18
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
5ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய
பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
நுண்ணாரற் பருவராற்
10குரூஉக்கெடிற்ற குண்டகழி
வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
15ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
20உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
25வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
30தள்ளா தோரிவட் டள்ளா தோரே.

(பி - ம்.) 9 ‘நுண்வாரற்’ 10 ‘கெடிற்றுக்’

திணை - பொதுவியல்; துறை - முதுமொழிக்காஞ்சி(பி - ம். பொருண்மொழிக் காஞ்சி)

பாண்டியன் நெடுஞ்செழியனைக்குடபுலவியனார் பாடியது.

(இ - ள்.) ஒலிக்கின்ற கடலானதுமுழுதுஞ் சூழப்பட்டுப் பரந்து கிடக்கின்ற அகன்றஉலகத்தைத் தமதுமுயற்சியாற் கொண்டு தம்முடையபுகழை உலகத்தின்கண்ணே நிறுத்தித் தாமேயாண்ட வலியோருடையவழித்தோன்றினோய்! ஒன்றைப் பத்துமுறையாக அடுக்கப்பட்டதாகிய கோடி என்னும் எண்ணினைக் கடையெண்ணாகஇருத்திய 1 சங்கு முதலாகிய பேரெண்ணினைஉடைத்தாக நினது வாழ்நாள்; நீரின்கண்ணே உறத்தாழ்ந்தகுறிய காஞ்சியினது பூவைக் கவரும் இனமாகியவாளையினையும் நுண்ணிய ஆரலினையும் பரிய வராலினையும்நிறமுடைய கெடிற்றினையும் உடைத்தாகிய குழிந்த கிடங்கினையும்வானமஞ்சும் திருந்திய நெடிய மதிலையும் உடைத்தாகியவளவிய பழைய ஊரினையுடைய வலியவேந்தே! நீ போகக்கடவமறுமையுலகத்தின்கண் நுகருஞ் செல்வத்தைவிரும்பினும்,உலகத்தைக் காப்பாரது தோள்வலியைக்கெடுத்து நீஒருவனுமே தலைவனாதலை விரும்பினும், அவ்வேட்கைக்குத்தக்க செய்கையைக் கேட்பாயாக, இப்பொழுது; பெரியோய்!நீரை இன்றியமையாத உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர்கள்உயிரைக் கொடுத்தார்; உணவை முதலாகவுடைத்து அவ்வுணவால்உளதாகிய உடம்பு; ஆதலால், உணவென்று சொல்லப்படுவதுநிலத்தோடுகூடிய நீர்; அந்நீரையும் நிலத்தையும்ஒருவழிக் கூட்டினவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும்படைத்தவராவர்; நெல் முதலாயவற்றை வித்திமழையைப்பார்த்திருக்கும் புல்லிய நிலம் (புன்செய்) இடமகன்றநிலத்தை உடைத்தாயினும் அது பொருந்தியாளும் அரசனதுமுயற்சிக்குப் பயன்படாது; ஆதலால், கொல்லும்போரையுடைய செழிய! இதனைக் கடைப்பிடித்து விரைந்துநிலங்குழிந்தவிடத்தே நீர்நிலை மிகும் பரிசுதளைத்தோர், தாம் செல்லும் உலகத்துச் செல்வம்முதலாகிய மூன்றினையும் இவ்வுலகத்துத் தம் பேரோடுதளைத்தோராவார்; அந்நீரைத் தளையாதவர்; இவ்வுலகத்துத்தம் பெயரைத் தளையாதோர் - எ - று.

இதனால், நீயும் நீர்நிலைபெருகத்தட்கவேண்டுமென்பது கருத்தாகக் கொள்க.

மற்றும் (16), அம்மவும் (29) அசைநிலை.

உணவின்பிண்டம் உண்டி முதற்றாதலான்,உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் (19 - 20) எனமாறிக்கூட்டுக.

தள்ளாதோர் இவட்டள்ளாதோராதலால்செழிய! இதனை இகழாது வல்லே செய்யென ஒருசொல்வருவித்துரைப்பாரும் உளர். தட்டோர் என்பதற்குத்தம் பெயரைத் தளைத்தோரெனினும் அமையும்.

நீரும் நிலனும் புணரியோர் உடம்பும்உயிரும் படைத்தோரெனவே செல்லுமுலகத்துச் செல்வமும்,வித்திவானோக்கும் புன்புலம் இறைவன்றாட்கு உதவாதெனவேநீர்நிலைபெருகத்தட்டலால் வானோக்கவேண்டாத நன்புலம்இறைவன்றாட்கு உதவி ஞாலங்காவலர் தோள்வலிமுருக்குதலும்,நிலனெளிமருங்கின் நீர்நிலைபெருகத் தட்டோர்இவட்டட்டோ ரெனவே நல்லிசை நிறுத்தலும் கூறப்பட்டன.

நீர்நிலைபெருகத்தட்கவே 2அறன்முதன்மூன்றும் பயக்குமென்பது கூறினமையான், இதுமுதுமொழிக்காஞ்சியாயிற்று.


(கு - ரை.) 1. ‘முழக்கு’ என்பதுஒலித்தற்றொழிற் பண்பை உணர்த்துதற்கு மேற்கோள்;நன். மயிலை. சூ. 458; நன். வி. சூ. 459.

5. “பல்வெள்ள மீக்கூற, வுலகமாண்ட வுயர்ந்தோர் மருக” (மதுரைக். 23 - 4);“அடையடுப் பறியா வருவி யாம்ப, லாயிர வெள்ளவூழி,வாழி யாத வாழிய பலவே” (பதிற். 63 : 19 - 21)

9. “ஆர லீன்ற வையவி முட்டை”(புறநா. 342 : 9)

10. கெடிறு: “இன்கெடிறு சொரிந்தவகன்பெரு வட்டி”, “காக்கை, இருங்கழி யினக்கெடிறாருந் துறைவன்” (ஐங்குறு. 47, 167)

11. வடி - திருத்தம்; “வடித்தேர்த்தானை” (மணி. 15 : 62)

14 - 5. “வார்சான்ற கூந்தல் வரம்புயரவைகலு, நீர்சான் றுயரவே நெல்லுயருஞ் - சீர்சான்ற,தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும், ஓவாதுரைக்கு முலகு” (சிறுபஞ்ச. 46)

16. புறநா. 50 : 14 - 5.

18. “நீரின் றமையா துலகு” (குறள்,20)

18 - 9. “மண்டிணி ஞாலத்துவாழ்வோர்க் கெல்லாம், உண்டி கொடுத்தோருயிர்க்கொடுத் தோரே” (மணி. 11 : 95 - 6)

20. “மக்கள் யாக்கை யுணவின்பிண்டம்” (மணி. 10 : 90) “இசைபடவாழ்வதற்குக்கல்வி ஆண்மை முதலிய பிறகாரணங்களும் உளவேனும் ‘உணவின்பிண்ட முண்டி முதற்று, ஆதலின் ஈதல் சிறந்தது என்பதற்குஞாபகமாக ஈதலென்றார்” (குறள், 231, பரிமேல்.)

24. “வானோக்கி வாழு முலகெல்லாமன்னவன், கோனோக்கி வாழுங்குடி” (குறள். 542)

28 - 9. “குளந்தொட்டு வளம்பெருக்கி”(பட்டினப். 284) (18)


1 “சங்குதரு நீணிதியஞ் சாலவுடைநாய்கன்” (சீவக. 493)

2 புறநா. 28 : 15