353
ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்கா சணிந்த வல்குல்
ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇத்
தருமமொ டியல்வோள் சாய னோக்கித்
5தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
வினவ லானா வெல்போ ரண்ணல்
யார்மக ளென்போய் கூறக் கேளினிக்
குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
நாட்கடா வழித்த நனந்தலைக் குப்பை
10வல்வி லிளையர்க் கல்குபத மாற்றாத்
தொல்குடி மன்னன் மகளே முன்னாட்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
..................................
................யுழக்கிக் குருதி யோட்டிக
15கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர்
அஞ்சுதக வுடையரிவ டன்னை மாரே

(பி - ம்.) 15 ‘நுதிவா’

திணையும் துறையும் அவை.

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.


(கு - ரை.) 1. கம்மியன் - பொற்கொல்லன்.

3. ஈகைக்கண்ணி - பொன்னாலாகிய மாலையை; "ஈகையங் கண்ணிபோற், பிணிநெகி ழலர்வேங்கை விரிந்தபூ" (கலித்.32 : 4 - 5) தைஇ - அணிந்து.

5. நிறுத்திய தேரையுடையையாய் ; வெளுத்த கண்ணையுடையையாய்.

6. அண்ணல் : விளி. 8. போர்பு - போர். குன்று - சிறுமலை,

8 - 9. காலையிற் போரையழித்துக் கடாவிட்ட தானியக்குப்பைகளை.

10. அல்குபதம் - இட்டுவைத்துண்ணும் உணவு; "சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும்" (புறநா.236 : 2). மாற்றா - இல்லை யென்னாத. 12. கூறி - மணம்பேசி.

15. கதுவாய் - வடு. துதி - நுதி. எஃகம் - வேல்.

16. பஞ்சி - துகில்; "நெய்க்கிழி வைக்கப்பட்டார்", "புண்மேற் கிழிபோற் றுறத்தல்" (சீவக. 818, 2960)

17. தன்னைமார் - தமையன்மார்.

(353)