33
கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
5குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை
10பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதெரு மறுகிற் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
15செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை
வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்
காம விருவ ரல்லதி யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
20ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே.

(பி - ம்.) 11 ‘மலியப்’

திணை - வாகை; துறை - அரச வாகை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) காட்டின்கண்ணே தங்கும் வாழ்க்கையையுடைய சினம் பொருந்திய நாயையுடைய வேட்டுவன் மானினது தசையைச் சொரிந்த கடகமும் இடைமகள் தயிர்கொண்டுவந்த மிடாவும் நிறைய ஏரானுழுது உண்டு வாழ்வாரது பெரிய மனையின்கண் மகளிர் குளத்துக்கீழ் விளைந்த களத்தின்கட் கொள்ளப்பட்ட வெண்ணெல்லை முகந்துகொடுப்ப உவந்து மீளும் தென்றிசைக்கட் பொதியின்மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டுள்ளும் ஏழாகிய அரணின்கட் கதவத்தை யழித்துக் கைக்கொண்டு நினது பெரிய வாயையுடைய புலியைப் பொறிக்கும் வலியை; ஆதலான், நின்னைப்பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட படைக்கலத்தினை யுடையோர் தாதாகிய எருப்பொருந்திய மறுகினையுடைய பாசறைக்கண்ணே பொலிவுபெறப் புலராத பசிய இலையை இடையிட்டுத் தொடுக்கப்பட்ட மலராத முகையினையுடைய மாலையினது பந்தைக் கண்டாற்போன்ற தசையோடு கூடிய பெருஞ்சோற்றுத் திரளையைப் பாண்சுற்றத்தையூட்டும் தலைமையையுடைத்து, நினது வெய்யமுனையாகிய இருப்பிடம்; கைவல்லோனாற் புனைந்துசெய்யப்பட்ட எழுதிய அழகு பொருந்திய அல்லிப்பாவை 1அல்லியமென்னும் கூத்தையாடும் அழகையொப்ப அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாகிய இருவரல்லது இடையாமத்தின்கண் தனிமகன் வழங்காத குளிர்ந்த மலரையுடைய காவின்கண் இயங்குதற்கு இனிய செறிந்த மணலையுடைய புதிய பூவையுடைய சாலையினது வாயிலின்கண் மாடந்தோறும் செம்மறிக் கிடாயைப் படுக்க நீ அவ்விடத்து எடுத்துக்கொண்ட விழவினும் பல - எ-று.

நன்னாட்டுள்ளுமென்ற உம்மை சிறப்பும்மை.

அல்லிப்பாவை யாடுவனப்பென்றது ஆண்கோலமும் பெண்கோலமுமாய அவ்விருவருமாடுங் கூத்தை. படையோர் பாசறை பொலிய வென்பதற்குப் படையோரது பாசறை பொலிவுபெறவென்று உரைப்பினும் அமையும்.

பாசிலை மலைய என்று பாடமோதுவாரும் உளர்.

தனிமகன்வழங்காவென்றது, 2தனித்து வழங்கின் அப்பொழில் வருத்துமென்பது.

களத்துக்கொள் வெண்ணெலென்பது, களக்கொள் வெண்ணெலெனத் தொக்கது.

முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயருமென்பன வினையெச்சமுற்று.

உழுவைபொறிக்குமாற்றலையாகலின், பாண்கடும்பருத்தும் நின் வெம்முனையிருக்கை நீ கொண்ட விழவினும் பல செம்மற்றெனக் கூட்டுக.

விழவென்பது 3சிறுசோற்றுவிழவினை; வேள்வியென்றுரைப்பினும் அமையும்.

ஒவ்வொருவருக்கும் கொடுத்து மகிழ்தல்,


(கு - ரை.) 2. வட்டி - கடகப்பெட்டி; அதாவது பனை அகணியாற் செய்த பெரிய பெட்டி; “ஊனார் வட்டியார்” (மலைபடு.152). ஆய்-இடைச்சாதி; சீவக.426, ந.

5. சீவக.355; நாலடி.191; நான்மணிக்.83.

6. பலர்பாற்படர்க்கை வினைமுற்று வினையெச்சமானதற்கு மேற்கோள்; நன்.சூ. 350, மயிலை;நன்.சூ. 351. வி.

1-6. “முள்ளெயிற்றுப் பாண்மக ளின்கெடிறு சொரிந்த, வகன்பெரு வட்டி நிறைய மனையோள், அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூர”, “வளைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள், வராஅல் சொரிந்த வட்டியுண் மனையோள், யாண்டுகழி வெண்ணெ னிறைக்கு மூர” (ஐங்குறு.47, 48)

7. மு. புறநா.215 : 6.

8. ஏழெயிற்கதவம் - (பகைவருடைய) ஏழுமதிலின்கணுள்ள கதவுகள்; பாண்டிநாட்டில் ஏழு பொன்கோட்டையென்று ஓர் ஊர் உள்ளது; சிவகங்கையைச் சார்ந்தது; அஃது இங்கேகூறிய ஏழெயிலிருந்த இடமாக ஊகிக்கப்படுகின்றது; அந்தவூர், பல சிற்றரண்கள் வாய்ந்திருந்ததாக இந்நூல் 21-ஆவது செய்யுளிற் கூறப்பட்டுள்ள கானப்பேருக்கு(காளையார் கோவிலுக்கு)ச் சமீபமாக இருத்தல் இக்கருத்தை ஒருவாறு வலியுறுத்தும்.

9. பகைவருடைய இடங்களைக் கைப்பற்றியவுடன் அவற்றில் அவர்களுடைய முத்திரைகளைச் சிதைத்துத் தம்முடைய பொறிகளை அமைப்பது மரபு.

11. புறநா.311 : 3, குறிப்புரை. “தாதெருத் ததைந்த முற்றம்” (மலைபடு.531)

12. ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் வினைமுதல் கொண்டதற்கு மேற்கோள்; நன். மயிலை.சூ. 343; நன். வி.சூ. 344.

13. “மாலைப் பந்தும் மாலையு மேந்தி” (சீவக.2928)

12-3. புறநா.23 : 3.

14. புறநா.177 : 14 - 5; “கோழூன்குறைக் கொழுவல்சி” (மதுரைக்.141)‘ஊணமலைச் சிறுகுடி’ (கலித். 50) என்பதற்கு ‘ஊன்சோற்றமலை பாண்கடும் பருத்தும்’ என்பது மேற்கோள்.

16. வரிவனப்பு : மணி.3 : 8.

16-7. வல்லோன் றைஇய.....பாவை : கலித்.56 : 7.

20. பள்ளி : மணி.26 : 72.

21. மைவிடை வீழ்த்தல் : புறநா.262 : 1, குறிப்புரை.

(33)


1. அல்லியக்கூத்து : சிலப், 6: 48, அடியார்,

2. ‘தனியவரை முனிவு செய்யும் பொழில்’ (இறை. சூ. 2, உரை)

3. சிறுசோற்றுவிழவு - சோற்றைத் தயிர்முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்