180
நிரப்பாது கொடுக்குஞ் செல்வமு மிலனே
இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலனே
இறையுறு விழுமந் தாங்கி யமரகத்
திரும்புசுவைக் கொண்ட விழுப்பு ணோய்தீர்ந்து
5மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்று வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்
தீர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டி னெம்மொடு
நீயும் வம்மோ முதுவா யிரவல
10யாந்தன் னிரக்குங் காலைத் தானெம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க்
கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே.

(பி - ம்.) 7 ‘தீரந்தை’, ‘தீந்தை’11 ‘மருங்கு’

திணையும் துறையும் அவை; துறை -பாணாற்றுப்படையுமாம்.

ஈர்ந்தூர்கிழான் தோயன் (பி - ம். ஈரந்தூர்கிழான்கோயமான்) மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன்மதுரைக்குமரனார் பாடியது.

(இ - ள்.) நாடோறும் தொடர்ந்துகொடுக்கும் செல்வமு முடையா னல்லன்; இங்ஙனம் வறிஞனாயினும்இரந்தோர்க்கு இல்லையெனச் சொல்லி மறுக்கும்புன்மையுமுடையனல்லன்; தன் அரசுக்கு வந்துற்ற போரானமைந்தஇடும்பைகளைத் தான் பொறுத்து அந்தப் போரின்கட்படைக்கலங்கள் சுவைக்கொண்ட சிறந்த புண்ணாகியநோய் தீர்ந்து, மருந்துவாங்கிக் கொள்ளப்பட்டமரம்போல வாளுற்ற வடு ஒன்றோடொன்று விரவி ஆண்மைக்குறைபாடின்மையின்வசையின்றி அழகு பெற்ற உடம்பையுடையனாய் வன்மையைஏற்றுக்கொண்டு ஈர்ந்தை யென்னும் ஊரின்கண்ணேயிருந்தான்,பாணரது பசிக்குப் பகைவனாயவன்; நினது வறுமை நீங்கவேண்டுவையாயின்எம்முடனே நீயும் வாராய், முதிய வாயையுடைய இரவல!யாம் தன்னை இரக்கும்பொழுது தான் எம்முடைய உண்ணாதமருங்கினைக் காட்டித் தன்னுடைய ஊரின்வலிய கையினையுடையகொல்லனை வேண்டிக்கொள்ளாநிற்கும் அவன்;திருந்தின இலையையுடைய நெடிய வேலை வடிப்பாயாகவெனச்சொல்லி-எ - று.

பாண்பசிப்பகைஞன் ஈர்ந்தையோன்;அவன் தன்னை யாமிரக்கும் காலைத் தான் எம்மருங்கைக்காட்டிவேலைவடித்திசினெனக் கொல்லனை யிரக்கும்; இரவல!இன்மை தீரவேண்டின், எம்மொடு நீயும் வருவாயாகவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

இரக்குமென்று இழித்துக்கூறியது,பலகாலும் வடிக்கவேண்டுதலானும் பசிக்கு உதவவேண்டுதலானும்.


(கு - ரை.) 1. நிரப்பாது - பூர்த்திசெய்யாமல்.2. புறநா. 204 : 2; “இல்லென விரந்தோர்க்கொன்றீயாமை யிழிவு” (கலித். 2); “உள்ள, திரப்போனின்மை கண்டுங், கரப்போன் சிறுமை யானுறு கவ்வே”(தகடூர். “கலிமானோயே” என்னும்பாடல்)

4. “இரும்புமேய்ந் தொழிந்த மிச்சில்வரை மார்பன்”,“இரும்புண்டு மிகுத்த மார்பு”, “இரும்பெச்சிற்படுத்தமார்பர்” (சீவக. 1790, 2281, 2353)

5. “மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்” (நற்.226); “மரமுதல் சாய மருந்துகொண் டாங்கு” (பெருங்.1. 37 : 188); “பால் கொண்ட வத்தி யெனவே யுடல்வடுப்பட்டவெமர்” (வெங்கைக்கோவை, 99)தொல். உவம சூ. 20, பேர். மேற்.

5 - 6. “அலகில் வெற்றியு முரிமையு மிவையென வவய வத்தினிலெழுதிய வறிகுறி யவையெ னப்பல வடுநிரை யுடையவர்”(கலிங்கத். 353); “பயில்வடுப் பொலிந்தயாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு” (பெரிய.கண்ணப்ப. 12); “கொடுஞ்சமரிற் பட்ட, வடுத்துளைத்தகல்ல பிராமம்” (தனிப்பாடல்)

7. புறநா. 173 : 11.

‘ஈர்ந்தையோனே....பகைஞனென்புழி, ஈர்ந்தையோனென்னுமுற்றிற்குமுடிபாகிய பகைஞனென்னும் பெயரை இடையினின்றசொல்விசேடித்து நின்றது’ (தொல். எச்ச. சூ. 59, ந.)

9.முதுவாயிரவல : புறநா. 48 : 7, குறிப்புரை.

11. உண்ணாமருங்குல் : புறநா. 260 : 6.

12. புறநா. 170 : 15.

12 - 3. புறநா. 312 : 3.

மு. தும்பைத் திணைக்குரிய துறைகளுள், “தார்நிலை”என்பதற்கு மேற்கோள்காட்டி, ‘இதனுள், பாணன்அதுதோன்றப் புகழ்ந்தவாறு காண்க’ என்பர் (தொல்.புறத்திணை. சூ. 14, இளம்.); ‘நிரப்பாது கொடுக்குமென்னும் புறப்பாட்டினுள் இறையுறு விழுமந்தாங்கியென்பதும் அது’ (தொல். புறத்திணை. சூ. 17, ந.)

(180)