23
வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற்
சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்
5கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பத மொழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலி னூர்தொறும்
கடிமரந் துளங்கிய காவு நெடுநகர்
10வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்
கனையெரி யுரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென்
றின்னு மின்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோனென
15ஞால நெளிய வீண்டிய வியன்படை
ஆலங் கானத் தமர்கடந் தட்ட
கால முன்பநிற் கண்டனென் வருவல்
அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
20பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளி லத்த மாகிய காடே.

திணையும் துறையும் அவை; துறை - நல்லிசைவஞ்சியுமாம்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

(இ - ள்.) வெண்மையில்லாத வலிய வயிரக்கம்பத்தையுடைய கூடத்தில் நிற்றலை வெறுத்துச்சென்று யானை படிந்து நீருண்டதாகக் கலக்கமுற்ற துறையையும் கார்காலத்து நறிய கடம்பினது பசிய இலையோடு விரவிய மாலையையுடைய சூரபன்மாவைக்கொன்ற முருகனது கூளிச்சுற்றத்தை யொக்கும் (பி-ம்.முருகனது சுற்றத்தை யொக்கும்) நின்னுடைய கூரிய நல்ல அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர் தம்மாற் கொள்ளலாவதனை முகந்துகொண்டு கொள்ளாத ஒழிபொருளை மாற்றார் முகந்து கொள்ளப்படும் உணவாக்காமற் சிதறிய நிலங்களையும் வடித்தல்பயின்ற கோடாலி வெட்டுதலான் ஊர்தோறும் காவல் மரங்கள் நிலைகலங்கிய காவையும் நெடிய நகரின்கண் தொழில் புனைந்த 1நல்லமனைகளிடத்து விரும்பும் அடுதீயைக்கெடுக்க மிக்க தீ முழங்கிய பக்கத்தையும் பார்த்துப் பகைவர் நாண நாடோறும் அவரிடத்துச் சென்று இன்னமும் இத்தன்மையன பலவுஞ் செய்குவன், யாவரும் தன்னை அணுகவொண்ணாத சூழ்ச்சித் தெளிவினையுடையோனெனக் கருதி உலகம் பொறையாற்றாது நெளியத் திரண்ட பரந்த படையினையுடைய தலையாலங்கானத்தின்கட் போரை எதிர்நின்று கொன்ற காலன்போலும் வலியையுடையோய்! நின்னைக் கண்டேனாய் வந்தேன;் அற்ற கோட்டையுடைய பெரிய கலை புலியின்கண்ணே அகப்பட்டதாகச் சிறிய மறியை அணைத்துக்கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய மான்பிணை பூளையோங்கிய அஞ்சத்தக்க பாழிடத்து வேளையினது வெளிய பூவைத்தின்னும் ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டுவழியே-எ-று.

காலமுன்ப! துறையும் புலனும் காவும் மருங்கும் நோக்கி இன்னும் இன்னபல செய்குவன் துணிவினோனென உட்கொண்டு காட்டின் கண்ணே நின்னைக் கண்டு அக்காட்டுவழியே வந்தேனெனக் கூட்டி வினை முடிவுசெய்க.

வருவலென்பது, ஈண்டு இறந்தகாலப்பொருட்டாய் நின்றது.

இவனைக் காணாமுன்னே கண்டு வந்தேனென்றான், இவன்செய்த வென்றியெல்லாம் கண்டமையின்.

பாசிலைத்தெரியல் முருகனென இயையும்.

நவியம்பாய்தலென்பது, கருவி கருத்தாவாய் நின்றது.

கலை புலிப்பாற்பட்டெனக் சிறுமறி தழீஇய மடப்பிணை பறந்தலை வேளைவெண்பூக்கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம்புதல்வரை ஓம்புதற்பொருட்டு இறந்துபடாது அடகு தின்று உயிர் வாழ்கின்றாரென்பதோர் பொருள் தோன்ற நின்றது.

இனித் துணிவினோனென்று பிறர்சொல்லவெனவும், கண்டனென் வருவலென்பதனைக் காலமயக்கமாக்கிக் கலங்கியதுறைமுதலாயினவற்றை நோக்கி இன்னும் இவ்வாறு பகைவர் நாட்டின்கண் மேற்செல்வனென நினைந்து காட்டிடத்தே நின்னைக் காணியவந்தேனெனவும் உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. வெளிறு-வயிரமின்மை; “இரும்பினை வெளிற்றின் புன்சா யன்ன” (முருகு.312)

1-2. பகைவருடைய காவற்குளங்களைத் தம்முடைய யானைகளாற் கலக்குவித்தமை இவ்வடிகளாற் கூறப்பட்டது, புறநா.15 : 9-ஆம் அடி முதலியவற்றைப் பார்க்க.

3-4. புறநா.33 : 12 - 3; “மறுவில் கற்பின் வாணுதல் கணவன்....மராஅத், துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்”, “செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு, சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை” (முருகு.6-11, 202 - 3); “காரலர் கடம்பன்” (மணி.4 : 49); “கார்க்கடப்பந் தாரெங் கடவுள்” (சிலப்.24 : பாட்டுமடை. ‘நேரிழை’)

5. கூளியர், ஏவல் செய்வோரென்பதற்கு இவ்வடி மேற்கோள்; முருகு.282, ந.; “கொடுவிற் கூளியர் கூவை காணின்” (மலைபடு.422)

7. புலனென்றது, பகைவரிடங்களை.

8-9. பகைவருடைய காவன்மரத்தை அரசர் வெட்டுவிப்பர்; புறநா.36 : 6 - 9, 57 : 10; “கடிகாவி னிலைதொலைச்சி” (மதுரைக்.153); “பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின், முழாவரை முழுமுதறுமியப் பண்ணி” (பதிற்.5-ஆம் பத்து. பதி.); “பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு, வேம்புமுத றடிந்த வேந்துவாள் வலத்துப், போந்தைக் கண்ணிப் பொறைய (சிலப்.27 : 124-6)

10. வெவ்வெரி - விரும்பப்படும் நெருப்பு; வெம்மை - விருப்பம்; என்றது, மடைப்பள்ளித் தீயை.

11. “கனையெரி பொத்தி” (மணி.2:42)

10-11. புறநா.6 : 21-2, குறிப்புரை.

15. “கார்விளை மேக மன்ன கவுளழி கடாத்த வேழம், போர்விளை யிவுளித் திண்டேர் புனைமயிர்ப் புரவி காலாள், வார்விளை முரசம் விம்ம வானுலாப் போந்த தேபோல், நீர்விளை சுரிசங் கார்ப்ப நிலநெளி பரந்த வன்றே” (சீவக.433)

16. “ஆலங் கானத் தஞ்சுவர விறுத்த, வேல்கெழு தானைச் செழியன்” (நற். 387 : 7 - 8)

17. புறநா.19 : 3, 41 : 3, “மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி” (பொருந.140); “ஆற்றல், காலனோ டொக்கும்” (பெருங். 1. 36 : 100 - 101); “எண்மரின் வலிய னாய யமன்” (கம்ப.மிதிலை. 107)

20-21. பாழான இடங்களில் வேளைச்செடி முதலியவைகள் உண்டாவது இயல்பு, 19-ஆம் அடி முதலியவற்றிற்கு எழுதப்பட்டிருக்கும் இரண்டாவது பொருள் மிக அருமையானது; அது குறிப்பு என்றும், தொனியென்றும் கூறப்படும்.

(23)


1 “நல்லிற் சிதைத்ததீ நாடொறு நாடித்தம், இல்லத்தி லாக்குதலால்” (நாலடி, 225)