171
இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே பின்னும்
முன்னே தந்தனெ னென்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யல னாகி
5யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப
அருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
10அருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே
அன்னா னாகலி னெந்தை யுள்ளடி
முள்ளு நோவ வுறாற்க தில்ல
ஈவோ ரரியவிவ் வுலகத்து
15வாழ்வோர் வாழவவன் றாள்வா ழியவே.

திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.

அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்பாடியது.

(இ - ள்.) இன்று போகினும்தருவன;் சிறிதுநாட் கழித்துப் போகினும் தருவன்;பின்னையும் முன்னே தந்தேனென்னாது பயின்று நாடோறும்செலினும் பொய்யானாகி யாம் வேண்டினபடியே எம்முடையவறிய கலத்தை நிரப்புவோன்; தான் விரும்பினபடியேதன்னுடைய அரசன் உவப்பச் செய்தற்கரிய போர்த்தொழில்களைமுடிப்பானாக, திருந்திய வேலையுடைய கொற்றன்; இனமாகியமிக்க வெவ்விய சேக்களைத் தொழுவோடே (கொட்டிலோடே) வேண்டினும் களத்தின்கண் மலிந்த நெல்லின் குவையைவேண்டினும் பெறுதற்கரிய அணிகலங்களைக் களிற்றுடனேவேண்டினும், பெரிய தகைமையை யுடையான், பிறர்க்கும்அத்தன்மைய அறஞ்செய்யுங் கூற்றையுடையான்; அத்தன்மையனாதலால்,எம்முடைய இறைவனது உள்ளடிக்கண் முள்ளும் உளப்படநோவச் சென்று உறா தொழிய வேண்டும்; ஈவோர் அரிதாகியஇவ்வுலகத்தின்கண் உயிர்வாழ்வோர் வாழும் பரிசுஅவனது தாள் வாழ்வதாக-எ - று.

பிறர்க்குமென்பது, எச்சம். தில்: விழைவின்கண் வந்தது.

திருந்துவேற் கொற்றன், பெருந்தகை,சேக் களனொடு வேண்டினும், நெல்லின் குப்பை வேண்டினும்,அருங்கலம் களிற்றொடு வேண்டினும் நமக்கே யன்றிப்பிறர்க்கும் அத்தன்மைய அறஞ்செய்யும் தகுதியையுடையன்;யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன்;தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப அருந்தொழில்முடிப்பானாக வேண்டுவது; எந்தை உள்ளடி முள்ளும்நோவவுறாற்க; வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவெனக்கூட்டுக.

‘வாழ்வோர் வாழ்வு’ என்றோதி,வாழ்வோர் வாழும் வாழ்வெல்லாம் அவன் தாள்வாழ்கவென்றுரைப்பினும் அமையும்.
தாளை முயற்சியெனினும் அமையும்.


(கு - ரை.) 1 - 5. புறநா. 142 : 5.

1 - 7. புறநா. 42 : 1, 101 : 1 - 3, 180 : 1- 7, 203 : 1 - 6.

8. சே - காளைகள்.

10. புறநா. 151 : 3 - 4, 153 : 2.

12 - 3. ‘உள்ளங்காலில் முள்ளுத்தையாமலிருக்கவேண்டும்’ என்பது ஒரு பழமொழி.

15. புறநா. 70 : 19, குறிப்புரை; 382,386.

மு. ‘இன்று செலினும்....தாள்வாழியவே;இது படர்க்கையாகிய இயன்மொழிவாழ்த்து’ (தொல்.புறத்திணை. சூ. 35, ந.) (171)