168
அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக்
கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத பூழி
5நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
10வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல்
15நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவி லம்பின் வில்லோர் பெரும
கைவள் ளீகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப்
20பாடுப வென்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே.

(பி - ம்.) 12 ‘கூதுளங்கவினிய’

திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை;இயன்மொழியும் அரசவாகையுமாம்.

பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கந்தப்பிள்ளைசாத்தனார் பாடியது.

(இ - ள்.) அருவி ஒலித்திழியும்வேய் பயின்ற அகன்றவிடத்து மிளகுகொடி வளரும்மலைச்சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவியகிழங்குபிறழக் கிளறித் தன்னினத்தோடே கூடத்தறுகண்மையையுடைய கேழலுழுத புழுதிக்கண்ணே நல்லநாள்வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலமுழாதேஅதுவே உழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறியதினை முற்பட விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்லநாளின்கண்ணே புதிதுண்ணவேண்டி மரையாவைக் கறந்தநுரை கொண்ட இனிய பாலை மான்தடி புழுக்கப்பட்டபுலால் நாறும் பானையினது நிணந்தோய்ந்த வெளியநிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலைநீராகவார்த்து ஏற்றிச் சந்தனவிறகான் உவிக்கப்பட்டசோற்றைக் கூதாளி கவின்பெற்ற மலைமல்லிகை நாறும்முற்றத்து வளவிய குலையையுடைய வாழையினது அகன்றஇலைக்கண்ணே பலருடனே பகுத்துண்ணும் ஊரப்படாத குதிரையென்னும்மலைக்குத் தலைவ! கூரிய வேலையும் நறைக்கொடியின்நாராற் றொடுக்கப்பட்ட வேங்கைப்பூமாலையினையும்வடித்தல் பயின்ற அம்பினையுமுடைய வில்லாட்களுக்குத்தலைவ! கையான் வழங்கும் வள்ளிய கொடையினையும்கடிய குதிரையையுமுடைய கொற்ற! உலகத்தெல்லையுள் தமிழ்நாடுகேட்கப் பொய்யாத செவ்விய நா வருந்தும்படிவாழ்த்திப் பாடுவரென்று சொல்லுவர் பரிசிலர்,நாடோறும்; கொடாத வேந்தர் நாணக் கெடாது பரந்தநினது வசையில்லாத வாலிய புகழை-எ - று.

கிழவ! பெரும! கொற்ற! பரிசிலர்நின்புகழை ஏத்திப் பாடுபவென்ப; அதனால், யானும்நின்பாற் பரிசில் பெற்றுப் பாடுவேனாக வேண்டுமெனப்பரிசிற்றுறைக்கேற்பக் கூறியதாக்குக.

ஊராக்குதிரை : மலைக்கு வெளிப்படை.நறை - 1 பச்சிலைக்கொடி.


(கு - ரை.) 2 “கறிவள ரடுக்கத்து”(குறுந். 288); “கறிவளர் சிலம்பில்” (ஐங்குறு.243; சிலப். 28 : 114); “கறியிவர் சிலம்பின்” (அகநா.112 : 14); கலித். 52 : 17.

5-6. “நாளால், உறையெதிர்ந்துவித்தியவூ ழேனல்” (திணைமாலை. 1)

3 - 6. “கிழங்ககழ் கேழ லுழுத சிலம்பிற்,றலைவிளை கானவர் கொய்தனர்” (ஐங்குறு. 270); “கேழலுழுத கரிபுனக் கொல்லை” (ஐந். எழு. 11)

4 - 8. “உய்யாமன் மலைந்துமராருயிரை, மெய்யாக விராமன் விருந்திடவே, கையாரமுகந்துகொ டந்தகனா, ரையாபுதி துண்ட தறிந்திலையோ”(கம்ப. சடாயுவுயிர். 96)

11. சாந்தவிறகு : புறநா. 108 : 1 -2. உவித்தல் : புறநா. 395 : 4. புன்கம் : “புன்கமிதவை பொம்மல் போனகம்” (திவாகரம், ஆறாவது.)

12. “நாறிதழ்க் குளவியொடுகூதளங் குழைய” (புறநா. 380 : 7); “குல்லை குளவிகூதளங் குவளை” (நற். 376); “குறுந்தாட் கூதளியாடியநெடுவரை” (குறுந். 60); “குளவியொடு வெண்கூதாளந் தொடுத்த கண்ணியன்” (முருகு. 191 - 2)

14. ஊராக்குதிரை : புறநா. 158 : 8;குதிரைமலை பிட்டனுக்குரிய தென்பதை, “வசையில்வெம்போர் வானவன் மறவ, னசையின் வாழ்நர்க்கு நன்கலஞ்சுரக்கும், பொய்யா வாய்வாட் புனைகழற் பிட்டன்’மைதவ ழுயர்சிமைக் குதிரைக் கவாஅன்” (அகநா.143 : 10 - 13) என்பதனாலு முணர்க.

11 - 4. “சாந்த ஞெகிழியின், ஊன்புழுக்கயருங் குன்ற நாட” (அகநா. 172 : 12 - 3)

15. நறைநார் - நறைக்கொடியிலிருந்துஎடுத்த நார;் “நறைப்பவர்” (நற். 5); “தண்கமழ்நறைக்கொடி கொண்டு” (ஐங்குறு. 276); “நறைநார்வேங்கைக் கண்ணியன்” (அகநா. 282 : 9 - 10)

18. தமிழகம் : பதிற். 2 - ஆம்பத்தின்பதிகம் : சிலப். 3 : 37; மணி. 17 : 62.

19. புறநா. 53 : 11 - 2. 148 : 6 - 7.

(168)


1 ‘பைங்கொடி - பச்சிலைக்கொடி;எல்லாவற்றினும் பசுத்திருத்தலின், பச்சிலை யென்றுபெயர்பெற்றது’ (முருகு. 190, ந.) என்பது இங்கே அறியற்பாலது.