25
மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல
ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ
துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்
5குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணி
பிணியுறு முரசங் கொண்ட காலை
நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய
10முலைபொலி யாக முருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர
அவிரறல் கடுக்கு மம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே.

திணை - வாகை; துறை - அரசவாகை.

அவனைக் கல்லாடனார் பாடியது.

(இ - ள்.) மீன் விளங்கும் வானத்தின்கண் பரந்த இருள் நீங்க ஓங்கிச் செல்லுதல் முறைமையையுடைய தனது தன்மையிற் பிழையாது வலிய வெம்மை 1முறுகிய உட்குப்பொருந்திய ஞாயிறு நிலாவிளங்கும் திங்களுடனே நிலத்தைப் பொருந்தினாற்போலப் பகைத்தற்கரிய வலியையுடைய வஞ்சினங்கூறிய இருவேந்தரை வருத்துதற்கரிய போர்க்களத்தின்கண்ணே மாயப் பொருது அவருடைய வாராற் பிணிப்புற்ற முரசத்தைக் கொண்டகாலத்து நின்றநிலையிலே நின்று நின்னைச் சூழ்ந்து கொண்ட வீரரைப் புரிந்தெறிதலால் திண்ணிய கொளுத்துக் கலங்கிக் கெடுதல் பிழைத்தது, நினது வேல்; செழிய! முலைபொலிந்த மார்பம் அழல அறைந்துகொண்டு அறிவுமயங்கியுற்ற அளவற்ற அழுகையாரவாரத்தை யுடைய ஒண்ணுதல் மகளிர் கைம்மைநோன்பிலே மிக விளங்கும் அறலை யொக்கும் அழகிய மெல்லிய குவிந்த கரிய மயிரினைக் கொய்த பரிசைக் கண்டு-எ - று.

செழிய! மகளிர் கூந்தல்கொய்தல்கண்டு நின்வேல் சிதைதல் உய்ந்ததெனக் கூட்டுக.

ஈண்டுச் செலன்மரபெனவும், ஐம்பாற்குவையிருங்கூந்தலெனவும் பாடமோதுவாருமுளர்.

உய்ந்தன்றோ; ஓ : அசைநிலை.


(கு - ரை.) 3-4. சேர சோழர்க்கு ஞாயிறும் மதியமும் உவமை; புறநா. 55 : 4 - 6, 367 : 13 - 4.

5. ஒன்றுமொழி : புறநா.71-3; “தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னும், இன்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலா, நன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார், என்பாரை யோம்பே னெனின்யானவ னாகவென்றான்” (சீவக.443);. “நின்னையறி வன்பெரிது நின்முறையு ளாய, கன்னியையொர் காளைபிறனெய்வது கண்டு, மன்னுமண வில்லுள்வயி றாரவயில் கின்றாய்க், கின்னுமுள வோபுதிய வென்றுமிக நக்கான்” (சூளா.அரசியல். 156); “வினையிலென் மகன்றனுயிர் வேறுசெய் வித்தோனைக், குனிசிலையினாளையுயிர் கோறல்புரி யேனேல், மனைவியய லான்மருவல் கண்டுமவள் கையாற், றினையளவு மோர்பொழுது தின்றவனு மாவேன்” (வி. பா.பதின்மூன்றாம்போர். 184)

5-7. வென்ற அரசர் பகைவருடைய முரசைக் கவர்ந்துகொள்ளுதல் மரபு, புறநா.26 : 6 - 7, 72: 8 - 9, 179 : 4; “அரசுபட வமருழக்கி, முரசுகொண்டு களம்வேட்ட....வேந்தே”, “வேந்தர், இன்னிசை முரச மிடைப்புலத் தொழிய.....புறம்பெற்று” (மதுரைக்.128 - 30, 348 - 50); “எழுவர் நல்வல மடங்க வொருபகல், முரசொடு வெண்குடை யகப்படுத்து” (அகநா.36 : 20 - 21)

8. மடை - மூட்டுவாய்; புறநா.150.

8-9. தலைவனது வேலினைப் புகழ்ந்ததற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 17, இளம்.

10. உருப்ப : புறநா.237 : 10.

11. மெய் - அறிவு; “விதமுறு வடிவங் கண்டே மெய்யொருப் பட்ட தில்லை” (திருவால.30 : 31). பூசல் - அழுகையாரவாரம்; “கரையாதேனிடு பூசல் கண்டுமொன், றுரையாய்” (கம்ப.கிட்கிந்தா. அரசியல், 8)

13. அறல் - ஆற்றில் நீர் அற்றற்றுச் செல்லுமிடத்துள்ள கருமணல், பகைவருடைய மனைவியர் கூந்தல் களைதலைக் கண்டு இரங்கி இவன் போர் செய்தலைத் தவிர்ந்தானென்பது கருத்து.

(25)


1 முறுகிய - மிகுந்த; சீவக.1503; காஞ்சிப். திருநகர். 1.