80
இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகான் மார்பொதுங் கின்றே யொருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
5நல்கினு நல்கா னாயினும் வெல்போர்ப்
போரருந் தித்தன் காண்கதி லம்ம
பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை யொசிய வெற்றிக்
களம்புகு மல்லற் கடந்தடு நிலையே.

(பி - ம்.) 6 ‘பொரலருந் தித்தன்’9 ‘மள்ளர்க்கடந்தடு’

திணை - தும்பை; துறை - 1எருமைமறம்.

சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளிமுக்காவனாட்டு 2 ஆமூர் மல்லனைப் பொருது அட்டுநின்றானைச்சாத்தந்தையார் பாடியது.

(இ - ள்.) இனிய அழன்றகள்ளினையுடைய ஆமூரிடத்து வலியையுடைய மல்லனதுமிக்க வலியைக் கெடுத்து ஒருகால் மண்டியாகமார்பிலே மடித்துவைத்து ஒருகால் அவன் செய்கின்றஉபாயத்தை விலக்கி முதுகின்கண் வளைத்துப் பசித்துமூங்கிலைத் தின்றற்கு முயலும் யானையையொப்பத்தலையுங் காலுமாகிய இரண்டிடமும் முறிய மோதி அக்களத்தின்கட்புக்க அம்மல்லனை எதிர்ந்துநின்று கொன்ற நிலையை,கண்டால் 3 உவப்பினும் உவவானாயினும், இவன்தந்தையாகிய வெல்லும் போரினையுடைய பொருதற்கரியதித்தன் காண்பானாக - எ - று.
என்றது, தந்தையுடன் வெறுத்துப்போந்தான் அமருட்புகுந்து இப்போர் செய்தானை அவன் விரும்பின் உவக்கின்றான்;விரும்பாவிடின் அஞ்சுகின்றா னென்பதாம்.

‘பணைமுயலும் யானைபோல வொருதலையொசிய வொற்றி’ என்று பாடமோதி, அம்மல்லன்முற்கூறாயினும் பிற்கூறாயினும் ஒருதலை முறிய மோதியென்றுஉரைப்பாரும் உளர்.

தில்: விழைவின்கண் வந்தது.


(கு - ரை.) 1. ஆங்கண் - அவ்விடம்,இன்கடுங்கள்; நற். 10 : 5; குறுந். 298 : 5; அகநா.76 : 3, 137 : 6.

2. மதவென்பது வலியென்பதை விசேடித்தஉரிச்சொல். மதவலி: முருகு. 232.

3-4. ஒதுங்கின்று - ஒதுங்கிற்று;இவையிரண்டும் எச்சப் பொருளவாய் நின்றன. தார்-முன்படை.

5. நல்கல் - உவத்தல்; “நறுமலர்க்கோதாய் நல்கினை கேளாய்” (மணி. 12 : 56)

6. தித்தன் - உறையூரிலிருந்த ஒருசோழன்’ புறநா. 352 : 9 - 10, 395 : 18 - 9; “நொச்சிவேலித் தித்த னுறந்தை” (அகநா. 122 : 21)

7. புறநா. 73 : 9-11, குறிப்புரை.

9. கடந்தடுதல் : புறநா. 8 : 5, 23 :16, 40 : 2, குறிப்புரை; கலித். 101 : 31, 105 : 1; பரி.15 : 45.

மு. மல்வென்றிக்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 16, இளம்; சூ. 20, ந.


1 புறநா. 274 : சீவக. 2259, ந.

2 இவன் பெயர் இப்பாட்டின் முதலிரண்டடிகளிற்காணப்படுகிறது.

3 “நல்கியா ணல்கியவை” (கலித்.138 : 13) என்ற இடத்து, என்னாலே காமிக்கப்பட்டவள்எனக்குக் காதலித்துத் தந்தவை’ எனப் பொருளெழுதுவர்நச்சினார்க்கினியர்.