197
வளிநடந் தன்ன வாச்செல லிவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரின ரெனாஅக்
கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றின ரெனாஅ
5உருமுரற் றன்ன வுட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றிய ரெனாஅ
மண்கெழு தானை யொண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே
எம்மால் வியக்கப் படூஉ மோரே
10இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கட் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்ன ராயினு மெம்வயிற்
பாடறிந் தொழுகும் பண்பி னாரே
15மிகப்பே ரெவ்வ முறினு மெனைத்தும்
உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம்
நல்லறி வுடையோர் நல்குர
வுள்ளுதும் பெருமயா முவந்துநனி பெரிதே.

(பி - ம்.) 1 ‘வாஅய்செலிவுளி’, ‘விரைசெல’ 2 ‘தேரினமெனாஅ’ 4 ‘களிற்றினமெனா’ 5 ‘உருமுரன்றன்ன’ 14 ‘பண்பினோரே’

திணையும் துறையும் அவை.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

(இ - ள்.) காற்று இயங்கினாற்போலும் தாவுதலுடைத்தாகிய கதியை யுடைய குதிரையோடு கொடிநுடங்கும் உச்சியையுடைய தேரினையுடைய ரெனவும், கடலைக் கண்டாற்போலும் ஒள்ளிய படைக்கலத்தையுடைய சேனையுடனே மலையோடு மாறுபட்டுப் பொரும் களிற்றினையுடைய ரெனவும், இடிமுழங்கினாற்போலும் அஞ்சத்தக்க முரசத்தோடு போரின் மேம்படும் வெற்றியையுடையரெனவும் கருதி நிலத்தைப்பொருந்தின படையினையுடைய ஒள்ளிய பூணினையுடைய அரசர் வெண்கொற்றக்குடை நிழற்றப்படுஞ் செல்வத்தை மதித்தலில்லேம்; எங்களால் மதிக்கப்படுவோர், இடப்பட்ட முள்வேலியையுடைய தோட்டத்து மறி (ஆடு) தின்ன ஒழிந்து நின்ற குறிய நாற்றத்தினையுடைய முஞ்ஞையது கொழுவிய கண்ணிற் கிளைக்கப்பட்ட குறிய இலையைப் புல்லிய நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற சிறிய ஊரையுடைய வேந்தராயினும் எம்மிடத்துச் செய்யும் முறைமையை அறிந்து நடக்கும் குணத்தினையுடையோர்காண்; யாம் மிகப்பெரிய துன்பமுறினும் சிறிதும் அறிவில்லாதோருடைய செல்வம் பயன்படாமையின் அதனைநினையேம்; நல்லறிவினையுடையோரது வறுமை பயன்படுதலின் அதனைப் பெருமானே! யாம் உவந்து மிகப் பெரிதும் நினைப்பேம்-எ - று.

எனாவென்பது எண்ணிடைச்சொல்.


(கு - ரை.) 1.புறநா. 178 : 2, குறிப்புரை. “காற்கடுப் பன்ன கடுஞ்செல லிவுளி” (அகநா. 224 : 5)

3. “கடன்மரு டானை” (அகநா. 212 : 15)

1-4. ‘வளிநடந்தன்ன....களிற்றின ரெனாஅ என்பதனுள் என என்பது எனாவென்று வந்து எண்ணுக்குறித்தது’ (தொல். இடை. சூ. 40, தெய்வச்.)

5. “கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப், பெய்தினி வாழியோ பெருவான்” (குறுந். 270 : 3 - 4); “உருமிடி முரசம்” (முருகு. 121)

1-8. ‘வளிநடந்தன்ன.....இலமே : என்புழி வினைக்குறிப்பு எண்ணிவந்து தொகைபெறாது நின்றது’ (தொல். இடை. சூ. 44, தெய்வச்.)

10. இடுமுட்படப்பை : “இடுமு ணெடுவேலி” (கலித். 12 : 1)

11. முஞ்ஞை-முன்னை. புறநா. 320 : 1, 328 : 14.

10-11. “முன்றிலாடு முஞ்ஞை மூதிலை கறிக்கும்” (தொல். செய். சூ. 31, பேர்; ந. மேற்.)

14. “பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்” (கலித். 133 : 8)

16-8. “நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே, கல்லார்கட்பட்ட திரு” (குறள், 408)

(197)