113
மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே யினியே
5 பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.

திணையும் துறையும் அவை.

அவன்மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.

(இ - ள்.) மது இருந்த சாடியை வாய்திறப்பவும் ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும் அடப்பட்டு அமைந்தொழியாத கொழுவிய துவையையும் ஊனையுடைய சோற்றையும் விரும்பிய பரிசே தரும் மிக்க செல்வம் முதிர்ந்து எம்மோடு நட்புச்செய்தாய் முன்பு; இப்பொழுது, பாரி இறந்தானாகக் கலங்கிச் செயலற்று நீர்வார்கண்ணையுடையேமாய்த் தொழுது நின்னை வாழ்த்திச் செல்லுதும், பெரிய புகழையுடைய பறம்பே! கோற்றொழிலாகச் செய்யப்பட்ட திரண்ட குறிய வளையையணிந்த முன்கையினையுடைய மகளிரது மணம் கமழும் கரிய கூந்தலைத் தீண்டுதற்கு உரியவரை நினைந்து- எ - று.

பறம்பே! பெருவளம் பழுனி நட்டனை முன்; இனி நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்து சேறுமெனக் கூட்டுக.
மன் : கழிவின்கண் வந்தது.

வாழியும் ஓவும் : அசைநிலை.

ஆனாக்கொழுந்துவையென்பதற்கு விருப்பம் அமையாத கொழுந் துவையெனினும் அமையும்.


(கு - ரை.) 1. புறநா. 33 : 21, 262 : 1.

2. அடப்பட்டு - சமைக்கப்பட்டு. துவை - உணவின் விசேடம்; துவையலென்றுங் கூறப்படும்.

3. "பல்வளம் பழுனிய" (மணி. 3 : 28)

6. "நீர்வார் கண்ணேன்" (நற். 143); "நீர்வார் கண்ணை" (குறுந். 22 : 1). கண்ணேம் : வினையெச்சமுற்று.
தன்மைப்பன்மை வினைக்குறிப்புமுற்று வினையெச்சக்குறிப்பானதற்கு மேற்கோள்; நன். சூ. 350, மயிலை; நன். வி. சூ. 351; இ. வி. சூ. 250, உரை.

7. பெயர் - புகழ்.

9. "கலிமயிற் கலாவத் தன்னவிவள், ஒலிமென் கூந்த லுரியவா நினக்கே" (குறுந். 225 : 6 - 7); "கூந்த லணைகொடுப்பேம் யாம்" (கலித். 101); "தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்தல் தொடேல்" (சீவக. 1229)

(113)