகையின்மையும் கூறிய வாறாயிற்று,


(கு - ரை.) 2.புறநா. 320 : 12.

1 - 2. "சாந்த விறகி னுவித்த புன்கம்" (புறநா. 168 : 11)

1 - 3. "புனத்து, வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே, எறிபுனந் தீப்பட்டக் கால்" (நாலடி. 180)

4-6. "அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார், என்புமுரியர் பிறர்க்கு" (குறள், 72)

5 - 6. "தம்மை மாறியும் புரிவது தருமமந் நாடு" (திருவிளை. நாட்டு. 59)

பகைவர் சுடுதலை, 'எரிபரந்தெடுத்தல்' என்னும் துறையென்று தொல்காப்பியரும், ஊர்கொலை உழபுலவஞ்சி முதலிய துறைகளின்பாற் படுமென்று ஐயனாரிதனாருங்கூறுவர்.

(108)


1.'சாந்தம் ஏறாதென்றது, மரமாயிற் சாந்தமே உள்ளதென்று' (அகநா. 2 : 6, உரை); 'கொன்றையே என்ற ஏகாரத்தால் மற்ற விருட்சங்களுள் ஒன்றுமின்று என்றவாறு', 'சந்தனத்தையும் அகிலையும் காடென்று விருத்தியிட்டது; நீ எழுந்தருளியிருக்கும் அவ்வனத்தில் மற்று விருட்சமில்லை' (தக்க. 62, 228, உரை)