32
கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ
வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென
5மாட மதுரையுந் தருகுவ னெல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போலவவன்
10கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே.

(இ - ள்.) நமது சுற்றத்தினது அடுகலத்தை நிறைக்கும் பொருட்கு விலையாக (பி - ம். நிறைக்கும் பொருளாக) நெடிய துகிற்கொடியினையுடைய பூவாத வஞ்சியையும் தருகுவன்; நிறமுடைய கலவை பூசப்பட்ட வளைந்த சந்தினையுடைய முன்கையினையும் வேய்போன்ற தோளினையும் ஒள்ளிய நுதலினையு முடைய விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுகவென்று மாடத்தையுடைய மதுரையையும் தருகுவன்; ஆதலால், யாமெல்லாம் அவனைப் பாடுவோமாக வாரீர் பரிசின்மாக்கள்! பழைய நிலவுரிமையைக் குறிப்பின், நல் அறிவையுடைய குயக்குலத்திளையோர் கலம் வனைதற்குத் திகிரிக் கண்ணே வைத்த பச்சைமண்ணாகிய கனத்த திரள்போல அவன் கருத்திற்கொண்ட முடிபையுடைத்து, இக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு-எ - று.

பூவாவஞ்சியென்றது, கருவூர்க்கு வெளிப்படை.

1ஒன்றோவென்றது, எண்ணிடைச்சொல்.

தேர்க்கா லென்றது தேர்க்கால்போலும் திகிரியை.

அவன் கொண்ட குடுமித்து, இந்நாடு; ஆதலால், வஞ்சியையும் தருகுவன்; மதுரையையும் தருகுவன்; ஆதலால்,

பரிசின்மாக்கள்! நாமெல்லாம் அவனைப் பாடும் வம்மினோவெனக் கூட்டுக.

தொன்னிலைக்கிழமையென்று பாடமோதுவாருமுளர்.


(கு - ரை.) 2. வஞ்சி சேர ராசதானியாகிய கருவூர்; இது கொங்கு நாட்டுள்ள கருவூரன்று. வஞ்சியென்பது பலபொருள் ஒரு சொல்லாதலின், இங்கே நகரென்பது புலப்பட, “பூவாவஞ்சி” என்றார், “பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வா ணெடுந்தகை மணிமுடிக் கணிந்து” (சிலப்.29 : 50 - 51); “பூத்த வஞ்சி பூவா வஞ்சியிற், போர்த்தொழிற்றானை குஞ்சியிற் புனைய” (மணி.26 : 78 - 9)

3. “வணங்கிறைப் பணைத்தோள்” (குறுந்.364)

5. “மாடமலி மறுகிற் கூடல்” (முருகு.71); “மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்” (மதுரைக்.429); “மாடக் கூடல்” (பரி.20 : 106); “மாட மதுரை”, “மாட மதுரையும்” (சிலப்.பதி. 203, 8 : 3, 9: 76, 15 : 112); “நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும்” (கலித். 92) என்பதும், ‘நான்கு மாடங் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று; அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்; இனி, கன்னி, கரியமால், காளி, ஆலவாயென்றுமாம்’ என்னும் அதன் விசேடவுரையும், “அம்புத நால்களா னீடு கூடல்” (திருநள்ளாறும் திருவாலவாயும்; தே.) என்னும் திருவாக்கும், “மதிமலி புரிசை மாடக் கூடல்” (திருமுருகப் பாசுரம்) என்பதும், “ஈசனார் மகிழ்ந்த தானம்” (திருவால.நகர. 12) என்பது முதலிய திருவிருத்தங்கள் நான்கும், “கன்னிதிருமால்காளி யீசன் காக்குங் கடிமதில்சூழ் மாமதுரை” (திருவால.பயன் முதலியன. 5) என்பதும் இங்கே கவனிக்கத்தக்கவை.

5-6. “உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன், றீவார்மேனிற்கும் புகழ்’‘ (குறள்,232) என்பதனாலும் அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையாலும் ஈவார் புகழப்படுதல் அறியலாகும்.

9. சீவக.786,ந.மேற்.

10. குடுமி - முடிவு. இந்நாடு, இவன்கருதிய வண்ணமே நடக்குமென்றபடி, ‘கடும்பின் அடுகலம்.....பூவா வஞ்சியும் தருகுவன், விறலியர்......மாடமதுரையும் தருகுவன்’ எனத்தலைவன் இயல்பைக் கூறினமையால் இச்செய்யுள் இயன்மொழியாயிற்று.

(32)


1 “பொய்படு மொன்றோ” (குறள்,836)