122
கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
5மூவரு ளொருவன் றுப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
10நினதென விலைநீ பெருமிதத் தையே.

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) கடலாற் கொள்ளப்படாது, அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற்கொள்ளார், வீரக்கழலணிந்த 1 இலக்கணத்தாற்றிருந்திய நல்ல அடியையுடைய காரி! நினது நாடு; அது வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; கெடாத செல்வத்தினையும் வென்றிபொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாகவேண்டுமென்று அம்மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து நினக்குத் தரும்பொருள், நுமது குடியை வாழ்த்தினராய்வரும் பரிசிலருடையது; ஆதலால் வடதிசைக்கட்டோன்றும் அருந்ததியையொக்கும் கற்பினையும் மெல்லிய மொழியினையுமுடைய அரிவையுடைய தோள்மாத்திரை யல்லது நின்னுடையதென்று சொல்ல ஒன்றுடையையல்லையாயிருக்கவும் நீ பெரிய செருக்கினையுடையையாய் இராநின்றாய்; இதற்குக் காரணம் என்னை?-எ-று.

ஏத்தினர்தரூஉமென்று பன்மையாற்கூறியது அவ்வேந்தன் அமைச்சரை. மூவருள் யான் ஒருவன்; எனக்குத் துப்பாகியரென அம்மூவரும் ஏத்தினர்தரூஉமென்று உரைப்பினும் அமையும்.

நாடு அந்தணரது; கூழ் இரவலரது; அரிவைதோளளவல்லதை நினக்கு உரித்தாகக் கூறுதற்கு யாதும் இல்லையாயிருந்தது; நீ பெருமிதத்தை யுடையையாயிருந்தாயென வியந்து கூறியவாறு.


(கு - ரை.) 1- 3. காரியின்நாடு மலையும் மலைசார்ந்த இடமுமாதலின், இங்ஙனங் கூறினார்; இவன் இராசதானி பெண்ணையாற்றங் கரையிலுள்ள திருக்கோவலூரென்று, "துஞ்சா முழவிற் கோவற் கோமான், நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப், பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்" (அகநா. 35) என்பதனால் தெரிகின்றது; "கறங்குமணி, வாலுளைப் புரவியொடு வையக மருள, ஈர நன்மொழி யிரவலர்க் கீந்த, அழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற், கழறொடித் தடக்கைக் காரியும்" (சிறுபாண். 91 - 5)

5. புறநா. 125, கருத்து; "முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன்" (குறுந். 312 : 2)
6 - 7. "வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும், அருகா தீயும் வண்மை, உரைசா னெடுந்தகை" (புறநா. 320 : 16 - 8)
8. "பெருநல் வானத்து வடவயின் விளங்கும், சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்" (பெரும்பாண். 302 - 3); "வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்" (கலித். 2)

9. அரிவை யென்றது மலையமான் திருமுடிக்காரியின் மனைவியை.

(122)


1.திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடியென்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்; மதுரைக். 436, உரை.