201
இவரியா ரென்குவை யாயி னிவரே
ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்
முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமான்
5நெடுமாப் பாரி மகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
10உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய
15ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான்றர விவரைக் கொண்மதி வான்கவித்
திருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற்
பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
உடலுந ருட்குந் தானைக்
20கெடலருங் குரைய நாடுகிழ வோயே.

திணையும் துறையும் அவை.

பாரிமகளிரை இருங்கோவேளுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது.

(இ - ள்.) இவர் யாரென்று வினவுவாயாயின், இவர்தாம், ஊரெல்லாவற்றையும் இரப்போர்க்கு வழங்கித் தேரை ஏறுதற்கேற்பச் சமைத்த அணையோடும் புரவியோடும் கூட முல்லைக்கு வழங்கிய தொலையாத நல்ல புகழையும் ஒலிக்கும் மணியையுடைய யானையையுமுடைய பறம்பிற்குத் தலைவனாகிய மிக்க பெரிய பாரியுடைய மகளிர்; யான் இவர் பிதாவின் தோழனாதலான் இவர் என்னுடைய மகளிர்; அந்தணனாகிய புலவன்யான் கொண்டு வந்தேன்; நீதான் வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தின்கட் டோன்றிச் செம்பாற் புனைந்துசெய்தாலொத்த சேய்மையை யுடைத்தாகிய நெடிய மதிலையுடைய துவராபதியென்னும் படைவீட்டை யாண்டு வெறுப்பில்லாத கொடையினையுடையராய் நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டுவந்த வேள்களுள்வைத்து வேளாயுள்ளாய்! வென்றிப் போரையுடைய தலைவ! தாரணிந்த யானையினையுடைய பெரிய இருங்கோவே! நீதான், ஆண்டன்மையைக் கடப்பாடாக உடைமையாற் பாணர்க்குச் செய்யக்கடவ முறைமையை உதவிய தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே! யான் நினக்குத்தர இவரைக் கொள்வாயாக; வானாற் கவிக்கப்பட்டுப் பெருங்கடல் சூழ்தரப்பட்ட இவ்வுலகத்தின்கண் அணுகுதற்கரிய வலியையுடைய பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவ! வென்றிவேலையுடைத்தாகிய பகைவர் அஞ்சும் படையையுடைய கேடில்லாத நாட்டுக்குரியவனே!-எ - று.

உவராவீகை வேளிரெனக் கூட்டுக.

‘வடபான் முனிவன் றடவினுட் டோன்றி’ என்பதற்குக் கதையுரைப்பிற் பெருகும்; அது கேட்டுணர்க.

புலிகடிமாலென்பது இவனுக்கு ஒரு பெயர்.

வேளே! அண்ணல்! இருங்கோவே! புலிகடிமாஅல்! கிழவ! நாடு கிழவோய்! நீ இப்படிப்பட்ட உயர்ந்தகுடியிற் பிறந்தவனாதலால், யான்தர இவரைக் கொண்மதியெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

யான் இவருடைய தந்தைதோழனாதலானும் அந்தணனாதலானும் யான்தர நீ இவரைக் கோடற்குக் குறையில்லையென்பது கருத்து.


(கு - ரை.) 1. புறநா. 13 : 1. 2. புறநா. 110 : 3 - 4.

4. படுமணி யானை : புறநா. 72, 165, 351; நற். 227.

2-5. புறநா. 200 : 9 - 12, குறிப்புரை.

8. தடவு : இச்சொல் தடமெனவும் வழங்கும்; திருச்சிற். 202, கொளு, பேர். உரையைப் பார்க்க; “தடத் தெரியை” (தக்க. 475)

விசுவபுராணசாரமென்னும் தமிழ்நூலின் பதிகத்தில் 15-ஆம் செய்யுளில், “சம்புமா முனிவன் வேள்வித் தழறரு மரபில் வந்தோன்” எனவும், இரட்டையர்களருளிச்செய்த ஏகாம்பரநாதருலாவில், “சம்பு குலத்தொருவன்” எனவும் வந்திருத்தலின், இதில் ‘வடபான் முனிவன்’ என்றது அச்சம்பு முனிவனாக இருத்தல் கூடுமோ வென்று ஊகிக்கப்படுகின்றது.

9. புறநா. 37 : 11, குறிப்புரை.

10-12. துவரை - மைஸுரைச்சார்ந்த துவாரஸமுத்திரமென்னும் நகரம்; இந்நகரில் அரசர் பதினெண்மரும் பதினெண்குடிவேளிரும் இருந்தனரென்றும், அவர்களை அகத்தியமுனிவர் அழைத்துப் போந்து பல இடத்தும் தாபித்தன ரென்றும், அவர்களுள் இருங்கோவேள் சிற்றரசனென்றும் தெரிகின்றது; இதனை, ‘துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்.....கொண்டு போந்து’, மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக்குடிப்பிறந்த வேளிர்’ (தொல். பாயிரம்; அகத்திணை. சூ. 32) என வரும் நச்சினார்க்கினியர் வாக்கியங்களால் உணர்க.

14. புறநா. 203 : 11.

15. மு. புறநா. 202 : 10; தபங்கரென்னுமுனிவர் ஒருகாட்டில் தவஞ்செய்கையில் ஒருபுலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க. அதுகண்ட அம்முனிவர் அங்கு வேட்டையாடிவந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி ‘ஹொய்ஸள’ என்று கூற, அவன் அப்புலியைத் தன் அம்பால் எய்துகடிந்தமையால் ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப்பட்டானென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸந்திகாதேவியைச் சளனென்னும் அரசன் வணங்கச் சென்றபோது புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக்கோயிலிலிருந்த பெரியவர் அவனை நோக்கி ‘ஹொய்ஸள’ என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அது கொண்டு அதனைக் கொன்றமைபற்றி ‘ஹொய்ஸளன்’ என்றும், ‘புலிகடிமால்’ என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர்.

17. புறநா. 363 : 1.

(201)