200
பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்
5கழைமிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப
நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேற்
களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே
இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
10நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே, பரிசிலன் மன்னு மந்தண னீயே
வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன்
15நினக்கியான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை யடக்கும்
மடங்கா விளையு ணாடுகிழ வோயே.

திணை - அது; துறை - பரிசிற்றுறை.

பாரிமகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது.

(இ - ள்.) குளிர்ந்தமலையின்கண் ஓங்கிய பசிய இலையையுடைய பலாவினது பழத்தைக் கவர்ந்து உண்ட கரியவிரலையுடைய கடுவன் சிவந்த முகத்தையுடைய தனது மந்தியுடனே பொலிந்து சேய்மைக்கண்ணே விளங்கி முகிலாலும் உச்சியறியப்படாத உயர்ந்த மலைப்பக்கத்து மூங்கிலுச்சியின்கண் துயிலும் மலையகத்துத் தாழ்ந்த வரையையுடையோய்! நிணத்தைத் தின்று களித்த நெருப்புப்போலும் தலையையுடைய நெடிய வேலினையும் களத்தைக் தனதாக்கிக்கொண்டு காயும் தறுகண்மையையுடைய யானையினையும் விளங்கிய மணிகளாற்செய்யப்பட்ட வளைந்த ஆபரணத்தையுமுடைய விச்சிக்கோவே! இவர்கள்தாம், பூவைத் தனது தலையின்கண் மாறாத அலங்கரித்தாற்போலும் கொடிமுல்லைதான் நாத்தழும்பேறப் பாடாதாயினும் ஒலிக்கும் மணியையுடைய நெடிய தேரைக் கொள்கவென்று சொல்லிக் கொடுத்து பரந்து மேம்பட்ட தலைமையினையுடைய பாரிக்கு மகளிர;் யான் பரிசிலன்; அதுவன்றியும் நிலைபெற்ற அந்தணன்; நீ, பகைவரைப் போர் செய்யுமுறைமையாற் பொருது தாழ்விக்கும் வாளான்மேம்படுபவன்; ஆதலால், நினக்கு யான்தரக் கொள்வாயாக; சினத்தையுடைய போராலே பகைவேந்தரை மிகையடக்கும் மடக்கப்படாத மிக்க விளைதலையுடைய நாட்டையுடையோய்! எ - று.

மடக்குதல் - போகமொருக்குதல்.

1பலவின்கனி கவர்ந்துண்ட கடுவன் மந்தியொடு சிறந்து சேண் விளங்கிக் கழைமிசைத் துஞ்சுமென்றதனால், நீயும் இவரை வரைந்து கொண்டு இன்புற்று வாழ்தல் வேண்டுமென்பது தோற்றிநின்றது.

‘யானே பரிசிலன்’ என்பதனால் நினக்கு என்குறை முடிக்க வேண்டு மென்பதூஉம், அந்தணனென்றதனால் யான் தருதற்குரியேனென்பதூஉம் கொள்ளப்படும்.

2உலகத்து மகட்பேசிவிடக் கொடுத்தலையன்றித் தாமே இவரைக் கொள்வாயாகவென்று இரந்து கூறினமையின், இது பரிசிற்றுறை யாயிற்று.


(கு - ரை.) 2. கடுவன் - ஆண்குரங்கு.

4. புறநா. 166 : 32, குறிப்புரை.

5. கல்லகம் : பதிற். 9-ஆம் பத்துப் பதிகம்.

7. புறநா. 53 : 5, குறிப்புரை.

8. புறநா. 130 : 1.

9-11. புறநா. 201 : 2 - 3.

9-12. பாரி முல்லைக்குத் தேர்கொடுத்தது: புறநா. 118 : 5, குறிப்புரை.

13. புறநா. 126 : 11, 201 : 7.

9-17. பெருங். 4. 15 : 23 - 80.

(200)


1.“பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடுங்கடுவன், மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ் சிலம்ப” (திருச்சிற். 99)

2. பெருங். 4, 15 : 71 - 2; சீவக. 1056.