116
தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல்
ஏந்தெழின் மழைக்க ணின்னகை மகளிர்
புன்மூசு கவலைய முண்மிடை வேலிப்
5பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்
பீரை நாறிய சுரையிவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை யேறி யுமணர்
உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ
நோகோ யானே தேய்கமா காலை
10பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும்
பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந் துகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
கால மன்றியு மரம்பயம் பகரும்
யாண ரறாஅ வியன்மலை யற்றே
15அண்ண னெடுவரை யேறித் தந்தை
பெரிய நறவிற் கூர்வேற் பாரிய
தருமை யறியார் போரெதிர்ந்து வந்த
வலம்படு தானை வேந்தர்
பொலம்படைக் கலிமா வெண்ணு வோரே.

(பி - ம்.) 1 ‘தீம்பெருங்’ 12 ‘வாகிப்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கட் பூத்த செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட தழையசையும் அல்குலையும் மிக்க அழகையுடைய குளிர்ந்த கண்ணினையும் இனிய முறுவலையுமுடைய மகளிர் புல்மொய்த்த கவலையையுடையனவாகிய முள்ளால் நெருங்கிய வேலியையும் பஞ்சு பரந்த முற்றத்தையுமுடைய சிறியமனையிடத்தின்கட் பீர்க்கு முளைத்த சுரைபடர்ந்தவிடத்தில் ஈத்திலையையுடைய குப்பையின்கண் ஏறி உமணர் உப்புச் செலுத்தும் சகடத்தை எண்ணுவர்; நோவேன் யான்; எனது வாழ்நாள் கெடுவதாக; பயின்ற பூவையுடைய சோலைக்கண் மயிலெழுந்து ஆடவும் பயின்ற பெரிய மலையின்கண்ணேயேறி முசுக்கலை (ஒருவகைக் குரங்கின் ஆண்) தாவி உகளவும் அம்முசுக்கலையும் நுகர்ந்து வெறுத்தலாற் கொள்ளாவாம் பரிசு காலமன்றாகவும் மரங்கள் பலவும் காயும் பழமும் முதலாயினவற்றை விளைந்துகொடுக்கும் புது வருவாய் ஒழியாத அகன்ற மலையைப்போலும் பயனுடைத்தாகிய தலைமையையுடைய உயர்ந்த வரையின்கண்ணேயேறித் தம்முடைய தந்தையாகிய மிக்க மதுவினையும் கூரியவேலினையுமுடைய பாரியது பெறுதற்கருமையை அறியாராய்ப் போரேற்றுவந்த வென்றிப்பட்ட சேனையையுடைய அரசரது பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றை யுடைய மனஞ்செருக்கிய குதிரையை எண்ணுவார்-எ - று.

வியன்மலையென்றது அரைமலையை.

நெடுவரையென்றது உச்சிமலையை.

இன்னகைமகளிர், நெடுவரையேறி முன்பு வேந்தர்கலிமாவை எண்ணுவோர், இப்பொழுது ஈத்திலைக்குப்பையேறி உமணர் உப்பொய் ஒழுகையை எண்ணுவர்; இதற்கு நோவேன் யான் ; எனது வாழ்நாள் கெடுவதாகவென வினைமுடிவு செய்க.

அற்றேயென்னும் ஏகாரம் அசைநிலை.

வியன்மலை அத்தன்மைத்தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினும் அமையும்.


(கு - ரை.) 1. புறநா. 105 : 2, 132 : 5; "குவளையம் பைஞ்சுனை" (மலைபடு. 251); "மலிர்சுனைக் குவளைத், தேம்பா யொண்பூ" (அகநா. 308)

2. முழுநெறி - புறவிதழொடிந்தமுழுப்பூ; "கழுநீ ராம்பன் முழுநெறிப் பகைத்தழை" (அகநா. 156); "கழுநீர்ப் பிணையன் முழுநெறி" (சிலப். 2 : 34)

1 - 2. தழை : புறநா. 61 : 1, 340 : 1; "மணிப்பூம் பைந்தழை தைஇ", "மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி, அரிமல ராம்பலோ டார்தழை தைஇ, விழவாடு மகளிர்" (அகநா. 20, 176); "கிளையிதழ் பறியாப் பைவிரி யல்குற், கொய்தழை தைஇ" (குறிஞ்சிப். 101 - 2); "பைந்தழைமா மகளிரொடு" (பட்டினப். 91)
"முழுநெறிக்குவளை" (சிலப். 2 : 14) என்பதற்கு, இதழொடிக்கப்படாத குவளையென்று பொருள்கூறி, இவ்வடிகளை மேற்கோள் காட்டினர் அடியார்க்குநல்லார்.

1 - 3. "பைஞ்சுனைக், குவளைத் தண்டழையிவள்" (குறுந். 342 : 4-5)

4. கவலை - கவர்த்தவழி; முள்வேலி : "வாழ்முள் வேலி", "இடு முள்வேலி" (பெரும்பாண். 126, 154)

6. "சுரையொடுபேய்ப் பீர்க்குஞ் சுமந்த" (பு. வெ. 60)

7. ஈத்திலை - ஈச்சமரத்தின் இலை.

8. ஒய்தல் - செலுத்துதல். புறநா. 70 : 17, குறிப்புரை. ஒழுகை - பண்டியொழுங்கு.

7 - 8. இங்ஙனம் எண்ணுதல் ஒருவகை விளையாட்டு; திமில் முதலியவற்றை எண்ணுதலும் உண்டு; "நிலவுக்குவித் தன்ன மோட்டு மண லிடிகரைக், கோடுதுணர்ந் தன்ன குருகொழுக் கெண்ணி", "உவர்விளை யுப்பி னுழாஅ வுழவர், ஒழுகை யுமணர் வருபத நோக்கிக், கான லிட்ட காவற் குப்பைப், புலவுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி, மடநோக் காயமொ டுடனுப் பேறி, எந்தை திமிலிது நுந்தை திமிலென வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர், திண்டிமி லெண்ணுந் தண்கடற் சேர்ப்ப" (நற். 159, 331); "ஊசன் மேவற் சேயிழை மகளிர், உரல்போற் பெருங்கா லிலங்குவான் மருப்பிற், பெருங்கை மதமாப் புகுதரினவற்றுள், விருந்தின் வீழ்பிடி யெண்ணுமுறை பெறாஅ" (பதிற். 43); "திரையுழந் தசைஇய நிரைவளை யாயமொ, டுப்பின் குப்பை யேறியெற்பட, வருதிமி லெண்ணுந் துறைவனொடு" (அகநா. 190)

9. நோகு - நோவேன்; தன்மை யொருமை வினைமுற்று; ஓ : அசைநிலை.

13. "கால மன்றியு மரம்பயன் கொடுத்தலின்" (மலைபடு, 134); " பருவ மன்றியும் பயங்கொடுப் பறாஅப், பலவு மாவுங் குலைவளர் வாழையும், இருங்கனி நாவலு மிளமா துளமும்" (பெருங். 2 : 20 : 61 - 3); "கால மின்றியுங் கனிந்தன கனி", "தீங்கனி, கால மின்றிக் கனிவது காண்டிரால்" (கம்ப. வனம்புகு 44, நாடவிட்ட. 18)
16 - 8. "ஏந்துகோட் டியானை வேந்த ரோட்டிய, கடும்பரிப் புரவிக் கைவண் பாரி" (அகநா. 78)

19. பொலம்படைக் கலிமா. புறநா. 359 : 14; "பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி" (மலைபடு. 574); "புனையும் பொலம்படைப் பொங்கு ளைமான்" (பு. வெ. 276)

(116)