289
ஈரச் செவ்வி யுதவின வாயினும்
பல்லெருத் துள்ளு நல்லெருது நோக்கி
வீறுவீ றாயு முழவன் போலப்
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
5மூதி லாள ருள்ளுங் காதலிற்
றனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை
இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோ ளின்றென் றறையும்
10மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் குரலே.

(பி - ம்.) 5. ‘முரண்டலை களித்தமியளுங்’,‘முளைத்தலை, கழித மீளுங்’ 6 ‘தெய்திய’ 7 ‘இவற்கீதென்னாதறகுமனறிசினே’9 ‘பூக்கோளினரையும்’

திணை . . . . . ; துறை. . . முல்லை.

கழாத்தலையார்.


(கு - ரை.) 1. ஈரச்செவ்வி - ஈரமாகியபருவம்.

2. பல உழவெருதுகளுள்ளும்.

3. வீறு வீறு ஆயும் - அவ்வெருதின் குணங்களைவேறு வேறாக ஆராய்கின்ற.

4. குடிப்பாடு - குலத்திற்குப் பொருந்தியபழைய வழக்கம்.

5. மூதிலாளர் - மறக்குடியிற் பிறந்தவர்.காதலின் - அன்பினால்.

6. பசும்பொன் மண்டை யென்றது, பசியபொன்னாற் செய்யப் பெற்ற கட்பெய்கலத்தை; மண்டைஅதனிலுள்ள கள்ளுக்கு ஆகுபெயர்.

6 - 7. இவற்கு ஈகென்னும் - இவ்வீரனுக்குக்கொடுவென்பான் : “இவற்கீத் துண்மதி கள்ளே” (புறநா.290 : 1)

8. பாசறை - படைவீட்டில்.

9. பூக்கோள் - பூவைக்கொள்ளுதல்;அஃதாவது, வெட்சி முதலிய புறத்திணைக்குரிய பூக்களைத்தம் தொழிலுக்கேற்பச் சூடுதற்கு நல்ல நாளிற் கைக்கொள்ளல்;“பூக்கோ ளெனவேஎய்க் கயம்புக் கனனே” (புறநா.341 : 9)

10. மடிவாய்த் தண்ணுமை - தோலை மடித்துப்போர்த்த வாயையுடைய மத்தளம்; ”மடிவாய்த் தண்ணுமைநடுவ ணார்ப்ப” (நற். 130 : 2); “மடிவாய்த் தண்ணுமைநடுவட் சிலைப்ப” (பெரும்பாண். 144) இழி சினன்: புறநா. 287 : 2, குறிப்புரை.

9 - 10. புறத்திணைக்குரிய பூக்களைக்கொள்ளுதற்குத் தண்ணுமை அறைதல் மரபென்பது, “பூக்கோளேய தண்ணுமை” (அகநா. 174 : 4), “பூக்கோட் டண்ணுமைகேட்டொறுங் கலிழ்ந்தே.” (தகடூர்யாத்திரை) என்பவற்றாலும்விளங்கும்.

மு. வெட்சித்திணைத்துறைகளுள்,மறங்கடை கூட்டிய குடிநிலை கூறியதற்கு (தொல்.புறத்திணை. சூ. 4, இளம்.) மேற்கோள்.

(289)