204
ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர்
கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று
5தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே
ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்
10புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற்
புலவேன் வாழிய ரோரி விசும்பிற்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

(பி - ம்.) 4 ‘லதனி னுயர்ந்தன்று’ 6 ‘ராகுவர்’ 8 ‘சேற்றொடு’ 10 ‘பழிப்பி னல்லதை’

திணையும் துறையும் அவை.

வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.

(இ - ள்.) 1இழிந்தோன்கூற்றால் ஈயெனச் சொல்லி இரத்தல் இழிந்தது; அவ்வீயென்றதனெதிர் ஈயேனென்று சொல்லி மறுத்தல் அவ்விரத்தலினும் இழிந்தது; ஒருவன் 2இரப்பதன்முன்னே 3அவன்குறிப்பை முகத்தானுணர்ந்து இதனைக் கொள்வாயாகவென்று சொல்லித் 4தான் இரந்துகொடுத்தல் ஒருவற்கு உயர்ந்தது; அதனை அவன் அவ்வாறு கொடுப்ப அதனெதிர் கொள்ளேனென்று சொல்லி மறுத்தல் அக்கொடையினும் உயர்ந்தது; தெளிந்த நீர்ப்பரப்பின் ஒலிக்கும் திரையையுடைய பெரியகடல் நீரை உண்ணாராவர், தண்ணீரை விரும்பினோர்; ஆவும் மாவுஞ்சென்று நீரை உண்ணக் கலங்கிச் சேற்றொடுகூடிய சிறுமையையுடைத்தேயாயினும் உண்ணும் நீரையுடைய தாழ்ந்தவிடத்துச் செல்லும் வழி பலவாகும்; தாம் புறப்பட்டுச் செல்லப்பட்ட வழியிடத்து அப்பொழுது செய்யும் புள் நிமித்தத்தையும் புறப்பட்ட முழுத் தத்தையும் (முகூர்த்தத்தையும்) பழித்தலல்லது தாம் பரிசில் பெறக்கருதிச் செல்லப்பட்டோரை அவர் ஈத்திலராயினும் பரிசிலர் பழியார்; அதனால் நீ எனக்கு இன்னையாயினும் வெறேன், வாழ்வாயாக, ஓரி! ஆகாயத்தின்கண் மின்முதலிய தொகுதியையுடைய மழைபோல யாவர்க்கும் எப்பொருளையும் வரையாது வழங்கும் வண்மையையுடையோய்! நின்னை-எ - று.

ஓரி! வள்ளியோய்! பரிசிலர் புள்ளும் பொழுதும் பழித்தலல்லது உள்ளிச்சென்றோர்ப் பழியலர்; அதனால், யானும் நின்னைப் புலவேன்; வாழியரெனக் கூட்டுக.

மேற்கூறிய இரத்தல்முதல் நான்கிற்கும் ஈயெனவிரத்தலால் இழிபு பெற்றுக் கொள்ளேனெனும் உயர்பு யான்பெற்றிலேனென்பதூஉம், அவ்வாறிரப்பவும் ஈயேனென்றாற்போலப் பரிசில் நீட்டித்தலால் உள்ள இழிபு பெற்றுக் கொள்ளெனக் கொடுக்கும் உயர்ச்சி நீ பெற்றிலையென்பதூஉம் கருத்தாகக் கொள்க.
இதனால், ஈயேனென்னும் இழிபினும் கொள்ளெனக் கொடுக்கும் உயர்பினும் நினக்குத் தக்கதறிந்து செய்யென்பது கூறினாராம்.

5‘பெருங்கட லுண்ணா ராகுப நீர்வேட்டோர்’ என்பதனாற் செல்வரேயாயினும் வள்ளியோரல்லார்பாற் செல்லேனென்பதும், ‘உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்’ என்பதனால் நீ வள்ளியையாகலின் நின்பால் வந்தேனென்பதும் கொள்ளப்படும்.


(கு - ரை.) 1-2. புறநா. 154 : 8, 180 : 2 குறிப்புரையைப் பார்க்க; கலித். 2 : 15.

4. ‘அவர், வேண்டாவென்று மறுக்கவும் தாம் வலியப் போகவிட் டென்றவாறு’ (மதுரைக். 220, ந.)
1-6. ‘ஈயெனவிரத்தலென்னும் புறப்பாட்டினுள், தெண்ணீர்......வேட்டோரே என்றவழி, நின்செல்வம் கடல்போற் பெரிதேனும் பிறர்க்கு இனிதாய் நுகரப்படாதென வசையைச் செம்பொருளாகாமற் கூறியவாறு காண்க.’ (தொல். செய். சூ. 126, .)

5-9. புறநா. 154 : 1 - 3.

10-11. புறநா. 124 : 1 - 3.

13. புறநா. 159 : 19; “கருவி மாமழை” (குறுந். 42); “கருவி வானம்” (சீவக. 725)

(204)


1. “ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே” (தொல். எச்ச. சூ. 49)

2. இரப்பதன்முன்னே கொடுத்தல்: “இல்லது நோக்கி யிளிவரவு கூறாமுன், நல்லது வெஃகி வினைசெய்வார்” (பரி. 10 : 87 - 8); “இலனென்னு மெவ்வ முரையாமை யீதல், குலனுடையான் கண்ணே யுள” (குறள். 223)

3.புறநா. 3 : 25, குறிப்புரை.

4.“கவர்வனர் போலக் காதலி னுய்த்தும்” (பெருங். 1. 39 : 54)

5.“உவர்க்கட லன்ன செல்வரு முளரே, கிணற்றூற் றன்ன நீயுமாருளையே” (பழம்பாடல்); “கடல்பெரிது, மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல், உண்ணீரு மாகி விடும்” (ஒளவையார்)