(கு - ரை.) 1-2. குறள். 4-ஆம் அதிகாரத்தின் அவதாரிகையில் இவ்வடிகள் மேற்கோளாகப் பரிமேலழகராற்காட்டப்பட்டுள்ளன. 3. வென்ற அரசர்களின் குடைக்குப் பின் தோற்ற அரசர்களுடைய குடைகளைப் பிடிப்பித்தல் மரபு. இருகுடை என்றதற்குச் சேர பாண்டியர்களுடைய குடைகள் என்று பொருள் எழுதியதனால், இவ்வரசன் அவர்களை வென்று அடக்கியவன் என்பது தெளிவாகின்றது; வருஞ்செய்யுளில் வந்துள்ள, ‘பூவாவஞ்சியுந்தருகுவன்’, ‘மாட மதுரையுந் தருகுவன்’ என்பனவும் இதனை வலியுறுத்தும். 3-4. கலித். 100 : 3-4. 1-4. “குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று, நின்றுயர் வாயிற் புறநிலைப்ப - ஒன்றார், விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போற் றோன்றித், துளங்கினவே தோற்றந் தொலைந்து” (பெரும்பொருள்விளக்கம்) 5. வேட்டம் - விரும்புதல்; புறநா.214 : 6. 5-6. “வென்றே புகழ்புனை வேலண்ண லேயிந்த வெற்பினுள்ள, தன்றே யெனினு மரிவையை யானடி வீழ்ந்திறைஞ்சி, இன்றே திருத்தியிருந்தழை வாங்குவ னிற்றைக்குநீ, சென்றே வருக சிறுகான் முடியுநின் சிந்தனையே” (அம்பிகாபதி.117) 9. வீரர்கள் போரின்கண் மிக்க விருப்பமுடையவரென்பது, புறநா.68 : 11 - 3, 89 : 7 - 9 என்பவற்றாலும், “மண்டமர் நசையொடு கண்படை பெறாஅது” (முல்லை.67), “செருவேட்டுச் சிலைக்குஞ் செங்கணாடவர்” (அகநா.157 : 4), “உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன், செறினுஞ்சீர் குன்ற லிலர்” (குறள்,778) என்பவற்றாலும், ‘போர்பெற்றறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லாரென்பதாம்; பிறரும், “போரெனிற் புகலும் புனைகழன் மறவர் என்றும்....கூறினார்” என்னும் பரிமேலழகருரையாலும் விளங்கும். 14. புறநா.2 : 10, குறிப்புரை. 15. “வங்க மறிகடல் சூழெழு பார்வலம் வந்த மனுகுல சோழனை” (வி. பா.17-ஆம் போர். 66) 17. “பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே” (குறுந்.292 : 8.) உயர்திணை அஃறிணையாகக் கூறப்பெற்ற வழுவமைதிக்கு மேற்கோள்; நன். வி.சூ. 410. 16-7. ‘நெஞ்சுநடுங் கவலம்.....அரசே : அஃது அரசியற் றன்மையை யுணர்த்தற்பாலது அத்தன்மையையுடைய மக்களை யுணர்த்தி உயர்திணையாய் ஈண்டு அஃறிணையான் முடிதலின் வழுவாயிற்று; இவ்வாறு வருவனவும் பிறவும் அமைத்துக்கொள்க,’ (நன்.சூ. 409, மயிலை.) மு. வஞ்சித்திணைக்குரிய இயங்குபடையரவமென்னும் துறைக்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 7, இளம்.;சூ. 8, ந. இச்செய்யுள் தலைவனது வெற்றியைக் கூறலின் அரசவாகையும், அவன் பகைவர் நாட்டை அழித்தமை கூறலின் மழபுல வஞ்சியுமாயிற்று. (31)
|