திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) பாறையும் சிறுகுவடும் (சிறுமலையும்) கூடிய தலையை யுடையவாகிய எட்டாம்பக்கத்து (எட்டாந்திதி)ப் பிறைபோலும் வளைந்த கரைகளையுடைத்தாகிய தெளிந்த நீரையுடைய சிறியகுளம் பாதுகாப்பார் இன்மையின் உடைவதுபோலும், கூரிய வேலையேந்திய திரண்ட தோளையுடைய தேர்வண்மையைச் செய்யும் பாரியது குளிர்ந்த பறம்பு நாடு -எ - று. நாடு குளங்கீள்வதென இடத்துநிகழ்பொருளின்தொழில் இடத்துமேல் ஏறி நின்றது. மாதோ : அசைநிலை. |
(கு - ரை.) 2 - 3. "தேய்பிறை யுருவக் கேணி" (சீவக. 2998); "ஏரிவளாவிக் கிடந்தது போலு மிளம்பிறையே" (திருநா. தே.) 3. குளம் : இடத்துநிகழ்பொருள்; கீளுதல் : அதன்தொழில். 5. தேர்வண்பாரி: புறநா. 114 - 6, 200 : 9 - 12, 201 : 2 - 5; "சுரும்புண, நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச், சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய, பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற், பறம்பிற் கோமான் பாரியும்" (சிறுபாண். 87 - 91); 'முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும், தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும்" (பழ. 74); "முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையும், எல்லைநீர் ஞாலத் திசை விளங்கத் - தொல்லை, இரவாம லீந்த விறைவர்போனீயும், கரவாமலீகை கடன்" (பு. வெ. 194) (118)
|