(பி - ம்.) 1 - 2 ‘பிறவும் பலவும்’ 6 ‘மன்ற மருண்டு’ திணையும் துறையும் அவை. (பி - ம். துறை - இயன்மொழி) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கிடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக்கொண்டது. (இ - ள்.) நீதான், புறவின் அல்லலன்றியும் பிறவும் உற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்த சோழனுடைய மரபிலுள்ளாய்; இவர்தாம், அறிவான் உழுதுண்ணுங் கற்றோரது வறுமையை யஞ்சித் தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலையுடையராய் வாழ்வாரது மரபினுள்ளார்; இவர் இப்பொழுது களிற்றைக் கண்டு தம் இளமையால் தாம் முன்பு வெருவியழு கின்ற அழுகையை மறந்த புல்லிய தலையையுடைய சிறுபிள்ளைகள்; மன்றை வெருவிப்பார்த்து முன்பு அறியாத புதியதோர் வருத்தத்தையுடையர்; இது கேட்டாயாயின், நீ விரும்பியதைச் செய்வாயாக-எ - று. தண்ணிழல்வாழ்நர் சிறாஅரென இயைப்பினும் அமையும். அழாஅல் களிறுகண்டு மறந்தவெனக் கூட்டுக. நீ புறா முதலாயினவற்றின் துயர்தீர்த்தற்கு உயிர்க்கொடை பூண்டோன் மருகனாதலானும், இவர் கற்றோர் வறுமையஞ்சிப் பகுத்துண்ணும் தண்ணிழல்வாழ்நர் மரபினுள்ளாராதலானும் இவர் நின்னால் அருளத்தகி னல்லது முனியத்தகாரென்பதாம். இதுவும், இவரைக் கொல்லாமற் சந்துசெய்வித்தலின் துணைவஞ்சிஆயிற்று. |