202
வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
கடிய கதழு நெடுவரைப் படப்பை
5வென்றி நிலைஇய விழுப்புக ழொன்றி
இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்க்
கோடிபல வடுக்கிய பொருணுமக் குதவிய
நீடுநிலை யரையத்துக் கேடுங் கேளினி
நுந்தை தாய நிறைவுற வெய்திய
10ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
நும்போ லறிவி னுமரு ளொருவன்
புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே யியறே ரண்ணல்
எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர்
15கைவண் பாரி மகளி ரென்றவென்
தேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும
விடுத்தனென் வெலீஇயர்நின் வேலே யடுக்கத்
தரும்பற மலர்ந்த் கருங்கால் வேங்கை
மாத்தகட் டொள்வீ தாய துறுகல்
20இரும்புலி வரிப்புறங் கடுக்கும்
பெருங்கல் வைப்பி னாடுகிழ வோயே.

திணையும் துறையும் அவை.

இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது

(இ - ள்.) வெட்சியையுடைய காட்டின்நடுவண் வேட்டுவர் அலைப்பத் தனக்குப் புகலிடங் காணாத கடமாவினது நல்ல ஏறு வரைச்சாரன் மணிமேலே கிளம்பவும் சிதறிய பொன் விளங்கவும் விரையவோடும் நெடிய மலைப்பக்கத்து வெற்றிநிலைபெற்ற சிறந்த புகழ்பொருந்திச் சிற்றரையம் பேரரையமென இருகூற்றாற் பெயர்பெற்ற உட்குப் பொருந்திய பழைய ஊரின்கட் பலகோடியாக அடுக்கப்பட்ட பொன்னை நுங்களுக்கு உதவிய நீடியநிலையையுடைய அரையத்தினது கேட்டையும் இனிக்கேட்பாயாக; அது கெடுதற்குக் காரணம்: நினது தாளால் தரப்பட்ட பொருளையன்றி நுந்தையுடைய உரிமையை நிறையப்பெற்ற தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே! நும்மையொக்கும் அறிவினையுடைய நும் குடியுள் ஒருவன், புகழ்ந்த செய்யுளையுடைய கழாஅத்தலையாரென்னும்புலவரை அவமதித்ததனால் உண்டான பயன்; இயற்றப்பட்ட தேரையுடைய தலைவ! இவர் எவ்வியுடைய பழைய குடியிலே படுவார்களாக; பின்னை இவர் கைவண்மையையுடைய பாரிமகளிரென்று சொல்லிய எனது தெளியாத புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே! யான் நின்னை விடை கொண்டேன்; நின்வேல் வெல்வதாக; அரைமலையில் முகையற மலர்ந்த கரிய காலையுடைய வேங்கையினது கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூப் பரந்த பொற்றைக்கல் பெரும்புலியினது வரியையுடைய புறத்தை யொக்கும் பெரிய மலையிடத்து ஊர்களையுடைய நாட்டையுடையோய்!-எ - று.

புலிகடிமால்! அண்ணல்! நாடுகிழவோய்! அரையத்துக் கேடும் கேள், இனி; அது கழாத்தலையை இகழ்ந்ததன்பயன்; இப்பொழுது எவ்வி தொல்குடிப் படீஇயர்; இவர் பாரிமகளிரென்ற புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே! நின்னைவிடுத்தேன்; நின்வேல் வெல்வதாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

ஒலியற்கண்ணி - தளிர்மாலையெனினும் அமையும்.

நீடுநிலை யரையத்துக் கேடும் கழாத்தலையை இகழ்ந்ததன் பயனென்ற உம்மையான், இவ்விகழ்ச்சியும் உனக்குக் கேடுதருமென்பதாயிற்று.

அது கெடுதற்குக்காரணம், கழாத்தலையை நுமருள் ஒருவன் இகழ்ந்ததனால்; அவன் வாக்குத் தப்பாதாகலின், அவன் வசையாகப் பாடினானென்று சொல்லுவர்; அதுவேயென்பதாம்.

‘வெலீஇயர் நின்வேல்’ என்றது குறிப்புமொழி.

‘நுந்தை தாய நிறைவுற வெய்திய’ என்பதூஉம், நும்போலறிவின்’ என்பதூஉம் இகழ்ச்சிதோன்ற நின்றன.

வேங்கைவீ தாய துறுகல் இரும்புலி வரிப்புறங் கடுக்குமென்ற கருத்து: ஏதம் செய்யாததூஉம் ஏதம்செய்வதுபோலக் கண்டார்க்கு அச்சம் வரத் தோன்றுமென்றமையான், இதுவும் இகழ்ச்சிதோன்ற நின்றது.


(கு - ரை.) வெட்சிக்கானம் : குறுந். 209 : 5.

2. மு. புறநா. 157 : 10. 1-2. புறநா. 193 : 1 - 2.

6. மு. மணி. பதி. 32, 4 : 39.

10. புலிகடிமால் : புறநா. 201 : 15, குறிப்புரை.

16. ‘தேற்றகில்லேமென்பது, தேற்றாப் புன்சொ னோற்றிசின்: என்பது போலத்தெளிதற்கண் வந்தது’ (திருச்சிற். 45, பேர்.) கலித். 92 ; 50.

18. “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை” (நற். 112; குறுந். 26); “கருங்காற், பொன்னிணர் வேங்கை”,

“கருங்கால் வேங்கை” (நற். 151, 168, 257)

18-20. வேங்கைப்பூப் பரந்த பாறை புலிபோற்றோன்றுமென்பது பின்வருவனவற்றாலும் விளங்கும்: “கருங்கால் வேங்கை வீயுகு துறுகல், இரும்புலிக் குருளையிற் றோன்றும்” (குறுந். 47); “மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின, அழுகை மகளிர்க் குழுவை செப்ப” (பரி. 14 : 11 - 2); “குறவ ரூன்றிய குரம்பை புதைய, வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம், புலிசெத்து” (அகநா. 12); “கருங்கா லின வேங்கை கான்றபூக் கன்மேல், இருங்கால் வயவேங்கை யேய்க்கும்” (திணைமாலை. 26): “நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாக நண்ணி, மறமனை வேங்கை யெனநனி யஞ்சும்” (திருச்சிற். 96); கலித். 38 : 6.
21. தொல். விளிமரபு, சூ. 12, ந. மேற்.

(202)