41
காலனுங் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே
திசையிரு நான்கு முற்க முற்கவும்
5பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
10வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவி னரியன காணா நனவிற்
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி
மையல் கொண்ட வேமமி லிருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்
15கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு
பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ
டெரிநிகழ்ந் தன்ன செலவிற்
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே.

(பி - ம்.) 4 ‘முற்கவும்’

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை.

அவனைக் கோவூர்கிழார் பாடியது.

(இ - ள்.) கூற்றும் தன்னால் உயிர்கொள்ளலாங்காலம் வருந்துணையும் பார்க்கும்; அவ்வாறு காலம்பாராது வேல்நெருங்கிய படையினையுடைய பெரியோர் மாளும்பரிசு நீ வேண்டியவிடத்தே கொல்லும் வெல்லும் போரையுடைய வேந்தே! எட்டுத்திசையும் எரிகொள்ளி எரிந்து வீழவும், பெரியமரத்தின்கண்ணே இலையில்லாத நெடியகோடாகிய வற்றல் பற்றவும், வெய்யசுடரையுடைய ஞாயிறு பலவிடத்தும் செறிந்து தோன்றவும், மற்றும் அஞ்சத்தகுவனவாகிய புட்கள் குரலிசைப்பவும், பல்லு நிலத்தின்கண்ணே வீழவும், எண்ணெயை மயிரின்கண்ணே வார்க்கவும், 1பன்றியேற்றை ஏறவும், ஆடையைக் களையவும், வெளிதாகிய வலிய படைக்கலம் தானிருந்த கட்டிலுடனே மறியவும், இங்ஙனம் கனாவினும் மெய்ம்மையினும் பொறுத்தற்கரியவற்றைக் கண்டு, போர் செய்யும் வலியையுடையோய்! நின் மேற்செலவின் கூறுபாட்டைக்கருதி, மயக்கம்பொருந்திய காவலில்லாத இருத்தலையுடையராய்த் தம் பிள்ளைகளுடைய பூப்போலும் கண்ணை முத்தங்கொண்டு தம்மனைவியர்க்குத் தமது வருத்தந்தோன்றாமல் மறைக்கும் துன்பத்தையுடைய ஆடவரோடு மிக்க கலக்கமுற்றது; காற்றுடன் எரி நிகழ்ந்தாற்போன்ற செலவையுடைய போரின்கண்ணே மிக்க வளவ! நின்னைச் சினப்பித்தோருடைய நாடு - எ - று.

உற்கலென்றது வீழ்தலை. உற்கமுதலியநான்கும் உற்பாதமாய் நனவிற் காணப்பட்டன; எயிறுநிலத்து வீழ்தல் முதலாயின கனவிற் காணப்பட்டன.

வரு திறன் : ஈண்டுச் செல்லுந்திறனென இடவழுவமைதியாய் நின்றது.

‘மனையோட் கெவ்வங் கரக்கும்’ என்பது, “ஏவ லிளையர் தாய் வயிறு கரிப்ப” (தமிழ்நெறிவிளக்கம், மேற்.) என்றாற்போலப் பன்மைக்கேற்ப நின்றது.

தான் : ஈண்டு அசைநிலை.

பெருமரத்துப் பற்றவுமென இயையும்.

இலையினெடுங்கோடு வற்றல்பற்றவுமென்பதற்கு நெடுங்கோட்டின் கண்ணே இலையில் வற்றற்றன்மைபற்றவுமென உரைப்பினும் அமையும்.

வேந்தே! முன்ப! வளவ! நீ இத்தன்மையையாதலால், நிற்சினைஇ யோர்நாடு, பைதன்மாக்களொடு பெருங்கலக்குற்றதெனக் கூட்டுக.

காற்றோடு எரி நிகழ்ந்தன்ன செலவிற் செருமிகு வளவவென மன்ன வன் புகழும், நிற்சினைஇயோர் நாடு பைதன்மாக்களொடு பெருங்கலக் குற்றன்றென ஒன்னார்நாடு அழிபிரங்கியதும் கூறுதலால், இது கொற்றவள்ளையாயிற்று.


(கு - ரை.) 1 - 3. “செயிரிற் குறைநாளாற் பின்சென்று சாடி, உயிருண்ணுங் கூற்றமும் போன்ம்” (கலித். 105 : 37 - 8); “உண்ணுந்துணைக் காக்குங் கூற்று”, (பழ. 89); “ஞாலத் தின்னுயிர் வாழ்வோர் நாப்பட், காலம் பார்க்குங் காலன் போல” (பெருங். 1. 37 : 204 - 5); “சாற்றுநா ளற்ற தெண்ணித் தருமம்பார்த், தேற்றும் விண்ணென்ப தன்றி யிவளைப்போல், நாற்றங் கேட்டலுந் தின்ன நயப்பதோர், கூற்றுண்டோ” (கம்ப. தாடகைவதை. 64)

‘அடல்வேண்டினாற்றுபவர்கண்’ என்பதற்கு வேற்றுவேந்தரைக் கோறல் வேண்டியவழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டு எனப் பொருள்கூறி இப்பகுதியை மேற்கோள்காட்டினர்; குறள். 893, பரிமேல்.

9 - 10. களிறென்றது பன்றியை உணர்த்திவருதற்கு இப்பகுதி மேற்கோள் ; சிலப். 15 : 95 - 106, அடியார்.

“மிக்க வெயிற்றின கொம்பின பன்றி விறற்குரங்கு, தொக்கன தம்மைக் கனவினிற் காணிற் சுடர்மகுடச், சக்கர வர்த்திக ளாற்பயமுண்டெனுந் தம்முயிர்கள், உக்கன வாதல்செய் தாற்பொரு டேயும் பயமுடைத்தே” (கனாநூல், 15)

14 - 5. மனைவியர்க்குத் தமது வருத்தம் தோன்றாமல் கணவர் மறைத்தலை, “கருங்கய னெடுங்கட் காதலி தன்னை....வருபனி கரந்த கண்ண னாகி” (சிலப். 16 : 94 - 7) என்பதனாலும் அறிக.

6 - 16. “பிறவும்.....தானே” : தோற்றோர் தேய்விற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 7, இளம்.

16 - 7. கலக்குற்றன்று - கலக்கமுற்றது. ‘காற்றும் நெருப்பும் கூடி னாற்போலும்’ என்பது ஒரு பழமொழி.

மு. நிமித்தம்பற்றி வந்ததற்கும் (தொல். புறத்திணை. சூ. 30, இளம்.), பாடாண் கொற்றவள்ளைக்கும் (தொல். புறத்திணை. சூ. 34, ந.) ஓம்படை வாழ்த்திற்கும் (தொல். புறத்திணை. 36, ந.) மேற்கோள். (41)


1. களிறு - பன்றி; தொல். மரபு. சூ. 34.