14
1கடுங்கண்ண கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில்
வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவுநாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
15பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.

(பி - ம்.) 9. ‘சாப’

திணை - அது; துறை - இயன்மொழி.

சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன்கபிலர் கைப்பற்றி, ‘மெல்லியவாமால் நுங்கை’எனக் கபிலர் பாடியது.

(இ - ள்.) வன்கண்மையை உடையகொலையானையாலே காவலை யுடைய 2கணையமரத்தைமுறித்து இரும்பாற் செய்யப்பட்ட அழகுசெய்த அங்குசத்தால்முன்னர்க் கடாவி அதுசெய்யும் வினையைப் பின்வேண்டுமளவிலே பிடிக்கவும், வலிய நிலத்தைக்குந்தாலியால் இடித்துச்செய்த குழிந்த கிடங்கின்கண்நீர்ப்பரப்பினது ஆழமாகிய உயர்ச்சியைக் கருதிஅதன்கட் செல்லாமல் மிகைத்த செலவினையுடைய குதிரையைக்குசை தாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும், அம்பறாத்தூணிபொருந்தியமுதுகையுடையையாய்த் தேர்மேலே நின்று வில்லினது வலியநாணாற்பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச் செலுத்தவும்,பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களைஅளிக்கவும், தலைவ! வலியவாகும் நின் முழந்தாளைப்பொருந்திய பெரிய கைகள் ; புலானாற்றத்தை யுடையவாகியசெவ்வித்தடியைப் பூநாற்றத்தவாகிய புகையைக் கொளுத்திஅமைத்த ஊனையும் துவையையும் கறியையும் சோற்றையும்உண்டு வருந்துஞ் செயலல்லது வேறு செயலறியா வாகலான்,அவைதாம் பெரிதும் மெல்லியவாயின; பெரும ! பெண்டிர்கட்குஆற்றுதற்கரிய வருத்தமாகிய மார்பினையும் பொருவார்க்குத்துளக்கப்படாமையிற் பெரிய நிலம்போன்ற வலியினையும்உடைய, போரின்கண்ணே மிக்க சேயையொப்பாய்!நின்னைப் பாடுவாருடைய கைகள் - எ - று.

கொளீஇ (13) என்னுமெச்சம் அமைத்தவென்னும்ஒருசொல் வருவித்து முடிக்கப்பட்டது; கொளுத்தவெனத்திரித்து, அவ்வூனென ஒரு சுட்டு வருவித்து அதனோடு முடிப்பினும்அமையும்.

உண்டு (14) என்பது பொதுவினையன்றேனும்கறியொழிந்த வற்றிற்கெல்லாம் சேறலின், பன்மைபற்றிஅமைத்துக்கொள்ளப்படும். ஊன் துவை கறியொடுகூடியசோற்றை உண்டென உரைப்பினும் அமையும் ; இதனைப்பொதுவினையென்று உரைப்பாருமுளர்.

குரிசில்! பெரும! சேஎய்! வலியவாகும்நின்கை; நிற்பாடுநர்கை தாம் மெல்லியவாகுமெனக்கூட்டுக.
இனி, மாதாங்கவும் (7) என்பதற்கு அகழியைக் கடக்கப்பாய்தற்குக்குதிரைக்குசையைத் தாங்கி எடுத்துவிடவு மென்றுரைப்பாருமுளர்.

பாடுநர் (19) எனத் தம்மைப் படர்க்கையாகக்கூறினார்.

தம் கையின் மென்மையது இயல்புகூறுவார்,அரசன்கையின் வலிய இயல்புங் கூறினமையான், இஃதுஇயன்மொழியாயிற்று,


(கு - ரை.) 1. “கடுஞ்சினத்தகொல்களிறும்”(புறநா. 55 : 7); “கடாஅஞ் சென்னிய கடுங்கண்யானை” (பதிற். 25 : 2); “கடுஞ்சினத்த களிறு” (மதுரைக்.179)

3. “விளங்குபொன் னெறிந்த நலங்கிளர்பலகை” (புறநா. 15 : 12); “மின்னுந் தமனியமும்வெற்றிரும்பு மொன்றாகப், பொன்னென் பெயர்படைத்தாற்போலுமே” (பெரும்பொருள் விளக்கம்)

8 - 9. இது, படையடுத்ததற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 31, ந.

11. “தாட்டாழ் தடக்கைத் தனிமதிவெண்குடையான்” (பு. வெ. 52)

10 - 11. இவ்வடிகள், ஆக்கக்கிளவிகாரணம் பெற்று வந்தமைக்கு மேற்கோள்; தொல்.கிளவி. சூ. 22, சே.

8 - 11. “மாண்வினைச் சாபமார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை”(பதிற். 90 : 33 - 4) என்பதையும் அதன் உரையையும்பார்க்க.

13 - 4. “மற்று, ஊன்றுவை கறிசோறுண்டுவருந்துமென வந்ததால் எனின், அது பாடமறிந்துதிருத்திக்கொள்க” (தொல். கிளவி. சூ. 46, இளம்.);“அஃதேல், ஊன்றுவை.....அல்லது என்புழி உண்டென்பதுஒன்றற்கே உரிய வினையாகலின் வழுவாம் பிறவெனின்,உண்டலென்பது உண்பன தின்பன எனப் பிரித்துக் கூறும்வழிச்சிறப்புவினையாம்; பசிப்பிணி தீர நுகரப்படும் பொருளெல்லாம்உணவெனப்படுமாகலிற் பொதுவினையுமாம்; அதனான் அதுவழுவன்றென்பது” (தொல். கிளவி. சூ. 47, சே.; இ.வி. சூ. 319, உரை); “ஊன்றுவை....அல்ல தென்புழிநுகரப்படும் பொருள் எல்லாவற்றிற்கும் உண்டற்றொழில்வந்தவாறு காண்க.” (தொல். கிளவி. சூ. 47, ந.);உண்டல் பொதுவினை யென்பதற்கு மேற்கோள் (தொல்.கிளவி. சூ. 42, தெய்வச்.); பல பொருள் விரவின,சிறப்பினால் ஒன்றற்கேற்ற வினைகொண்டதென்பதற்குமேற்கோள்; நன் மயிலை. சூ. 377.

19. “செருமிகு சேஎயொ டுற்ற சூளே”(அகநா. 266 : 21) (14)


1. “கடுங்கண்ண கொல்களிற்றால் என்னும் புறப்பாட்டுள் படைக்கலங்கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க” (தொல். புறத்திணை சூ. 16, இளம்.; சூ. 20, ந.)

2. கணையமரம் - கதவின் உட்புறத்தே குறுக்காகப்போடப்படும் மரம்; “முழுவிறற்கணையம்” (சிலப்.15 : 215, அடியார்.)