117
மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
வயலக நிறையப் புதற்பூ மலர
மனைத்தலை மகவை யீன்ற வமர்க்கண்
5ஆமா நெடுநிரை நன்பு லாரக்
கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப்
பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
10ஆய்தொடி யரிவையர் தந்தை நாடே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும் எல்லாத் திசையினும் புகை தோன்றினும் தென்றிசைக்கண்ணே வெள்ளி போக்குறினும் வயலிடம் விளைவுமிகப் புதலிடத்துப் பூ மலர மனையிடத்துக் குழவியையீன்ற மேவிய கண்ணையுடைய ஆமாவினது நெடியநிரை நல்ல புல்லைமேயக் கோல் செவ்விதாகலின் அமைந்தோர் பலராக மழை பிழைப் பறியாத புல்லிய நிலத்தின் கண்ணது, இளைய வெருகினது கூரிய பல்லை யொப்பப் பசிய இலையையுடைய முல்லை முகைக்கும் நுண்ணிய தொழிலை யுடைய வளையினையணிந்த மகளிருடைய தந்தை நாடு-எ - று.

பல்கியென்பதனைப் பல்கவெனத் திரிக்க.

அரிவையர்தந்தை நாடு, பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவெனக் கூட்டுக.

என்றதனாற் போந்தது: புன்புலத்ததாயிருந்ததே! அது 1பெயல் பிழைப்பறியாமை, கோல்செம்மையினான் உளதாயதன்றே; அவ்வாறு கோல் செவ்விதாக நிறுத்தியவனை இழப்பதேயென்று அவன் நாடு கண்டு இரங்கியவாறாகக் கொள்க.


(கு - ரை.) 1 - 2. புறநா. 35 : 6 - 8; சனி கரியநிறமுடையனாதலின் மைம்மீனென்றார்; அவனுக்குரிய, காரி, கரியவன் முதலிய காரணக்குறியாலும் உணர்க: சனிபுகைதலாவது இடபம் சிங்கம் மீனம் இவற்றொடு மாறுபடுதல்; இவற்றுள், சனி தனக்குப் பகைவீடாகிய சிங்கராசியிற் புகின் உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிப்பனென்பதை, "மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்" (தே.), "அடையார்தமக்கு, மகத்திற் சனியன்ன சந்திர வாணன்" (தஞ்சை. 48), "மகத்தில் வாழ்சனியாயினை" (வாயுசங்கிதை,கடவுள். 7), "விசயன் றம்முற் குதவி செய்யாமன், மகத்திற் சனிபோல் வளைக்குவம் யாம்"

(வி. பா. 11-ஆம் போர். 40) என்பவற்றாலுணர்க; (நக்ஷத்திரங்களுள் மகம், பூரம், உத்தரத்தின் முதற்பாதம் சிங்கராசிக்கு உரியவை) தூமம் புகைக்கொடி யென்றும் கூறப்படும்; தூமகேது வென்பதும் இதுவே; இது வட்டம், சிலை, நுட்பம், தூமமென்னும் கரந்துறை கோட்கள் நான்கனுளொன்று; இதன் தோற்றம் உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிக்குமென்பர்; "தூமகேது புவிக்கெனத் தோன்றிய" (கம்ப. மந்தரைசூழ்ச்சி. 21)

"கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்" (சிலப். 10 : 102 : 3) என்பதனுரையில் இவ்வடிகளை மேற்கோள் காட்டினர் அடியார்க்குநல்லார்.

6. புறநா. 191 : 4 - 7.

'கோஒல் செம்மையிற் சான்றோர்பல்கி யெனவரும் பண்பு பொரு ளியைபின்றேனும் பெயர்கொள வருதற்பாற்படுதலும்................இதனாற் கொள்க' (தொல். வேற்றுமை. சூ. 5, .)

8. வெருகு - காட்டுப்பூனை; இதனை, 'படப்பை வேலியும் புதலும் பற்றி விடக்கிற்கு வேற்றுயிர் கொல்வது' (தொல். மரபு. சூ. 68) என்பர் பேராசிரியர். பிள்ளைவெருகு : குறுந். 107 : 4; அகநா. 297 : 13 - 4.

8 - 9. "இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை, வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக், குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவு", "வெருக்குப்பல் லுருவின் முல்லை" (குறுந். 220, 240); "வெருகு வேட்பச் சிரிப்பனபோன் முகைத்த முல்லை" (சீவக. 1651)

(117)


1. "முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி, ஒல்லாது வானம் பெயல்", "ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர், காவலன் காவா னெனின்" (குறள், 559, 560); மணி. 7 : 8 - 10; சீவக. 255.