62
வருதார் தாங்கி யமர்மிகல் யாவது
பொருதாண் டொழிந்த மைந்தர் புண்டொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்த றீட்டி
நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டிர்
5எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்
தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே
உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே
10பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக்
களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
15மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே
வாடாப் பூவி னிமையா நாட்டத்து
நாற்ற வுணவி னோரு மாற்ற
அரும்பெற லுலக நிறைய
விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே.

(பி - ம்.) 7 ‘விறற்போர்’,‘வயப்போர்’

திணை - தும்பை; துறை - தொகைநிலை.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன்வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும்போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார்பாடியது.

(இ - ள்.) வருகின்ற தூசிப்படையைத்தடுத்துப் போரின்கண் ஒருவர் ஒருவரை வெல்வேமெனமிகுதல் எங்ஙனமாவது? பொருது அக்களத்தின்கட்பட்டவீரரதுபுண்ணைத்தோண்டி அவ்வுதிரந்தோய்ந்த செய்யகையால் தமது மயிரைக் கோதி நிறமிக்க வடிவையுடையபேய் மகளிர் மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமானஓசையையுடைய பாறையினது தாளத்தேயாடப் பருந்து ஊனைத்தின்னப் பொருந்திய படையானே போரின்கண் வெகுண்டுஅறத்தான் அடர்த்துச்செய்த வலிய போரையுடையஅரசர் இருவரும் பட்டார்; அவர் கொற்றக்குடையும்தளர்ந்தன; புகழமைந்த தலைமையையுடைய முரசுவீழ்ந்தன;பல நூறாக அடுக்கப்பட்ட 1 பதினெண்பாடைமாக்களாகிய படைத்தொகுதி இடமில்லையாம்படி தொக்கஅகன்ற இடத்தையுடைய பாடிவீட்டின்கட் போர்க்களம்

மதாக்கிக்கொள்ளுதற்கு உரியோர்ஒருவரின்றிக் கண்டார்க்கு அச்சம்வர உடனே மடிந்ததுபூசல்; அவர் 2 பெண்டிரும் பச்சையிலைதின்னாராய்க் குளிர்ந்த நீரின் கண் மூழ்காராய்அவர் மார்பத்தைக்கூடி அக்களத்தின்கண்ணே உடன்கிடந்தார்; வாடாத கற்பகத்தின் தாரினையும்இமையாத கண்ணினையும் 3 நாற்றமாகிய உணவையுமுடையதேவர்களும் மிகப்பெறுதற்கரிய உலகம் நிரம்பவிருந்து பெற்றார்; அதனாற் பொலிக நுங்கள்புகழ்-எ - று.

அனந்தல்-பறைகொட்டுவார் கை புண்படுதலின்,மந்தமாக ஒலித்தல்.

அறத்தின் மண்டுதலாவது படை பட்டபின்பெயராது சென்று இருவேந்தரும் பொருதல். பட்ட இருவேந்தரும் அக்களத்துக் கிடக்கின்றபடியைக்கண்டு தம் மனத்தோடு நொந்து அவரைநோக்கிக் கூறுகின்றாராதலான்,நும் புகழென முன்னிலையாக்கிக் கூறினார்.

வேந்தர் மாய்ந்தனர்; குடைதுளங்கின; முரசு ஒழிந்தன; அமர் உடன்வீழ்ந்தது; பெண்டிரும்மார்பகம்பொருந்தி அமைந்தனர்; நாற்ற உணவினோரும்விருந்து பெற்றனர்; இவ்வாறான பின்பும் யாம் அமரினைமேற்கொண்டு பொருது வெல்வேமென்று தாம் தாம் நினைந்தநினைவு எவ்வண்ணமாவதென்று தம்நெஞ்சொடு கூறிப்பின் பொலிகநும்புகழேயென அவ்வரசர் கிடந்தவாறுகண்டு கூறியவாறு.

மறத்தின் மண்டியவென்றுபாடமோதுவாரும் உளர்.

