181
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்க ணெயிற்றி காதன் மகனொடு
கான விரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும் புடுத்த வன்புல விருக்கைப்
5புலாஅ வம்பிற் போரருங் கடிமிளை
வலாஅ ரோனே வாய்வாட் பண்ணன்
உண்ணா வறுங்கடும் புய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே சென்றவன்
பகைப்புலம் படரா வளவைநின்
10பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.

(பி - ம்.) 5 ‘புலாஅ லம்பிற்’

திணையும் துறையும் அவை.

வல்லார்கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச்சிறுகருந் தும்பியார் பாடியது.

(இ - ள்.) மன்றத்தின்கண்ணேநிற்கப்பட்ட விளாவினது மனையிடத்து வீழ்ந்தவிளாம்பழத்தைக் கரிய கண்ணையுடைய மறத்தி காதன்மகனுடனே காட்டுவாழுங் கரிய பிடியினது கன்றுவந்துஎடுக்கும் பெரிய அரண்சூழ்ந்த வலிய நிலத்தின்கண்ஊராகிய இருப்பையும் புலால்நாறும் அம்பினையும் பொருதற்கரியகாவற்காட்டினையுமுடைய வலாரென்கிற ஊரிடத்தான்,வாய்த்தவாளையுடைய பண்ணன்; நினது உண்ணப் பெறாதவறிய சுற்றம் உண்டு பிழைத்தல் வேண்டுவையாயின்,நீ இப்பொழுதே செல்வாயாக; போய் அவன் வேற்றுப்புலத்துச்செல்லாத எல்லையில் நினது பசிக்குப் பகையாகியபரிசிலை நினது வறுமையைக் காட்டினையாய்க் கொள்ளுதற்கு-எ- று.

‘அம்பிற் போரருங்கடிமிளை’ என்பதற்குஅம்பாற் பொருதற்கரிய கடிமிளையெனினும் அமையும்.

காட்டிப் பரிசில் கொள்ளுதற்குஇன்னே சென்மதியெனக்கூட்டுக.

மதி : முன்னிலை விளக்கும் அசை.


(கு - ரை.) 1. வெள்ளில் - விளாமரம்;இங்கே பழமென்னும் மாத்திரையாய் நின்றது. மன்றமரம்: புறநா. 76, 371, 374.

4. புறநா. 21 : 6; “வன்புலக்காட்டுநாட் டதுவே” (நற். 59)

1 - 4. யானையின் கன்றும் குறத்திமகனும்: “முழந்தா ளிரும் பிடிக் கயந்தலைக் குழவி,நறவுமலி பாக்கத்துக் குறமக ளீன்ற, குறியிறைப்புதல்வரொடு மறுவந் தோடி” (குறுந். 394 : 1 - 3)

5. புலாவம்பு : “புலவுநுனைப் பகழி”(பெரும்பாண். 269); “புலவுக்கணை” (பு. வெ.10); (பு. வெ. 240) போரருங்கடிமிளை : “கடிமிளைக்குண்டுகிடங்கி, னெடுமதி னிரைஞாயி, லம்புடை யாரெயில்”(பதிற். 20 : 17 - 9); “அருங்குழுமிளை” (மதுரைக்.64)

6. புறநா. 180 : 7.

7 - 8. “பாசம், பசிப்ப மடியைக்கொளலும்” (திரி. 20)

9 - 10. புறநா. 139 : 14 - 5.

(181)