175
எந்தை வாழி யாத னுங்கவென்
நெஞ்சந் திறப்போர் நிற்காண் குவரே
நின்னியான் மறப்பின் மறக்குங் காலை
என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
5என்னியான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி யறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
10பலர்புர வெதிர்ந்த வறத்துறை நின்னே.

(பி - ம்.) 6 ‘கொடித்தேரோரியர்’

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

(இ - ள்.) என்னுடைய இறைவ !வாழ்வாயாக; ஆதனுங்க ! யான் ஒன்றைச் சொல்ல நினைப்பின்,நினது புகழல்லது சொல்லாமையான், எனது நெஞ்சை வெளிப்படுத்திக்காணலுறுவோர் ஆங்கு நின்னைக் காணாநிற்பர்;நின்னையுடைய யான் நின்னை மறப்பின் மறக்குங் காலமாவதுசொல்லக் கேட்பாயாக; என்னுடைய உயிரானது என்னுடம்பைவிட்டு நீங்குங் காலத்தும் என்னை யான் மறக்குங்காலம் உண்டாயின் அப்பொழுது மறப்பேனல்லது மறவேன்.வென்றிவேலை யுடைய விசும்பைத் தோயும் நெடிய குடையினையும் கொடியணிந்த தேரினையுமுடைய நிலமுழுதும் ஆண்டவேந்தரது திண்ணிய ஆர்சூழ்ந்த சக்கரம் இயங்குதற்குக்குறைக்கப்பட்ட வெள்ளிமலைக்கு அப்பாலாகிய உலகத்திற்குக்கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர்களால்நிறுத்தப்பட்டு இருபொழுதும் ஒரு பெற்றியே நிலைபெற்றுவிளங்கும் பரந்த இடத்தையுடைய ஆதித்தமண்டிலத்தையொப்பநாள்தோறும் இரவு பகலென்னாமல் பலரையும் காத்தலைஏற்றுக்கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகியநின்னை-எ - று.

எந்தை! வாழி; ஆதனுங்கனே? மண்டிலத்தன்னஅறத்துறை நின்னை நின்னுடையேனாகிய யான் மறப்பின்மறக்குங் காலமாவது என் யான் மறப்பின் மறக்குவென்;ஆதலால், என்னெஞ்சைத் திறப்போர் நிற்காண்குவரெனக் கூட்டி வினைமுடிக்க.

மோரியராவார் சக்கரவாளசக்கரவர்த்திகள்;விச்சாதரரும், நாகருமென்ப.‘திகிரி திரிதரக் குறைந்த’என்றோதி, சக்கரவாளத்திற்கு அப்பாற்பட்ட உலகத்துமோரியர் திகிரி ஊடறுத்துச் சேறலிற் குறைந்தபிளவுபட்ட வாயிற்கு அப்பாலாகிய உதயகிரிக்கண்நிலைபெற்ற ஆதித்த மண்டலமென்று உரைப்பாரும் உளர்.


(கு - ரை.) 1. ஆதனுங்கன் : (புறநா.389 : 13)

6. ஓரியர் என்றபெயர் இந்நூலிலன்றிவேறெங்கும் காணப்படவில்லை.

8. “உலக விடைகழி யொருங்குடனீங்கி” (சிலப். 10 : 27)

6 - 8. “விண்பொரு நெடுங்குடையியறேர் மோரியர், பொன்புனை திகிரி திரிதரக்குறைத்த, அறை”, “வம்ப மோரியர், புனைதேர் நேமியுருளியகுறைத்த, விலங்குவெள் ளருவிய வரை”, “மோரியர்,தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு, விண்ணுறவோங்கிய பனியிருங்குன்றத், தொண்கதிர்த்திகிரி யுருளிய குறைத்த வறை” (அகநா. 69, 251,281)

(175)