360
பெரிதாராச் சிறுசினத்தர்
சிலசொல்லாற் பலகேள்வியர்
நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர்
கலுழ்நனையாற் றண்டேறலர்
5கனிகுய்யாற் கொழுந்துவையர்
தாழுவந்து தழூஉமொழியர்
பயனுறுப்பப் பலர்க்காற்றி
ஏம மாக விந்நில மாண்டோர்
சிலரே பெரும கேளினி நாளும்
10பலரே தகையஃ தறியா தோரே
அன்னோர் செல்வமு மன்னி நில்லா
தின்னு மற்றதன் பண்பே யதனால்
நிச்சமு மொழுக்க முட்டிலை பரிசில்
நச்சுவர் கையி னிரப்ப லோம்புமதி யச்சுவரப்
15பாறிறை கொண்ட பறந்தலை மாகத
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு
புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி
புலைய னேவப் புன்மே லமர்ந்துண்
20டழல்வாய்ப் புக்க பின்னும்
பலர்வாய்த் திராஅர் பருத்துண் டோரே.

(பி - ம்.) 1 ‘பெரிதாராற சிறு சினததா’ 3 ‘பருங்கொடை’ 6 ‘தாழுவநதழுஉம்’ 7 ‘பானுறுப்ப’ 13 ‘ஒழுக்கமும்’ 14 ‘இரப்பவோ மபுமதியஞ்சுவரப்’ 15 ‘பாறிரை’ 16 ‘பொதியகளரி’ 18 ‘புககலத்திடட’

திணையும் துறையும் அவை (பி - ம். இதுவுமது)

தந்துமாறனை (பி - ம். தநதுமாரனை)ச் சங்கவருணரென்னும் நாகரியர் பாடியது.


(கு - ரை.) 2. "பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற, சில சொல்ல றேற்றாதவர்" (குறள்,649). சொல்லால் - சொல்லோடு.

4. கலுழ் நனை - கலங்கிய கள்.

5. குய் - நறுமணப்புகை. துவை-துவையல்.

6. தாழ் உவந்து - வணங்குதலை விரும்பி. 7. ஆற்றி - கொடுத்து.

10. தகையஃது - மேற்கூறிய தன்மையை.

13. முட்டிலை - குறைபாடில்லாயாய்.

14. நிரப்பல் ஓம்பு - நிரப்புதலைப் பாதுகாப்பாயாக.

16. புறநா.225 : 7, 245 : 3, 356 : 1.

17. வெள்ளில் - படை.. நிறுத்த - நிறுத்திய.

18. புல் - தருப்பை. அவில் - பருக்கை. வல்சி - உணவு.

19. "உப்பிலிப் புழுக்கல் காட்டுட் புலைமக னுகுப்ப வேகக், கைப்பலி யுண்டு" (சீவக.2984) என்பதற்கு இவ்வடி மேற்கோள்.

16 - 9. புறநா.363 : 10 - 14.

(360)