58
நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
5நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
இளைய தாயினுங் கிளையரா வெறியும்
அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவ ரேறே நீயே
அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
10நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
15நீனிற வுருவி னேமி யோனுமென்
றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
20ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால், நல்ல போலவு நயவ போலவும்
25தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
30கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த

குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே.

(பி - ம்.) 10. ‘மெளியவரைய’

திணை-பாடாண்டிணை; துறை-உடனிலை.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

(இ - ள்.) நீ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன், பரிய அடி மாய்ந்த கோளியாகிய ஆலத்துக் கொழுவிய நிழலையுடைய நெடிய கொம்பை அதன்வீழ் தாங்கினாற்போலத் தனக்கு முன்னுள்ளோர் இறந்தாராகத் தான் தளராது நல்லபுகழையுடைய பழைய குடியைத் தடுமாற்றமற அணைத்துத் தான் சிறிதேயாயினும் கிளையுடனே பாம்பை எறியும் பொறுத்தற்கரிய வெள்ளிய உருமேறுபோல இளமைக் காலத்தும் பகைவரைக் காணப்பொறாத போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியுள் ஏறுபோல்வான்; நீ, அறந்தாங்கும் உறையூரின்கண் அரசன்; இவன், நெல்லும் நீரும் யாவர்க்கும் எளியவெனக் கருதி அவைபோலாது யாவர்க்கும் பெறுதற்கரிய 1பொதியின் மலையிடத்துச் சந்தனமும் கடலிடத்து முத்துமென இவற்றை ஒலிக்கும் குரலையுடைய 2முரசம் மூன்றுடனே ஆளும் தமிழ் பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்; நீர், பால்போலும் நிறத்தையுடைய பனைக்கொடியையுடையோனும் நீலநிறம்போலும் திருமேனியையுடைய ஆழியையுடையோனுமென்று சொல்லப்படும் இரண்டு பெரிய தெய்வமும் ஒருங்கு நின்றாற்போல உட்குப்பொருந்திய காட்சியோடு அச்சம்வர விளங்கி இத்தன்மையீராகுதலின், இதனினும் இனிய பொருள் உளவோ? இன்னமும் கேளீர்; நும்முடைய புகழ் நெடுங்காலம் செல்வதாக; நும்முள் ஒருவீர்க்கு உதவுவீராக, நீங்களிருவீரும் கூடி நிற்கின்ற இந்நிலையின் வேறுபடீராயின் ஒலிக்கும் திரையையுடைய கடல்சூழ்ந்த இப்பயன் பொருந்திய உலகங்கள் கையகத்தே அகப்படுதல் பொய்யாகாது; ஆதலால் நல்லனபோலே யிருக்கவும் நியாயத்தையுடை யனபோலே யிருக்கவும் பழையோரொழுகிய ஒழுக்கமுடையனபோலே யிருக்கவும் அன்புபொருந்திய நெஞ்சையுடைய நும் இடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலோருடைய 3சிறப்பில்லாத மொழியைக் கேளாது இன்று போல்க, நுமது கூட்டம்; வென்றுவென்று கொலைக்களத்தின்கண் மேம்படுக, நும்முடைய வேல்; வளைந்த வரியை யுடைய புலிவடிவாகச் செய்யப்பட்ட சேய்மைக்கண் விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனையைப் பெரிய நீரின்கண் வாழும் கயலுடனே பொறித்த சிகரங்களையுடையவாக, பிறருடைய குன்றையுடைய நாடுகள்-எ-று.

4குன்றுகெழுநாடென்றதாயினும், கருதியது பிறர்நாட்டுக்குன்றுக ளென்றதாகக் கொள்க.
கோளியென்றது, பூவாதுகாய்க்கும் மரம்.

தழீஇப் (5) பொறாவென (7) இயையும்.

முரசமூன்றாவன:-வீரமுரசும், நியாயமுரசும், தியாகமுரசும்; மணமுரசுடனே ஏனை இரண்டுமுரசென்பாரும் உளர்.

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென முற்றாக உரைப்பாரும் உளர்.

5தொடுபொறி : பெயர்மாத்திரையாய் நின்றது.

ஒருவீர் ஒருவீர்க்கு உதவியாய் வலியையுடையீராய் நீங்கள் இருவீரு மென்பாரும் உளர்.
இருவரரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இஃது உடனிலை ஆயிற்று.


(கு - ரை.) 1. கிழவனை : ஐ முன்னிலைக் கண்வந்தது.

2. “கோடுபல முரஞ்சிய கோளி யாலத்து” (மலைபடு. 268)

‘கோளி - பூவாது காய்க்கும் மரம்; என்னை? கோளியாலத்து என்றார்’ (சிலப். 16 : 22-8, அடியார்.)

2-5.“சிதலை தினப்பட்ட வால மரத்தை, மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக், குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற, புதல்வன் மறைப்பக் கெடும்” (நாலடி. 197); “தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன, ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர், தாங்கல் கட னாகும்” (சீவக. 498)

4-5. “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” (பதிற். 32-7)

6-7. அராவெறியும் உரும் : புறநா. 17 : 38-9, குறிப்புரை; 37 : 1-4, குறிப்புரை; 126 : 19; 366 : 3.

