124
நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குந ரல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கு மருவிப்
5பீடுகெழு மலையற் பாடி யோரே.

(பி - ம்.) 3 ‘பெயர்குவர்’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) நல்லநாளன்றாகப் போகிப் 1புள்நிமித்தம் இடையே நின்று தடுப்பச் செவ்வியன்றாகச் சென்றுகூடிக் கூறுபாடன்றாக முனியும் வார்த்தைகளைச் சொல்லினும் வறிதாக மீள்வாரல்லர், ஒழுங்குபட ஓசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய பெருமைபொருந்திய மலையையுடையோனைப் பாடியவர்கள்-எ - று.

மலையற்பாடியோர் வறிதுபெயர்குநரல்லரெனக் கூட்டுக.

அன்றியென்பது அன்றெனத் திரிந்தது செய்யுளாகலின்.

வறிதென்னும் குறிப்புவினையெச்சம் பெயர்குநரல்லரென்பதனுட் பெயர்தலோடு முடிந்தது. வறியரென்றுரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. நாள் - ஈண்டு நல்ல நாளின் மேற்று. "புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்" (மலைபடு. 448); "நாளும் புள்ளுங் கேளா வூக்கமோ, டெங்கோ னேயின னாதலின் யாமத்துச், செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய், மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப, விரிச்சி யோர்த்தல் வேண்டா, எயிற்புறந்தருதும் யாம் பகைப்புல நிரையே" (தகடூர் யாத்திரை)

‘அன்றி‘ என்னும் குறிப்புவினையெச்சத்தின் ஈற்று இகரம் செய்யுளில் உகரமாகத் திரிந்துவந்ததற்கும் (தொல். உயிர்மயங்கு. சூ. 35, இளம்., ந.; நன். சூ. 172, மயிலை. நன். வி. சூ. 173; இ. வி.சூ. 91, உரை), அது செய்தெனெச்ச வினைக்குறிப்பாய் வந்ததற்கும் (தொல். வினை. சூ. 34, தெய்வச்.; சூ. 31, ந.; நன். சூ. 343, மயிலை,; இ. வி. சூ. 246, உரை) மேற்கோள்.

2. திறனன்று மொழிதல்: "திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும், பொருளு மதனினூஉங் கில்" (குறள், 644)
1 - 3. குறுந். 140.

வினையெச்சக்குறிப்பு அடுக்கிவந்து ஒருவினை கொண்டதற்கு மேற் கோள் (நன். சூ. 354, மயிலை.); இவை அடுக்காகா வென்பர் விருத்தி யுரையாசிரியர்; நன். சூ. 355.

4. புறநா. 369 : 22 - 3. மு. புறநா. 92.

(124)


1.புள்நிமித்தம் - பறவைச் சகுனம்; நிமித்தம் என்பதற்கு அறிவிப்பது என்று பொருள்; பின் வரும் நன்மை தீமைகளை அறிவிப்பது என்றபடி.