167
நீயே, அமர்காணி னமர்கடந்தவர்
படைவிலக்கி யெதிர்நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக் கினியை கட்கின் னாயே
5அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின்
ஊறறியா மெய்யாக்கையொடு
கண்ணுக் கினியர் செவிக்கின் னாரே
அதனா, னீயுமொன் றினியை யவருமொன் றினியர்
ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க்
10கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி
நின்னை வியக்குமிவ் வுலகமஃ
தென்னோ பெரும வுரைத்திசி னெமக்கே.

(பி - ம்.) 1 ‘இகவலர்க்காணின்’

திணை - அது; துறை - அரசவாகை.

1 ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு 2எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

(இ - ள்.) நீதான, போரைக்காணின் அப்போரை வென்று அப் பகைவரது படையை விலக்கிஎதிர்நிற்றலான் வாள்வாய்க்கத் தைத்தவடு அமுந்தியஉடம்புடனே கேட்ட செவிக்கு இனியை, கண்ணுக்கு இன்னாய்;பகைவராகிய அவர்தாம், நின்னைக் காணிற்புறந்தருதலாற் புண்ணறியாத உடம்பாகிய வடிவுடனே கண்ணுக்குஇனியர், செவிக்கு இனியரல்லர்; அதனால், இங்ஙனம்நீயும் ஒன்றினியை; அவரும் ஒன்றினியர்; இனி அவரொவ்வாதனவேறு யாவை யுள; வெல்லும் போரினைச் செய்யும் வீரக்கழலணிந்த திருந்திய அடியினையும் கடிய செலவினையுடையகுதிரையையுமுடைய கிள்ளி ! நின்னை மதித்திருக்கும்இவ்வுலகம்; அதற்குக் காரணம் யாதோ? பெருமானே! எமக்குச்சொல்லுவாய்-எ - று.

நீ கட்சின்னாயெனப் பழித்ததுபோலப்புகழ்தலும், (தண்டி. சூ. 64) அவர் கட்கினியரெனப்புகழ்ந்ததுபோலப் பழித்தலும் சில அணிதோன்ற நின்றன.


(கு - ரை.) 3. புறநா. 321 : 9.

1 - 3. புறநா. 62 : 1 - 2, 100 : 2,குறிப்புரை.

4. தம் உடம்பிற் பெரிய காயங்கள்பல படும்படி போர் செய்தல் வீரர்களுக்கு இயல்பாதலின்“கட்கின்னாய்” என்றார்.

3 - 7. “காணிலும் முருப்பொலார்செவிக்கினாத கீர்த்தியார், பேணிலும் வரந்தரமிடுக்கிலாத தேவரை” (திவ். திருச்சந்த.69)

(167)


1 “சோழிக வேனாதி தன்முகநோக்கி” (மணி. 22 : 205)

2 புதுக்கோட்டையைச் சார்ந்த ஊர்களுள்‘எறிச்சி’ என்று வழங்குமூர் இவ்வூர்போலும்; இதுகோனாட்டைச் சார்ந்ததே. இதில், பஞ்சபாண்டவர்சுனையென்று ஐந்து பழைய சுனைகளும் அவற்றின் பக்கத்தில்ஒரு பழைய சிவாலயமும் உள்ளன.