7-8. “நரையிருமி னேறனையை” (மதுரைக். 63)

6-8. “இளைய ராயினும் பகையரசு கடியும், செருமாண் டென்னர்” (சிலப். 4 : 21-2); “மழைதவழும் பெருங்குன்றத்துச், செயிருடைய வரவெறிந்து, கடுஞ்சினத்த மிடறபுக்கும், பெருஞ்சினப்புயலேறனையை” (பதிற். 51 : 25-8)

9.புறநா. 39 : 8-9, குறிப்புரை.

10.புறநா. 70 : 9. 186 : 1.

13. “செழியன், தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை” (சிறுபாண். 65 - 7); “மலையாத, தண்டாரான் கூடற் றமிழ்” (மதுரைக். இறுதிவெண்பா.)

11-3. “சீர்மிகு சிறப்பினோன் றொல்குடிக் குரித்தெனப் பார்வளர்.
முத்தமொடு படுகடல் பயந்த, ஆர்கலி யுவகையர்” (கலித். 105 : 3-5)

15. “நீனிற வுருவி னெடியோன்” (பெரும்பாண். 402); “மேனி நெடியோன்” (சிலப். 5 : 172)

14-5.புறநா. 56 : 3-6, குறிப்புரை; நற். 32 : 1 - 2.

14-6. “மன்புன லிளவெயில் வளாவவிருள் வளர்வெனப். பொன்புனை யுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே” (பரி. 15 : 27-8)

18. இன்னீர்-இத்தன்மையையுடையீர்.

25. “பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது” (மதுரைக். 192)

28. “இன்றை யன்ன நட்பு” (குறுந். 199). “புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா, னட்பாங் கிழமை தரும்” (குறள், 785) என்பதன் உரையில், ‘புணர்ச்சி-ஒருதேயத்தாராதல்; இன்றே போல்கநும் புணர்ச்சி யென்றதும் அதனை’ என்பர் பரிமேலழகர்.

29.புறநா. 158 : 28, 309 : 7.

30-32. அரசர் தாம்வென்ற நாட்டிலுள்ள மலையில் தம் கொடியை எழுதுவித்தல் மரபு; “கயலெழுதிய விமயநெற்றி” (சிலப். 17 : 1. உரைகள்); “பருப்பதத்திற் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல்” (பெரியாழ்வார்திருமொழி); “நககோடி பலகோடி புலியேறு தனியேற”, “பொறைசூழ் வரையிற் புலியே றெழுதும்” (தக்க. 4, 185, குறிப்புரை.) குயின்ற வென்னும் அடையடுத்தமையால், தொடுபொறி யென்பது பெயர் மாத்திரையாய் நின்றது. தாமிருக்கும் நாட்டரசனாதலின் காரிக்கண்ணனார் சோழனையே முன்னிலையாக்கிக் கூறினார்.

(58)


1. (29 - 32. பரி. 3 : 17 - 8, பரிமேல். மேற்)

2. புறநா. 380; “தன்கடற் பிறந்த முத்தி னாரமும், முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத் தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தி னாரமும்......அணியும்.......தென்னவன்” (அகநா. 13); “குடமலைப் பிறந்த வாரமு மகிலும், தென்கடன் முத்தும்” (பட்டினப். 188 - 9); “தென்கடன் முத்துந் தென்மலைச் சந்தும்”, “கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு, தெக்கண மலயகச் செழுஞ்சே றாடி”, “கோவா மலையாரங் கோத்த கடலாரம்” (சிலப். 8 : 19, 14 : 80 - 1, 17; “உள்வரி”); “வெண்டிரைத் தென்கடன் முத்துந் தென்மலைச் சந்தும்” (தஞ்சை. 93)

2. “முரைசுமூன் றாள்பவர் முரணியோர் முரண்டப” (கலித். 132); முரசு மூன்றாவன- வீரமுரசு தியாகமுரசு நியாயமுரசென்பன; தன் முரசும் சேரன்முரசும் சோழன்முரசுமென மூன்றெனலுமாம்” (கலித். 132., உரை); “மன்றல்பே ருதவி வலனுறு வெற்றியால், முன்றிலின் முழங்கு மூவகை முரசும்” (சரபேந்திர. குற. 30 : 35 - 6)

3. “பொதுக்கொண்டகவ்வை” (கலித். 66 : 11) என்புழி, பொது என்பதற்குச் சிறப்பில்லாமையென்று நச்சினார்க்கினியர் எழுதியவுரையும் “இவை பதினாறும் சிறப்பின்மையிற் பொதுச்சீரென்பது காரணக்குறி; பொது சிறப்பின்மையைச் சொல்லுமோவெனிற் சொல்லும்; என்னை? புலமிக் கவரைப் புலமை தெரிதல், புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க, பூம்புன லூர பொதுமக்கட் காகாவாம், பாம்பறியும் பாம்பினகால்’ இதனுட் பொதுவைச் சிறப்பின்மைக்கட் புணர்த்தார் சான்றோராதலின்” (யா. வி. சூ. 13, உரை) என்பதும் இங்கே கூறிய உரையை வலியுறுத்தும்.

4. ‘குன்றகெழு நாடென்றாராயினும் நாடுகெழுகுன்றென்பது கருத்தாயினாற்போல’ (பரி. 3 : 17 - 8, பரிமேல்.)

2. பொறித்த எனப் பின்வருதலின் இங்ஙனம் உரையெழுதினர்; புறநா. 54 : 10.