364
வாடா மாலை பாடினி யணியப்
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமரு டாமரைப் பெருமலர் தயங்க
மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
5காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டுந் தின்று மிரப்போர்க் கீய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே
அரிய வாகலு முரிய பெரும
10நிலம்பக வீழ்ந்த வலங்கற் பல்வேர்
முதுமரப் பொத்திற் கதுமென வியம்பும்
கூகைக் கோழி யானாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.

(பி - ம்.) 2 ‘தெணிபூவா’ 3 ‘கயங்க’ 7 ‘கீந்தும்’ 8 ‘மகிழ கவமமோ’
‘கூகை கோழியானாந்’ 13 ‘டெயதியதுஞான்று’

திணையும் துறையும் அவை.

அவனைக் கூகைக்கோழியார்.


(கு - ரை.) 1. வாடாமாலை - பொன்னரிமாலை. பாடினி - விறலி.

1 - 3. புறநா. 11 : 16 - 7-ஆம் அடிகளையும், அவற்றின் குறிப்புரையையும், "மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கு, மாடுவண் டிமிரா வழலவிர் தாமரை, நீடிரும் பித்தை பொலியச் சூட்டி, உரவுக்கடன் முகந்த பருவ வானத்துப், பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப், புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின், தொடையமை மாலை விறலியர் மலைய" (பெரும்பாண். 480-86) என்பதையும் பார்க்க.

2 - 3. கேணி பூவாத்தாமரை - பொற்றாமரைப்பூ; "பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை" (புறநா.153 : 7; கலித். 54 : 2); பு. வெ. 216.

4. மைவிடையிரும்போத்து - ஆட்டுக்கிடாய்; "விடைவீழ்த்துச் சூடு கிழிப்ப” (புறநா. 366 : 20) என்பதையும், புறநா.262 - ஆம் பாட்டின் முதலடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

8. மகிழ்கம் - மகிழ்வோமாக.

10. அலங்கல் - அசைதல்.

11. பொத்து - பொந்து. கதுமென இயம்பும் - கேட்போர் திடுக்கிட்டு அஞ்சும்படி சுட்டுக்குவியென்று ஒலிக்கும்; "சாவோர்ப் பயிருங் கூகையின் குரலும்" (மணி.6 : 75)

12. கூகை - பேராந்தை; கோட்டானுமாம். கோழி - காட்டுக்கோழி; கூகைக் கோழி வாகைப் பறந்தலை" (குறுந்.393 : 3). இவ்வடியால் ஆசிரியருடைய பெயர்க்காரணம் புலப்படுகின்றது.

13. தாழிய பெருங்காடு - பிணங்களைக் கவிக்கும் தாழிகளையுடைய மயானம்; புறநா.228 : 11, குறிப்புரை; பெருங். 1. 46 : 83 - 5. பெருங்காடு : புறநா. 250 : 9.

11 - 3. "பொத்த வறையுட் போழ்வாய்க் கூகைச், சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும், கள்ளியம் பறந்தலை" (புறநா.240 : 7 - 9)

எய்திய ஞான்று (13) அரியவாகலு முரிய (9) வெனக் கூட்டுக.

(364)