214
செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
5குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
10மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே.

(பி - ம்.) 2 ‘மாறாஅர்’ 6 ‘துயந்திசினோரே’, ‘துயர்ந்திசினோரே 10 ‘பிறப்பின் வன்மையுங்”

திணை - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி.

அவன் 1வடக்கிருந்தான் சொற்றது

(இ - ள்.) அறவினையைச்செய்வேமோ அல்லேமோவென்று கருதி ஐயப்பாடு நீங்கார் அழுக்குச்செறிந்த காட்சிநீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாதோர்; யானைவேட்டைக்குப்போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்; அதனால் உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தலுண்டாமாயின் அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலுங் கூடும் (பி-ம். கூட்டும்); அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின், மாறிப் பிறத்தலிலேகூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங்கூடும்; மாறிப்பிறவாரென்று சொல்லுவாருள ராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது 2 புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடிநின்று இறத்தல் மிகத் தலையாயது; அதனால் எவ்வாற்றானும் நல்வினைசெய்தல் அழகிது-எ - று.

உயர்ந்திசினோர்க்கென்னும் நான்காவதன்றியும் உயர்ந்திசினோர் செய்வினைமருங்கின் எய்தலுண்டெனின், இவர்க்கு நுகர்ச்சிங்கூடுமென்று உரைப்பினும் அமையும்.

‘பிறவாராயினும்’ என்னும் உம்மை அசைநிலை; உம்மையின்றி ஓதுவாரும் உளர்.

‘காட்சியொடு நீங்கா நெஞ்சத்து’ என்பதூஉம் பாடம்.


(கு - ரை.) 4-5. குறும்பூழ் - ஒருவகைப்பறவை. “பொருமால் கரிவேட்டும் பூழ்வேட்டும் போனார், உரியார் பெறுவ ரொழிந்தார் பெறாரே” (தத்துவ. கலிமடல்.)

7-8. புறநா. 174 : 19 - 20, குறிப்புரை.

6-9. புறநா. 38 : 12 - 6.

(214)


1. புறநா, 65 : 9 - 11, குறிப்புரை,

2 “வசையிலா வண்பயன் குன்று மிசையிலா, யாக்கை பொறுத்த நிலம்” (குறள்.239)