109
அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
5இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
10மீன்க ணற்றதன் சுனையே யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்
யானறி குவனது கொள்ளு மாறே
15சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்று மொருங்கீ யும்மே.

(பி - ம்.) 2 ‘முரசம்’ 5 ‘பழம்வீழ்க் கும்’ 7 ‘பாயமீ தழிந்து’ 9 ‘அகன் மலையே வான்கணத்து’ 10 - 11. ‘ஆங்குப், புலந்..............தேரினராயினும், மரந்...களிற்றினராயினும்’ 13 ‘வாளிற்கொள்ள லிற்றாளிற்றாரலன்’ 16 ‘விரைபொலி’

திணை - நொச்சி (பி - ம். காஞ்சி); துறை - மகண்மறுத்தல்.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) இரங்கத்தக்கது, பாரியுடைய பறம்பு, பெருமையைக் கொண்ட முரசினையுடைய நீயிர் மூவேந்தரும் சூழினும்; உழவரால் உழுது விளைக்கப்படாதன நான்குவிளையுளையுடைத்து; அவற்றுள், முதலாவது, சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும்; இரண்டாவது, இனிய சுளையையுடைய பலாவினது பழம் ஊழ்க்கும்; மூன்றாவது, கொழுவிய கொடியையுடைய வள்ளிக்கிழங்கு தாழவிருக்கும்; நான்காவது, அழகிய நிறத்தையுடைய ஓரிபாய்தலான் அதன்மேற் பவரழிந்து (பி - ம். பவணழிந்து) கனத்த நெடிய மலை தேனைப்பொழியும்; அகலநீள உயரத்தால் வானிடத்தை யொக்கும், அவனது மலை; அவ்வானத்தின்கண் மீனையொக்கும், அம்மலையின்கட் சுனை; அவ்விடத்து மரந்தோறும் கட்டப்பட்ட யானையை யுடையீராயினும் இடந்தோறும் பரப்பப்பட்ட தேரையுடையீராயினும் உங்கள் முயற்சியாற் கொள்ளமாட்டீர்; நுமது வாள்வலியால் அவன்தாரான்; யான் அறிவேன், அதனைக் கொள்ளும்பரிசை; வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்ணி வாசித்து நறுநாற்றத்தையுடைய தழைத்த கூந்தலையுடைய நும் விறலியர் பின்வர ஆடினிராய்ப் பாடினிராய்ச் செல்லின் அவன் நுமக்கு நாட்டையும் மலையையும் கூடத்தருவன்-எ - று.

அளிதோவென்பது ஈண்டு வியப்பின்கண் வந்தது.

ஓரியென்பது தேன்முதிர்ந்தாற் பரக்கும் 1நீலநிறம்; முசுக்கலையெனினும் அமையும்.

குன்றம் தேன்சொரியுமென இடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது.

நான்குபயனுடைத்தென்று வைத்து, நெல் விளையும் பழம் ஊழ்க்கும் கிழங்கு வீழ்க்கும் தேன் சொரியுமென்று அவற்றின் செய்கைதோன்றக் கூறினாரெனினும், கருதியது நெல்லும் பழனும் கிழங்கும் தேனுமாகக் கொள்க.

வான்கணற்றணிமலையேயென்று பாடமோதுவாரும் உளர்.

வான்கணற்றென்பது மலையின் ஓக்கமும் பரப்பும்.

மீன்கணற்றென்றது 2சுனையினது பன்மையும், தெளிவும், சிறுமையும்.

ஈண்டுக் கண்ணென்பது அசைநிலை.

தாளென்றது படையறுத்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின இயற்றலும்.

விறலியரென்றது அவர் உரிமைமகளிரை.


(கு - ரை.) 1. புறநா. 111 : 1.

2. "ஆளிடுஉக் கடந்து வாளம ருழக்கி, ஏந்துகோட் டியானை வேந்த ரோட்டிய, கடும்பரிப் புரவிக் கைவண் பாரி" (அகநா. 78)

4. மூங்கில் நெல் : "வெதிரிற் பிறந்த பொதியவி ழருநெல்" (பெருங். 1. 51 : 12); "வெதிர்கண் ணுடைந்து நெல்லுதிரவும்" (யா. வி. சூ. 95, மேற்.); "நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை" (குறிஞ்சிப். 35); "புல்லிலை வெதிர நெல்விளை காடே" (அகநா. 367 : 16)

"சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே : இது, விளையுமேயெனற் பாலது, விளையும்மேயென ஒற்றில்வழி ஒற்றை விரித்தவாறு; இதனுட் சிறியவிலை யெனற்பாலது சிறியிலையெனத் தொகுத்தவாறு' (நன். வி. சூ. 155; சங்கர.)

5. "பல்கோட் பலவின் பயிர்ப்புறு தீங்கனி" (கலித். 50. 12)

6. கிழங்கு கீழே தாழவிருத்தலை, வீழ்த்தலென்றல் மரபு; "வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா" (கலித். 39); "கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு" (மதுரைக். 534); "வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும், விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை" (மலைபடு. 127 - 8)

4 - 9. "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார், நிலைக் கெளிதா நீர தரண்" (குறள், 745)

1 - 13. "பேரிசை யுருமொடு மாரி முற்றிய, பல்குடைக்கள்ளின் வண்மகிழ்ப்பாரி, பலவுறு குன்றம் போலப், பெருங்கவி னெய்திய வருங்காப் பினளே" (நற். 253)

15. சுகிர்தல் - சிக்கறவடித்தல்.

16. ஒலித்தல் - தழைத்தல், "ஒலிதெங்கின்" (பதிற். 13 : 7)

மு. உழிஞைத்திணையின் துறைகளுளொன்றாகிய 'அகத்தோன் செல்வம்' என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 10, இளம்.; சூ. 12, 67, ந.

(109)


1. "நீனெய்தாழ் கோதை" (பரி. 11 : 124); "நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை, நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅல்" (மலைபடு. 524-5)

2. "எறும்பி யளையிற் குறும்பல் சுனைய" (குறுந். 12)