வருதார்தாங்கி அமர்மிகல் யாவதென்பதற்குஇவர்கள் செய்தபடி கண்டு.......இனிச் சிலர் பொருது வேறல்எங்கேயுள்ளதென வியந்து கூறியதாக உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. தார்-தூசிப்படை;முன்படை. தொல். புறத்திணை. சூ. 5 : 15; பு. வெ.28.

2-5. புண்ணைத்தோண்டுதலும் கூந்தலைக்கோதுதலும்சீர்தூங்குதலும் பேய்ப்பெண்டிருடைய தொழில்; உணவுகிடைத்த களிப்பால் ஆடினர்.

4-5. “இடிக்குரன் முரசின்மு னெழுந்தனளாடி” (பெருங். 1. 37 : 246); “தானேயா டும்பேய்,பறைபெற்றா லாடாதோ பாய்ந்து” (புறத்திரட்டு)

7. புறநா. 9 : 1 - 6.

10. பைஞ்ஞிலம்-தொகுதி; பஞ்ஞிலம்,பஞிலமெனவும் வழங்கும்; “நனந்தலைப் பைஞ்ஞிலம்வருகவிந் நிழலென”, “உண்ணாப்பைஞ்ஞிலம் பனித்துறைமண்ணி” (பதிற். 17, 31) ; வேறுபடு பைஞ்ஞிலம்:“வேறுபல் பெரும்படை” (முல்லை. 43)

12. புறநா. 53 : 5, குறிப்புரை.

13-5. “தயங்கிணர்க் கோதை தன்றுயர்பொறாஅன், மயங்கினன் கொல்லென மலரடி வருடித்,தலைத்தா ணெடுமொழி தன்செவிகேளாள், கலக்கங் கொள்ளாள்கடுந்துயர் பொறாஅள், மன்னவன் செல்வுழிச் செல்கயானெனத், தன்னுயிர் கொண்டவ னுயிர்தேடினள்போற், பெருங்கோப் பெண்டு மொருங்குடன்மாய்ந்தனள்” (சிலப். 25 : 80 - 86); “காதலரிறப்பிற் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகினுயிர்த்தகத்தடங்கா, தின்னுயி ரீவர்.....பத்தினிப் பெண்டிர்”(மணி. 2 : 42-8); “நாடினார் நாடியே நனைவருங் கொம்பனார்,வாடினார் கணவர்தம் மார்புறத் தழுவியே, வீடினார்”(கம்ப. அக்ககுமாரன். 48); பு. வெ. 262.

16-7. “வாடாப் பூவி னிமையா நாட்டத்து,நாற்ற வுணவினுருகெழு பெரியோர்” (மதுரைக். 457- 8)
19. புகழ்வாழ்க : புறநா. 58 : 19.

மு. தும்பைத்திணையுள்,வாள்வாய்த்து இருபெருவேந்தர் தாமும் சுற்றமும்ஒருவரும் ஒழியாத்தொகைநிலையென்னுந்துறைக்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 14, இளம். சூ. 17, ந.

(62)


1. “பதினெட்டுப் பாடையும் கண்டவர்”(திருமந்திரம்); “முட்டிலா மூவறு பாடை மாக்கள்”(சீவக. 93); “விரவுமொழிக் கட்டூர்” (பதிற்.90 : 30); “ஐம்பதி னிரட்டி யவனச் சேரியும், எண்பதினிரட்டி யெறிபடைப் பாடியும், அளப்பருஞ் சிறப்பினாயிர மாகிய, தலைப்பெருஞ்சேனைத் தமிழச் சேரியும்”(பெருங். 3. 4 : 8-11)

2 பெண்டிர் பச்சையிலை தின்னுதலென்றது,கணவர் இறந்தபின்னர் அவர் மனைவியர் வேளைக்கீரைமுதலியவற்றைத் தின்று கைம்மை விரதங் காத்தலைக்குறிப்பித்தது; புறநா. 246; பு.வெ. 257. இச்செய்யுளிற்கூறப்பட்ட பெண்டிர்; தலையாகு கற்பையுடையாராதலின்தம் கணவரோடு உயிர் துறந்தார்; மணி. 3 : 42-7.

3 ‘நாற்றவுணவு - அவியாகிய வுணவு’ மதுரைக்,458, ந.