57
வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
5நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
10கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக் கந்தாற் றாவே.

(பி - ம்.) 11 ‘யானைக்குக் கந்’

திணை-வஞ்சி; துறை-துணைவஞ்சி.

அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

(இ - ள்.) யாதொருகல்வியை மாட்டாராயினும் அதனை வல்லாராயி னும் புகழ்தலைப் பொருந்தியவர்கட்கு மாயோனையொத்த சொல்லுதலமைந்த தலைமையையுடைய புகழ் அமைந்த மாற! நினது ஒரு காரியஞ் சொல்லுதலுடையேன் ; அது யாதெனின், நின்பகைவர் நாட்டைக் கொள்ளுங்காலத்து அவர் நாட்டின்கண் வளைந்த கதிரையுடைய வயலை நின்னுடைய வீரரும் கொள்ளைகொள்க; அகலிய இடத்தையுடைய பெரிய ஊரைத் தீயுஞ் சுடுக; மின்நிமிர்ந்தாற்போன்ற நினது 1பாடஞ் செய்கின்ற விளங்கிய நெடிய வேல் பகைவரை அழிக்கினும் அழிக்க; யாவதும் காவன்மரத்தை வெட்டுதலைப் பாதுகாப்பாயாக, நின்னுடைய நெடிய நல்ல யானைகட்கு முன்பு நட்டுநிற்கின்ற தறிகள் ஆற்றமாட்டாவாதலான்-எ-று.

2அவை இளமரமாதலால், நின் நெடுநல்யானைக்குத் தறியாதற்குப் பொறையாற்றாவென்று உரைப்பாருமுளர்.

3வல்லவர்க்கும் மாட்டார்க்கும் ஒப்பப்புகழ்ந்து முடியவொண்ணா மையான், மாயோனன்னவென்றார்; அன்றி அவ்விருவர்க்கும் ஒப்ப அருள் பண்ணுதலின், அவ்வாறு கூறிற்றெனினும் அமையும்.

மாற! நின்யானைக்குக் கந்து ஆற்றாவாதலால், கடிமரந்தடிதலோம் பெனக் கூட்டுக.

நின்யானைக்குக் கந்து ஆற்றாவாதலாற் கடிமரந்தடிதலோம்பெனக் கூறுவான்போற் சந்துசெய்விக்கும் நினைவாற் கூறினமையின், இது துணைவஞ்சிஆயிற்று.


(கு - ரை.) 1. வல்லார் : எதிர்மறை வினையாலணையும் பெயர்.

2 : 3 புறநா. 56 : 13, குறிப்புரை.

1-3. புறநா. 27 : 15; “வல்லினும் வல்லா ராயினுஞ் சென்றோர்க்கு.....நிறைய வீசு, மாஅல் யானை யாஅய்” (அகநா. 152)

5. ‘நீ’ என்பது ஆண்பாலில் வந்ததற்கு மேற்கோள்; தொல். பெயர். சூ. 39,தெய்வச்.; ந.

7. “ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது” (புறநா. 240 : 10)

5-7. புறநா. 16 : 16-7, குறிப்புரை.

10. புறநா. 23 : 8-9, குறிப்புரை.

11. நெடுநல்யானை : புறநா. 72 : 4.

மு. ‘..........கூறுதல் கருத்தாயின் வஞ்சியாம்; புகழ்தல் கருத்தாயிற் பாடாண்டிணையாம்’ (தொல். புறத்திணை. சூ. 28, இளம்.); பாடாண் கொற்றவள்ளையென்பர்; தொல். புறத்திணை. சூ. 34, ந.

(57)


1. பாடம் - சோதி; “திலகபாடமிருள் பருகவந்து” (தக்க. 27); “பல்லாயிர மாமணி பாடமுறும்” (கம்ப. சரபங்கர். 11)

2. “ஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉம், காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்” (நாலடி. 192)

3. பரி. 3 : 28 - 30, பரிமேல்.