86
சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
5ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.

(பி - ம்.) 3 ‘னாவது’

திணை - வாகை; துறை - ஏறாண்முல்லை.

1 காவற் (பி - ம். காதற்) பெண்டின் பாட்டு.

(இ - ள்.) சிறிய இல்லின்கண்நல்லதூணைப் பற்றிநின்று நின்மகன் எவ்விடத்துளனோவென்றுகேட்பை; என்னுடைய மகன் எவ்விடத்துளனாயினும் அறியேன்;புலி கிடந்துபோன கன்முழைபோல அவனைப் பெற்ற வயிறோஇஃது; அவள் செருக்களத்தின்கண்ணே தோன்றுவன்;அவனைக் காணவேண்டின் ஆண்டுச்சென்று காண்-எ - று.

‘ஈன்றவயிறோவிது’ என்ற கருத்து:புலிசேர்ந்துபோகிய அளைபோல அவனுக்கு என்னிடத்துஉறவும் அத்தன்மைத்தென்பதாம்.

ஓருமென்பதூஉம் மாதோவென்பதூஉம்அசைச்சொல்.


(கு - ரை.) 3. புறநா. 282 : 3.

4-5. கல் அளை - கல்லாலாகிய குகை.“வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமாலிந்நின்ற, வாடன் முதியாள் வயிற்றிடம்-கூடார்,பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா, இரும்புலி சேர்ந்தவிடம்” (பு. வெ. 54)

5-6. நற்றாய்க்கும் தனக்கும் வேறுபாடின்மையின்,‘ஈன்றவயிறோ விது’ என்று இங்ஙனம் கூறினாள்.

6. போர்க்களத்தான்-போர்க்களத்தின்கண்;உருபுமயக்கம்.

(86)


1. காவற்பெண்டு - செவிலித்தாய்; மணி.7 : 58 : சிலப். 29 : உரைப்பாட்டு மடை.