திணை - அது; துறை - கையறுநிலை. வேள்பாரி துஞ்சியவழி அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது. (இ - ள்.) முசுக்கலை கிழித்துண்டலாற் பீறிய முழவுபோலும் பெரிய பலாப்பழம் வில்லையுடைய குறவர்க்கு அதன்பெருமையாற் சில நாளைக்கு இட்டுவைத்துண்ணும் உணவாகும் மலையுடைய நாட்டை யுடையோய்! பெரிய வண்மையையுடைய பாரி! நீயும் யானுங்கலந்த நட்பிற்குப் பொருந்த ஒழுகாயாய் நீ என்னை வெறுத்தாயாகக் கடவை, நீ எனக்கு உதவிசெய்த யாண்டுகளும், பெருமைதக்க தலைமையினையுடைய நட்பிற்குப் பொருந்தாமல் யானும் நின்னோடு கூடப் போதுதற்கு இயையாது நீ ஈண்டுத் தவிர்கவெனச் சொல்லி இப்படி வேறுபட்ட தன்மையை யுடையையாதலின், நினக்கு யான் பொருந்தினேனல்லாமையான் ; இங்ஙனம் பொருந்திற்றிலே னாயினும் இப்பிறப்பின் கண் நீயும் யானுங்கூடி இன்புற்றிருந்தவாறு போலக் காட்டி மறுபிறப்பினும் இடைவிடாத காட்சியினையுடைய நின்னோடு கூடிவாழ்தலை உயர்ந்த விதி கூட்டுவதாக...எ - று. உலந்த யாண்டு’ என்று பாடமாயின், கழிந்த யாண்டென்க. மற்று: அசைநிலை. |