8
வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ
திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப
ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக்
5கடந்தடு தானைச் சேர லாதனை
யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்
பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி
மாறி வருதி மலைமறைந் தொளித்தி
அகலிரு விசும்பி னானும
10பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே.

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி; பூவைநிலையுமாம்.

சேரன்மான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.

(இ - ள்.) உலகத்தைக் காக்கும் அரசர் வழிபாடு சொல்லிநடக்க நுகரும் இன்பத்தை விரும்பிப் பூமி பிறவேந்தருக்கும் பொதுவென்னும் வார்த்தைக்குப் பொறாது தன் நாடு இடஞ்சிறிதென்னும் மேற்கோள் செலுத்த மடியாத, உள்ளத்தையும் பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும் வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையையுமுடைய சேரலாதனை எவ்வாறொப்பை? மிக்க செலவையுடைய மண்டிலமே! நீ பகற்பொழுதை நினக்கெனக் கூறுபடுப்பை; திங்கள் மண்டிலத்திற்கு முதுகிட்டுப் போதி; தெற்கும் வடக்குமாகிய இடங்களில் மாறிமாறி வருவை; மலையின்கண்ணே வெளிப்படாது கரப்பை; அகன்ற பெரிய ஆகாயத்தின்கண்ணும் பகற்பொழுது விளங்குவை, பல கிரணங்களையும் பரப்பி - எ - று.

மாறிவருதி (8) என்பதற்கு இராசிதோறும் மாறிவருதி யெனினுமமையும்.
வீங்குசெலன்மண்டிலமே! வரைதி; இறத்தி; வருதி; ஒளித்தி; நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக்குறைபாடெல்லாமுடைய நீ சேரலாதனை யாங்கன மொத்தியோவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

ஒழுகவென்னுமெச்சம் (1) நுகருமென ஒருசொல் வருவித்து அதனோடு கூட்டி முடிக்கப்பட்டது; ஒழுகவும் போகம் நுகரவும் வேண்டி யெனினும் அமையும். வேண்டி, பொறாது, துரப்ப என நின்ற வினையெச்சங்கள் ஒடுங்காவென்னும் பெயரெச்சமறையின் முதனிலையோடு முடிந்தன.

இனி, ‘பகல்விளங்கலை‘ என்னும் பாடத்திற்குத் 1திங்கண்மண்டிலமாக்கி, ‘மாறிவருதி’ என்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும் பிறவும் அதற்கேற்ப வுரைப்ப (உரைப்பவர் இளம்பூரணர்)


(கு - ரை.) 1. “தொன்றுபட்டு வழிமொழிய” (புறநா. 17 : 4)

2. புறநா. 51 : 45; 189 : 1 - 2 “பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு” (கலித். 68) ; “அரசன் போகம் வேண்டிப் பொதுச் சொற் பொறானாய்” (நெடுநல். அவதாரிகை); “கொடியு முரசுங் கொற்ற வெண் குடையும், பிறர்கொளப் பொறாஅன் றானே கொண்டு” (சிதம்பர மும்மணி. 25)

4. “ஓம்பா தீயு மாற்ற லெங்கோ” (புறநா. 23 : 33); “ஓம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து” (பதிற். 42 : 13)

5. “ஒன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற, வென்வேலான்” (கலித். 27 : 15 - 6)

6. யாங்கனம் : “நீங்கு கென்றியான் யாங்கன மொழிகோ” (அகநா. 90 : 8); “யாங்கனம் வந்தனை” (மணி. 5 : 41). ஒக்குமெனக் கூறாமல் ஒவ்வாதெனக்கூறலும் உவமையாமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம. சூ. 33, பேர்.

7. “மலர்ந்த ஞாலம் புலம்புபறக் கொடுப்ப” (அகநா. 4 : 5); “அழிகுநர் புறக்கொடை” (பு. வெ. 55, கொளு.)

8. புறநா. 65 : 6 - 8. 10. புறநா. 374 : 17 - 8.

மு. “ஒரீஇக் கூறலும்” (தொல். உவம. சூ. 35, இளம்.) என்பதற்கு மேற்கோள்; “வையங் காவல......பல்கதிர் விரித்தே’ என்னும் பாட்டினுள், ‘கடந்தடு தானைச் சேரலாதனை’ என்னுந்துணை உவமத்திற்கு வந்த

அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ளவைத்தானென்பது. என்னை? வெஞ்சுடர் வழியென்னுந்துணை உவமத்திற்குரிய அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ளவைத்தானென்பது. இனி, ‘பொழுதென வரைதி’ என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவமத்திற்கு மறுத்துக் கொள்ளவைத்தானென்பது. என்னை ? வெஞ்சுடர் வழித்தோன்றிய அரசனைத் தண்சுடரோடு உவமிப்பான், ‘பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும்’ என்றதனாற் பொருளினை உவமையாகக்கூறாது உள்ளுறையுவமம்போலக் கொள்ளவைத்துப் பின்னர் உவமத்திற்கு அடையாயவற்றுள், ‘வையங்காவலர் வழிமொழிந்தொழுக’ என்றான். வழிமொழிதலென்பது வேற்றரசர்க்குத் தம் தன்மையென வேறின்றித் தன்னகப்படுத்தல்; ஆதலால் தத்தம் ஒளியொடு படுத்து ஒழிந்தகோளுஞ் செல்லத் தானுஞ் செல்லும் மதியமென்று எதிர்மறுத்துக் குற்றங்கூறும் குறிப்புப்படவைத்தானென்பது. ‘போகம் வேண்டி பொதுச்சொற் பொறாஅது’ எனவே இன்பநுகர்வு முற்றுச் சிறப்பில்லாக் கட்டுரை யெய்தானெனவும் அவனோடு உவமிக்கின்ற மதியமாயின் இருபத்தெழுவர்மகளிரொடு போகந்துய்த்துச் சிறப்பில்லாத கட்டுரை புனையுமென்றும் எதிர்மறுத்துக் கொள்ளவைத்தான். சிறப்பின்மையென்பது, எல்லார்க்கும் ஒத்தவாற்றான் அறஞ்செய்யாது உரோகிணிமேற் கழிபெருங்காதலனெனப்படுதல் போல்வன. ‘இடஞ் சிறிதென்னு மூக்கந்துரப்ப’ எனவே, எஞ்ஞான்றுந் தன்னெல்லைக்கண்ணே வரும், மதிமண்டிலமென்று எதிர்மறுத்துக்கொள்ளப்படும். ‘ஒடுங்காவுள்ளம்’ எனவே மதியம் தேய்ந்தொடுங்கு மென்பது கொள்ளப்படும். ‘ஓம்பா வீகை’ எனவே, நாடோறும் ஒரோவோர் கலையாகப் பல்லுயிர்க்கும் இன்பம் பயக்குமாற்றால் தருவதல்லது தானுடையதெல்லாம் ஒரு காலே கொடாத மதியமெனப்படும். ‘கடந்தடுதானை’ எனவே மதிக்குத் தானையாகிய தாரகையெல்லாம் பகைக்கதிராகிய பருதிமண்டிலத்துக்குத் தோற்குமென்றானாம். இவ்வாற்றான் உவமான அடையெல்லாம் எதிர் மறுத்துக்கொள்ளப்பட்டன. இனி, பொருட்குரிய அடையும் அவ்வாறே எதிர்மறுத்துக்கொள்ளப்படு மென்றவாறு. ‘விலங்குசெலன்மண்டிலம்’ எனவே, கடையாயினார் கதியிற் செல்லு மதியமென்று பாட்டுடைத்தலைவன் தலையாயினார் கதியிற்செல்லுமென்றான். ‘பொழுதென வரைதி’ எனவே, நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தியென்றதனான் இவன் பொழுது செய்யானெனவும், ‘புறக்கொடுத்திறத்தி’ எனவே, தோற்றார் போன்று ஒளி மழுங்கிச் செல்கின்றாயென்பதனால் சுடர்போல விளங்கிப் பிறர் தோற்றோடக்காயும் இவனெனவும், ‘மாறிவருதி’ எனவே, திங்கடோறுமாறிப் பிறத்தியென்பதனான் இவன் நிலைபெற்றானெனவும், ‘மலைமறைந்தொளித்தி’ எனவே மாலைசார்ந்தவழித் தோன்றாயென்பதனான் இவன் தன்னாட்டு மலைமீக்கூறுமெனவும், ‘அகலிரு விசும்பினானும்’ எனவே, இவன் இவ்வுலகத்து நிலைபேறுடையனெனவும், ‘பகல்விளங்காய்’ எனவே, இவன் இருபொழுதும் விளங்குமெனவுங் கொள்ளப்படும். முற்பகுதியும் பிற்பகுதியும் வேறுபட வருதலின் இது வேறுபட வந்ததாயிற்று” (தொல். உவம. சூ. 32, பேர்.) (8)


1. புறநா. 27 : 11 - 4; “மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும், தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால்” ('சீவக. 2932); “உலகினர் செல்வ நந்த லுரைப்பொரு ளிரண்டுங் கோடல், இலகுவெண்மதியங் காட்ட வென்றுமோர் தகைத்தாய்ச் சேறல், விலகுதஞ் செல்வ மெங்கள் விழுப்பொரு ளாய வண்ணல், அலகில்செஞ் சோதிப் பின்னலணிமதி யுணர்த்த வாழ்வார்” (கூவப். நைமிசா. 14); “அகன்மதி வளர்ந்து தேய்ந்தற் றச்சக போகத் தன்மை, நகலுறக் காட்ட” (தியாக. நைமிச. 16)